என்ன விலை? -திரைப்பட விமர்சனம்

அரசு இயந்திரத்தின் தவறான நடவடிக்கையால் அவமானப்படும் நாயகன், அரசால் போக்கடிக்கப்பட்ட தனது மானத்துக்கு ஒரு விலை கேட்கிறார்.  தனி ஒரு மனிதனின் போன மானத்தை மீட்டு தர அரசு என்ன செய்தது என்பது கதைக்களம்.

கொஞ்சம் விரிவாக கதைக்குள் வருவோம்.

ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் போடும் காணிக்கையை கடலுக்குள் மூழ்கி எடுத்து குடும்பம் நடத்தும் சிலரில் தவசிமுத்துவும் ஒருவர். ஒரு நாள் இந்த கடல் தேடலில் முத்துக்கள் பதித்த பதக்கம் ஒன்று கிடைக்க, அதை தனக்குத் தெரிந்த காவல் அதிகாரி ஒருவரிடம் காட்டுகிறார். அந்தப் பதக்கம் விலைமதிப்பில்லாதது என்பதை புரிந்து கொள்ளும் அந்த அதிகாரி, பதக்கத்தின் மேல் உள்ள நீலக்கல் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அவரிடமே அந்த பதக்கத்தை திரும்ப கொடுக்கிறார். அதே வேகத்தில் அந்த நீலக்கல்லை விற்று 5 லட்சம் காசும் பார்த்து விடுகிறார்.

இங்கே வீட்டுக்கு வந்த தவசிமுத்து அந்தப் பதக்கத்தை மனைவியிடம் காட்ட, மனைவியோ, இது விலை மதிப்பு இல்லாதது. கடலில் கிடைத்ததை அரசுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று கணவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கிறாள்.

இப்போது அந்தப் பதக்கம் மொத்தத்தையும் ஆட்டை போட நினைக்கும் அதே போலீஸ் அதிகாரி, தவசிமுத்து மேல் திருட்டு பட்டம் கட்டி லாக்கப்பில் தள்ளுகிறார். திருடிய பொருளை விற்கப் போன இடத்தில் காவல்துறை பிடித்து கைதானதாக எஃப் ஐ ஆர் போடுகிறார்கள்.

அந்த அப்பாவி குடும்பத்துக்கு உதவ காஞ்சனா என்ற பெண் வக்கீல் வருகிறார். வாதாடுகிறார். தவசி முத்து அந்த பதக்கத்தை திருடவில்லை என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்.

கடலுக்குள் கிடைத்த பதக்கத்தை எடுத்து நேர்மையாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த தவசி முத்து, தனக்கு கிடைத்த திருட்டு பட்டத்தால் குடும்பத்துடன் பாதிக்கப்படுகிறார்.

திருடவில்லை என்று நிரூபணம் ஆனதால், அதுவரை திருடனாக சித்தரிக்கப்பட்ட தவசிமுத்துவின் போன மானம் திரும்ப வருமா? அந்த மானத்துக்கு ஒரு விலை வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார் வழக்கறிஞர் காஞ்சனா.

இது விஷயத்தில் அரசு என்ன முடிவெடுத்தது? தவசி முத்துவின் போன மானம் திரும்ப வந்ததா என்பது தான் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கூடிய இந்த ‘என்ன விலை.’

இந்த கதைக்குள் அந்த விலைமதிப்பற்ற பதக்கம் எப்படி கடலுக்குள் வந்தது என்பதை உயிருக்கு உயிரான காதல் தம்பதிகளின் பின்னணியில் விவரித்து இருக்கிறார்கள்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் ஒரு சின்ன குடிசை, அதில் மனைவி, மகன், மகள் என சந்தோஷ வாழ்க்கை, பக்தர்கள் போட்ட காணிக்கையை கடலுக்குள் மூழ்கி எடுப்பதில் கிடைக்கும் சொற்ப வருமானம் என்று அந்த தவசி முத்து கேரக்டர் நடிகர் கருணாசுக்காகவே படைக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு படம் முழுக்க தவசி முத்துவாக வாழ்ந்திருக்கிறார். கடலுக்குள் பதக்கம் கிடைத்தபிறகு தன் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பின்னடைவுக்கும் அவரது ரியாக்ஷன்கள் ‘இதெல்லவா நடிப்பு’என்று சொல்ல வைக்கிறது. குறிப்பாக மீடியாக் களின் கேமராவுக்கு முகம் காட்ட பயந்து குடிசைக்குள் குடும்பத்துடன் போர்வைக்குள் மறைந்து கொள்ளும் இடத்தில் அந்த அவமான சூழலை நடிப்பால் நமக்குள்ளும் கடத்தி விடுகிறார். கருணாசின் மனைவியாக வரும் விஜயலட்சுமிக்கு தங்கள் குடிசைக்குள் அத்து மீறும் வீடியோ கேமரா மீது தண்ணீரை வாரி இறைக்கும் அந்த ஒரு காட்சி போதும்.

கருணாஸின் தங்கையாக சாஷா, அவள் காதலனாக பசங்க பாண்டி, வில்ல போலீசாக மோகன்ராம் ஆகியோ ரும் நடிப்பில் கவனம் பெறுகிறார்கள்.

கருணாசுக்கு ஆதரவாக வழக்காடும் வழக்கறிஞர் காஞ்சனா கேரக்டரில் நிமிஷா சஜயன் ஸ்பெஷல் கவனம் பெறுகிறார். குறிப்பாக இவரது அந்த கரிய பெரிய கண்களே பாதி நடிப்பை பேசி விடுகிறது.
கௌரவ தோற் றத்தில் வந்து தன் நடிப்புக்கு கௌரவம் செய்து போகிறார் ஒய்.ஜி. மகேந்திரன். சித்தா தர்ஷன் பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், கவிதாலயா கிருஷ்ணன், சுவாமிநாதன் என நட்சத்திரக் கூட்டம் அதிகம். ஒரு காட்சி என்றாலும் இன்ப அதிர்ச்சியாக பிரபு.
சாம் சி.எஸ்.இசையில் பின்னணி இசை காட்சிகளின் வீரியத்தை ஆழமாய் நமக்குள் கடத்தி விடுகிறது.

ஆல்பி ஆண்டனியின் கேமரா கோர்ட் காட்சிகளில் விசேஷ கவனம் செலுத்தி இருக்கிறது.

சஜீவ் பழூர் எழுதி இயக்கி இருக்கிறார். பாமரனுக்கும் மானம் என்பது உயிரினும் மேலானது என்ற
கதைக் களத்தில் காட்சிகளை வேகம் குறையாமல் மெருகேற்றி இருக்கிறார், அழகாகவே.

ஒரு அப்பாவி மனிதனை அடப்பாவி மனிதனாக சித்தரித்து கோர்ட் கூண்டில் ஏற்றும் காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் செம சூடு கொடுத்திருக்கிறார்.

பிளஸ்: தெளிவான நீரோடை போன்ற கதையின் போக்கு.

பிளாஷ்:
கிராமத்து மனிதர்களின் எதார்த்த வாழ்க்கை சொல்லப்பட்ட விதம்.

ரேட்டிங்: 7.2/10.