மிராய் — திரை விமர்சனம்

கலிங்கப் போருக்குப் பின் பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார்.

இந்த புத்தகங்களை தீய சக்திகள் கவர்ந்து சென்று விடாமல் தடுக்க காவலுக்கு 9 வீரர்களையும் நியமிக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களையும் கைப்பற்ற முயற்சிக்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களம் இறங்குகிறார். தீய சக்தியை தெய்வ சக்தி கொண்டு கொண்டு வெல்கிறார். அது எப்படி என்பதை உச்சகட்ட பிரம்மாண்டத்தில் பிரம்மிக்கத்தக்க கிராபிக்ஸ் உபயங்களுடன் திரைக்கு தந்திருக்கிறார்கள்.

நாயகன் தேஜா சஜ்ஜா, ஹனுமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப்படம் மூலம் இன்னொரு பிரமாண்ட வெற்றியை பெற்று இருக்கிறார். அனாதையாய் கிடைத்ததை உண்டு தற்போது இளமை பருவத்தை தொட்டு இருக்கும் நாயகன், தனது பிறப்பின் நோக்கம் தெரிந்து தன்னிடம் இருக்கும் மிராயின் சக்தி மூலம் எதிரியை துவம்சம் செய்ய புறப்படும் இடம் வரை நிஜமாகவே நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று உலகத்தை ஆளும் தனது எண்ணத்தை தனது ஆக்ரோஷ நடிப்பு மூலம் நமக்குள் கடத்துகிறார். ஒன்பதாவது புத்தகத்தையும் வசப்படுத்தினால், தானே கடவுள் என்ற தனது அகந்தை சிந்தனையை உடல் மொழியிலும் வெளிப்படுத்துவது இவர் நடிப்பில் தனி அழகு.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு கொடுத்த பாத்திரங்களை நடிப்பால் சிறப்பிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்களும், பின்னணி இசையும் இந்த கதைக்கு கூடுதல் பிரமாண்டம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா திகட்ட திகட்ட காட்சிகளை படம் பிடித்திருக்கிறது.
கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் கைவண்ணம் படம் முழுவதும் பிரமிப்பை அள்ளித் தெளிக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை காணக் கண் கோடி வேண்டும். கலை இயக்குனரும் கிராபிக்ஸ் கலைஞர்களும் இணைந்து கைகோர்த்து அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்கள். அந்த பிரம்மாண்ட கருடன் தரையில் கால் வைக்கும் போது தரையில் மட்டுமல்ல, நமக்குள்ளும் அதிர்வு.

எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் கட்டம்னேனி, நல்லவனை தெய்வ சக்தி காப்பாற்றும் இந்த கருத்தை உச்சகட்ட பிரம்மாண்டத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘மிராய்’ ஆன்மீக வடிவில் ஒரு அட்சய பாத்திரம்.