குமார சம்பவம் –திரை விமர்சனம்

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கு அந்த முயற்சி கைகூடி வரும் நேரத்தில் ஒரு சோதனை. தாத்தாவின் நண்பராக அந்த வீட்டில் பல வருடம் இருந்து வரும் சமூக சேவகர் திடீர் மரணம் அடைகிறார்.அது கொலையாக இருக்கலாம் என்று நினைக்கும் காவல் துறையின் பார்வை நாயகன் பக்கம் திரும்புகிறது.. அதிலிருந்து தப்ப நாயகன் அந்த சமூக சேவகரின் விரோதிகள் யார்? அவர்களில் யார் அவரை கொல்லும் அளவுக்கு போயிருப்பார்கள்? என்ற கோணத்தில் தானே ஆள் வைத்து துப்பறிகிறார். இந்த முயற்சியில் அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா?அவர் நினைத்தபடி இயக்குநர் ஆனாரா? கேள்விகளுக்கான விடையே கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத குமார சம்பவம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற குமரன் இந்தப் படம் மூலம் வெள்ளித்திரை நாயகன் ஆகி இருக்கிறார். இயக்குநராகும் கனவில் தயாரிப்பாளர்களை தேடிப் பிடித்து கதை சொல்லும் காட்சிகளில் மிகை இல்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார். கொலையாளியை கண்டுபிடிக்க ஆள் வைத்து விசாரிக்கும் இடங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு உத்தரவாதம்.

நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணா ஆளும் அழகு. நடிப்பும் அழகு.. சமூக சேவகராக
குமரவேல் வருகிறார். இவரது சமூக போராட்டங்கள் அத்தனையும் கனமானவை என்பதால் அவரது நடிப்பும் அதற்கேற்ப கனமாகவே இருக்கிறது.

தயாரிப்பாளராக வரும் லிவிங்ஸ்டன், நாயகனின் நண்பனாக வரும் பாலசரவணன், மாமாவாக வரும் வினோத் முன்னா, தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார், டூப்ளிகேட் சிபிஐ அதிகாரியாக வினோத் சாகர், காவல்துறை அதிகாரி சிவா ஆனந்த், போலீஸ்காரர் டெலிபோன் ராஜ் ஆகியோரும் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்குத் தக்க நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அத்தனையும் சுக ராகம். பின்னணி இசையிலும் முன்னணி.

எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால். சமூக சேவகரின் மரணம் என்றதும் கதை சீரியசாக போகப்போகிறது என்றுதானே தோன்றும்.அதுதான் இல்லை, அப்படியே நகைச்சுவைக்கு தாவி விடுகிறது. தாத்தா ஜி எம் குமாருக்கும் பேரன் குமரனுக்குமான அன் யோன்ய அன்பு வெளிப்படும் இடத்திலும், சமூக சேவகரின் பிளாஷ்பேக் வெளிப்படும் இடத்திலும் ‘உள்ளேன் ஐயா’ என்று ஆஜர் ஆகி விடுகிறார் இயக்குனர். அந்த வகையில் இது சரித்திரம் படைக்கும் சம்பவம்.