தங்கலான் திரை விமர்சனம்

தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை ஒரு ஃபேன்டசி படைப்பாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். தமிழ்த்திரையில் இது ஒரு கொண்டாடப்பட வேண்டிய பொக்கிஷம்.

கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரம்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் எனதானுண்டு தன் உழைப்புண்டு என நிம்மதியாக வாழ்ந்து வரும் தங்கலானுக்கு அந்த நிம்மதி நீடிக்கவில்லை. ஊரில் உள்ள ஜமீன்தாரால் இருந்த கொஞ்ச நிலமும் பறி போகிறது.

இந்நிலையில், தங்கலானின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் தங்கம் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தன்னுடைய கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறான், தங்கலான். செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன , தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் கதைக்களம்.

தங்கலானாக விக்ரம். இவர் தான் விக்ரம் என்று சொன்னால்தான் புரியும். அந்த அளவுக்கு தங்கலானாகவே படமெங்கும் வியாபிக்கிறார். ‘இது நடிப்பல்ல, நிஜம்.. என்பதா…அல்லது இது தான் நடிப்பு என்பதா?’ என்று இவர் வரும் காட்சிகளில் நம் வியப்பின் விகிதம் கூடிக்கொண்டே போகிறது. மனைவி பார்வதியுடனான இவரது அந்த காதல் அன்யோன்யம், அடடா அழகு. சூனியக்காரியை எதிர்த்து போரிடும் காட்சிகளில் அந்த பூர்வக்குடிமகன் தான் தெரிகிறார். கேரக்டருக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் இந்த வித்தை விக்ரம் போன்றவர்களுக்கு நிஜமாகவே வரம். விக்ரமுக்கு ஆஸ்கார் கதவுகள் வரை திறக்க காத்திருக்கு.

விக்ரமுடன் சேர்ந்து பார்வதி மற்றும் பசுபதிக்கும் விருதுகள் நிச்சயம். காவல் தெய்வமாக நடித்திருக்கும் மாளவிகா மோகனின் காட்சிகள் சிலிர்ப்பு மயம். வெள்ளைக்கார துரையாக நடித்திருக்கும் நடிகர் டேனி அளந்தெடுத்த நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வேறு லெவல். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் தங்க வயல் சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்களை கவ்வுகிறது. மெச்சத்தகுந்த இன்னொருவர் கலை இயக்கம் தந்த மூர்த்தி. அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி தங்கலானுக்கு கிடைத்த தங்கம் என்று நிரூபித்து இருக்கிறார்.

படத்தின் முதல் பாதி பூர்வக்குடி மக்களின் வலியையும், வேதனையையும் கலந்த வாழ்க்கை முறையை மிக ஜனரஞ்சகமாகவும், நேர்த்தியாகவும் படம் பிடித்து ரசிக்க வைத்த இயக்குநர் பா.ரஞ்சித், இரண்டாம் பாதியில் தங்க வேட்டையை மையப்படுத்தி பரபரப்பு கூட்டுகிறார். இரண்டாம்பாதியில் சில காட்சிகள் ரிபீட் ஆவதை தவிர்த்திருக்கலாம்.

தங்கலான், தங்கத்தில் வைரம்.