கிறித்துவ மத பெண் துறவியை மையமாக வைத்து ஒரு சர்ச்சைக்குரிய
கதை.
சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக வருகிறார். துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி உறவு வாழ்க்கைக்குள் நுழைய விரும்புகிறார். தன் விருப்பத்தை தாயிடம் சொல்லும் போது, அவரோ ஆத்திரமாகி மகளை வீட்டை விட்டே துரத்துகிறார். அதனால்
வெளியூரில் வேலை பார்த்தபடி ஹாஸ்டலில் தங்கி இருக்கும் தன் ஒன்று விட்ட சகோதரியை பார்க்க வருகிறார்.அங்கே
தங்கையும் இன்னொரு தோழியும் ஆளுக்கு ஒரு ஆண் துணையை தேர்ந்தெடுத்து லிவிங் டுகெதராக வாழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி துறவி தன் தங்கையிடம் அதிர்ச்சியுடன் கேட்க…
அவளோ சர்வ சாதாரணமாக, ‘ இதெல்லாம் இப்ப சகஜம். ஒன்றாக வேலை பார்க்கிறோம். அப்படியே ஒன்றாக தங்கி இருந்து பிடித்த வாழ்க்கையை வாழ்கிறோம். ஒருவேளை எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தால் பிரிந்து விடுவோம்’ என்று சொல்ல, தூக்கி வாரிப் போடுகிறது துறவிக்கு.
பெண் துறவியும் இயல்பான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நிலையில், கட்டாயமாக அவருக்கு குடும்பத்தினரால் துறவி அடையாளம் கொடுக்கப்பட்டு
விடுகிறது.
இப்போது தங்கை வாழும் வாழ்க்கையை பார்த்த பிறகு துறவிக்குள்ளும் சராசரி பெண்ணின் வாழ்க்கையை வாழ ஆசை வருகிறது.
இந்த ஆசையை துறவியின் தங்கையுடன் சேர்ந்து வாழும் அவள் காதலன் புரிந்துகொண்டு சராசரி வாழ்க்கைக்கு அவளை தயார் செய்கிறான்.
இரவில் தன் காதலனுடன் துறவி நெருக்கமாக இருப்பதை பார்த்த துறவியின் தங்கை என்ன முடிவெடுக்கிறாள்?, இயல்பு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட பெண்ணின் துறவு வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்பது கதை.
துறவியாக வரும் சாய்ஸ்ரீ பிரபாகரன்.
சர்ச்சைக்குரிய வகையில் தனது பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதில் நேர்த்தியாக நடித்து இருக்கிறார்.
சாய்ஸ்ரீ பிரபாகரனின் தங்கையாக வரும் சிந்து குமரேசன் அவருடைய காதலராக வரும் விக்னேஷ் ரவி, அவரின் அம்மாவாக வருபவர் உட்பட
தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
சராசரி வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இளம் கன்னியாஸ்திரியை கடவுளிடமிருந்து பிரித்து லூசிபர் உள்ளிட்ட சாத்தான்கள் வசம் மடை மாற்றம் செய்யும் வேடத்தில் பாவெல் நவகீதன் வந்து போகிறார்.
அரவிந்த் கோபால கிருஷ்ணன், பரத் சுதர்ஷன் இசையமைத்திருக்கிறார்கள்.
ஹரி கே.சுதன் எழுதி இயக்கியிருக்கிறார்.ஒரு பெண் துறவியின் உண்மையான உணர்வை சொல்கிறேன் என்று தொடங்கியவர், அதற்கு முடிவு சொல்லாமல் உரிய தீர்வு சொல்லாமல் கிறிஸ்தவ மதத்தின் மீது கல்லெறியும் வேலையை செய்திருக்கிறார். துறவிகள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்கிற தவறான கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். வேதாகமத்தில் கடவுளால் சாத்தான் என்று அடையாளம் காட்டப்பட்ட லூசிபர் போன்றவர்களை கடவுள் அவதாரமாக காட்டும் காட்சிகளை தணிக்கைக் குழு எப்படி அனுமதித்தது?