ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் கவுரவ் காளை, சிறந்த கால் பந்தாட்ட வீரர். அதே பள்ளியில் புதிதாக சேரும் மாணவர் பிரவீன் கிஷோரை அடிக்கடி சீண்டும் கவுரவ் அவருடன் நட்பு பாராட்டவும் விரும்புகிறார். ஆனால், இதை புரிந்துகொள்ளாத பிரவீன் கிஷோர் அவரிடம் இருந்து விலகியே இருக்கிறார்.
இந்நிலையில் ஒருமுறை மாணவர்கள் பயணிக்கும் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து, பிரவீன் கிஷோரை காப்பாற்றும் முயற்சியில் கவுரவ் உயிரிழந்து போக…

கவுரவ்வின் இறப்புக்கு பிறகே அவர் தன்னுடன் நட்பு பாராட்ட விரும்பியதை அறிந்து கொள்ளும் பிரவீன் கிஷோர், தனக்கே உரித்தான குற்ற உணர்ச்சியில் மூழ்கி, கவுரவ்வின் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்.
கவுரவ் காளையின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்து புதிய வாழ்க்கையை தொடங்கும் எஸ்தர் அனில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது எதிர்கால ஆசைகளை நிறைவேற்றும் எண்ணத்தில் அவர் படித்த ஊட்டி பள்ளியில் சேருகிறார். அங்கு குற்ற உணர்ச்சியால் தனக்கே தெரியாமல் கவுரவ் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் பிரவீன் கிஷோரின் நிலையை கண்டு அதிர்ச்சியடையும் எஸ்தர் அனில், அதில் இருந்து அவரை மீட்டெடுக்க பள்ளி பருவத்தையும் தாண்டிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த பயணம் எஸ்தர் அனிலுக்கு வெற்றிப் பயணமாக முடிந்ததா? என்பதே இந்த ‘மின்மினி’.

நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார் இயக்குநர் ஹலிதா சமீம். படத்தில் இது புதிய விஷயம் என்றாலும், இத்தகைய முயற்சி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது.
சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர், பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் மூன்று பேரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கதை சொல்லும் முறை, தொழில்நுட்ப ரீதியாக படத்தை உருவாக்கிய விதம் ஆகியவற்றுக்காக இயக்குநர் ஹலிதா சமீம் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது காட்சிகளில் தெரிகிறது. அதை ரசிகர்கள் மெச்சும் விதத்தில் சொல்லவில்லை என்பது தான் இந்த மின்மினிக்கான ‘மினி’ ஸ்டேட்மெண்ட்.
