அண்ணன் வேல.ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் பகை வளர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். இவர்களைப் போல் இவர்களது பிள்ளைகளும் பகை உணர்வோடு இருக்க, இந்த நிலையை மாற்ற வேல ராமமூர்த்தியின் இளைய மகன் நாயகன் சுரேஷ் நந்தா முயற்சி மேற்கொள்கிறார். அவரது முயற்சியினால் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா?, அவர்கள் பிரிந்தது ஏன்? என்பதை மனதுக்கு நெருக்கமாக சொல்வதே ‘வீராயி மக்கள்’.
வேல ராமமூர்த்தி பாசக்கார அண்ணனாக ‘பளிச்.’ தம்பியாக வரும் மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, கதையின் நாயகனாக அளவான நடிப்பில் கவர்கிறார். அத்தை மகளுடனான காதல் காட்சிகளில் அந்த நளினமான அணுகுமுறையில் சுலபத்தில் பாசாகி விடுபவர், அண்ணனை காப்பாற்றுவதற்காக அடிதடியில் இறங்கி ஆக்ஷனிலும் ஒரு கை பார்க்கிற இடம் மாஸ்.

நாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிராமத்து நாயகியாக வசீகரிக்கிறார். அண்ணன்களின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக தீபா சங்கர் கண்கலங்க வைக்கிறார்.
மாரிமுத்துவின் மனைவியாக வரும் செந்தி குமாரிக்கு வில்லத்தலைவி என்று பட்டமே கொடுக்கலாம். கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது என்பதில் அவரது நடிப்பும் உடல்மொழியும் ‘அட்டா’ ரகம்.
வேல.ராமமூர்த்தியின் மனைவியாக ரமா, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா கிராமத்து மண்ணின் மைந்தர்களாக மனதில் பதிகிறார்கள்.
தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்கள் ரசனை. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா, உறவுகளின் பிரிவும் அதனால் ஏற்படும் வலியும் எத்தகையது என்பதை இதயம் வலிக்க வலிக்க சொல்லி இருக்கிறார்.