தி கோட் திரை விமர்சனம்

பயங்கரவாத தடுப்பு உளவுத்துறை அதிகாரியான விஜய், தன் குழுவினரான பிரசாந்த், பிரதேவா, அஜ்மல் ஆகியோருடன் கென்யா சென்று யுரேனியத்தை கடத்தும் பயங்கரவாத கூட்டத்தை மடக்குகிறார். இந்த தாக்குதலில் மோகனின் குடும்பம் எரிந்து சாம்பலாக, மோகன் மட்டும் தப்பிக்கிறார்.

இப்போது வில்லன் முறை. நாயகனை பழிவாங்க காத்திருக்கிறான்.அதற்கு தோதாய் அமைகிறது நாயகனின் தாய்லாந்து பயணம். கர்ப்பிணி மனைவி சிநேகா, குட்டி மகனுடன் தாய்லாந்து போகும் விஜய் வில்லன் போட்ட ஸ்கெட்ச்சில் சிக்குகிறார். இதில் மகன் பறி போகிறான்.

இருபது ஆண்டு கால இடைவெளியில் ரஷ்யா செல்லும் விஜய் அங்கு இறந்து போனதாக நினைத்த தனது மகனை சந்திக்கிறார். மகனுடன் நாடு திரும்புகிறார் விஜய்.

அதற்கு பின் தந்தை விஜய் சந்திக்கும் பிரச்சினைகள் எல்லாமே அவர் எதிர்பாராதது. அவரது டீம் லீடர் கொல்லப்படுகிறார். இன்னொரு நண்பனின் உயிரும் போகிறது. தனது திட்டங்களை முறியடிக்கும் பின்னணியில் இருப்பது யார்? அதன் பின்னணியில் இருப்பது யார்? அடுததடுத்த இழப்புக்களை எற்படுத்தும் பின்னணியில் இரப்பது யார்என்று தெரிய வரும்போது எதர்பார்த்த, ஆனால் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

நேர்மையான அப்பா, நரித்தன மகன் என இரண்டு வேடங்களிலும் விஜய்யின் நடிப்பில் புதுப்பாய்ச்சல். தெறிக்கும் நடனம் அடிதடியில் இடி என ரசிகர்களுக்கு அவர் படைத்திருப்பது படையல் விருந்து. மகனை இழந்ததை மனைவி சிநேகாவிடம் சொல்லும் இடத்தில் விஜய் சிநேகாவோடு சேர்ந்து நம் கண்களும் குளமாகிப் போகிறது. இளைஞனாக மகனை பார்த்த இடத்தில் அந்த அப்பாவின் பரிதவிப்பை நமக்கும் கடத்தி விடுகிறார்.

நண்பர்களின் பிரசாந்துக்கு சற்று கனமான வேடம். அதை நடிப்பில் சுமந்து இருக்கிறார். மோகன் வித்தியாசமான வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல் ஆகியோர் பொருத்தமான பாத்திரச் சேர்க்கையில் பரிமளிக்கின்றனர்.

நாயகியாக மீனாட்சி சவுத்ரி. மரண பயத்தை கண்களில் காட்டும் அந்த நடிப்பில் நடிப்பு கொட்டுகிறது. அப்பா விஜய்யின் மனைவியாக சிநேகா. பல இடங்களில் சந்தேகத்தில் விஜய்யை பாடாய்ப்படுத்தினாலும் நடிப்பு படுத்தவில்லை. பிரேம்ஜி, யோகி பாபு சிரிக்க வைக்கிறார்கள்.

ஒரு பாட்டுக்கு திரிஷா, ஒரு காட்சிக்கு சிவகார்த்திகேயன் என வந்து போகிற கூட்டமும் உண்டு.

ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் வரும் விஜயகாந்த் ரசிகனுக்கு திடீர் பரவசம் ஊட்டிப் போகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் ‘மட்ட’ உள்ளிட்ட பாடல்கள் தாளமிட வைக்கிறது. பின்னணி இசை படத்தின் இன்னொரு ஜீவன்.

யூகிக்கும்படியான காட்சிகள், லாஜிக் மீறல்கள், அதிக நீளம் படத்தின் பலவீனம். ம் இயக்கிய வெங்கட்பிரபு, மூன்று மணி நேரமும் ட்விஸ்ட்டுகளால் திணறடித்தாலும் கிளைமாக்சில் பக்குவமாக கரை சேர்ந்து விடுகிறார்.

கோட், வெற்றிக் கோட்டை.