பல்வேறு அறிவியல் முன்னேற்றங்களை கண்டு வரும் இவ்வுலகில் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், தீயசெயல்களில் ஈடுபடுபவர்களை உத்தமர்களாகவும் பார்க்கப்படலாம் என்ற கற்பனையை காமெடியாக சொல்வதே இந்த ‘வாஸ்கோடகாமா.’
நல்லது செய்தால் கைது செய்து வாஸ்கோடகாமா என்ற சிறையில் அடைக்கும் காவல்துறை, கெட்டது செய்பவர்களை விடுதலை செய்கிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட சமூகத்தில் தொடர்ந்து நல்லவனாகவே பயணிக்கும் நாயகன் நகுலும், கெட்டவராக இருந்து விட்டு வாஸ்கோடகாமா சிறைக்குள் நுழைவதற்காக நல்லவராக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவும் கைதிகளாக சிறைக்குள் செல்கிறார்கள்.
சிறையில் உள்ள நல்லவர்களுக்கும் அவர்களை கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் கொண்ட அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தைக் கலகலப்பான நகைச்சுவை பின்னணியில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். திரையில் இதுவரை இல்லாத இந்த புதிய முயற்சிக்கு முதலில் ஒரு ஷொட்டு.
சாக்லேட் பாயாக அறியப்பட்ட நகுல் இதில் நல்லவர் போலவும் முரட்டுத் தோற்றத்திலும் வருகிறார். சிறைக்கு வெளியே அவருக்கு வாசுதேவன் என்பது பெயர். உள்ளே சென்றதும் ஜாக் ஆகிறார்.
அழகான தோற்றம் அப்பாவித்தனமான சிரிப்பு என்று லட்சணா பாத்திரத்தில் வரும் நாயகி அர்த்தனா பினு போதிய வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்டு வருவார்.
அதேபோல் எதிர்மறை நிழல் படிந்த கோவர்த்தன் பாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா வருகிறார். சாமியார் வேடத்தில் இவரது வில்லத்தனம் ஓ.கே. .
படத்தின் முதல் பாதியில் அசட்டுத்தனமான காட்சிகளால் நெளிய வைப்பவர்கள், இரண்டாம் பாதியில் நம்மை உற்சாகத்துக்குள்ளாக்கி விடுகிறார்கள்.
இதே கதையை மிகவும் சீரியஸாகவும் எடுத்திருக்கலாம் .அதிரடி நகைச்சுவையாகவும் மாற்றி இருக்கலாம் . இயக்குநர் ஆர்ஜிகே. இரண்டுக்கும் அப்பாற்பட்டு காட்சிப்படுத்தி புதுவிதமாய் தந்திருக்கிறார்.
படத்தின் பட்ஜெட்டுக்கும் கதைக்கு ஏற்ற சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் அருணின் இசையும் அமைந்துள்ளதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. இயக்குநர் தான் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்த . அதன் மூலம் தனது போதாமையை உணர வைத்துள்ளார்.
எந்த லாஜிக்கும் பார்க்காமல் காமெடி என்ற மேஜிக்கை நம்பி செல்பவர்களை இந்த வாஸ்கோடகாமா ஏமாற்ற மாட்டார்.
