இறுதி முயற்சி — திரை விமர்சனம்

கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரான ரஞ்சித், கடையை விருத்தி செய்வதற்காகவும் மகனின் ஆபரேஷனுக்காகவும் கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும். தாமதமானால் உங்கள் வீட்டுப் பெண்களை தூக்கி விடுவோம் என்கிறது கந்துவட்டி கும்பல். மேற்கொண்டு முதலீடு இல்லாமல் ஜவுளிக்கடையை மூட வேண்டியதாகிறது.
வாங்கிய கடனை திருப்பி கட்ட நண்பர்களின் உதவியை நாடுகிறார் ரஞ்சித். ஆனால் அவமானமே மிஞ்சுகிறது

பணமும் வரவில்லை… வட்டியும் வரவில்லை என்ற நிலையில், ரஞ்சித் குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறார்கள், கந்து வட்டி கும்பலின் அடியாட்கள் .
ஒரு கட்டத்தில் ரஞ்சித் குடும்பத்தில் இருந்து பணம் பெயராது என்பது தெரிந்ததும் ரஞ்சித்தின் மனைவியையும் மகளையும் கடத்தி போய் விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.
இதன்பிறகும் வாழ வேண்டுமா என்ற கேள்வி ரஞ்சித்துக்குள் எழுகிறது. மனைவியிடம் கலந்து பேசி இரு குழந்தைகளோடு சேர்ந்து நால்வரும் விஷம் கலந்த பாலை அருந்துகிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? கந்து வட்டி கும்பலி ன் அராஜகத்திற்கு முடிவு வந்ததா? என்பது கதை.
இதற்கிடையே, சென்னையில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவன், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருக்கிறான். அவன் என்னவானான் என்பதற்கான விடை யும் கிளைமாக்சில்.
நாயகனாக ரஞ்சித். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் அந்த நடிப்பும் உடல் மொழியும் இப்போதும் பிரஷ்ஷாகவே இருக்கிறது. கடன் பிரச்சனையால் நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தை உணர்ந்து செய் திருக்கிறார். ஒரு பக்கம் கடனை அடைக்க பணம் புரட்ட முயற்சிப்பது, மறுபக்கம் குடும்பத்தின் நிலை எண்ணி கண்ணீர் வடிப்பது என்று காட்சிக்கு காட்சி வாழ்ந்து கெட்ட அந்த குடும்பத் தலைவனை கண் முன் கொண்டு வருகிறார்.
ரஞ்சித்தின் மனைவியாக வரும் மெஹாலி மீனாட்சி, பொருத்தமான பாத்திரத்தில் மனமெங்கும் ததும்பி வழிகிறார். கந்துவட்டி கும்பலால் எந்த நேரத்திலும் தனக்கும் மகளுக்கும் விபரீதம் நேருமோ என உள்ளூர கலங்கும் இடத்திலும் இவரது நடிப்பு ஆசம்.

ஈவிரக்கம் இல்லாத கந்துவட்டி தாதாவாக விட்டல் ராவ், அவரது தம்பியாக புதுப் பேட்டை சுரேஷ், குற்றவியல் ஆய்வாளராக கதிரவன், ரஞ்சித்தின் மகளாக மெளனிகா, மகனாக நீலேஷ் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
இசையமைப்பாளர் சுனில் லாசரின் பாடல்கள் இதயம் தொட, பின்னணி இசையோ ஆக்கிரமித்தே விடுகிறது இதயத்தை.
ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தி, எளிமையான கதையை காட்சிக் கேற்ப உயிரூட்டி இருக்கிறார்.

எழுதி இயக்கி இருக்கிறார் வெங்கட் ஜனா. பிரச்சனைக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வாகாது என்ப சோக ரசத்துடன் சொல்ல முயன்று இருக்கிறார். தீவிரவாதி தொடர்பான ட்விஸ்ட் சோக ராகத்தை சுகராகம் பாட வைத்து விடுகிறது கடன் பிரச்சனை எத்தகைய ஆபத்தானது என்பதையும் பார்வையாளர்களை உணர வைத்திருக்கிறார்.
எளிமையான கதை என்றாலும், திரைக்கதையில் வலிமை சேர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு கிளைக்கதையை முக்கிய கதையோடு சேர்த்து காட்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வடிவேல் விமல்ராஜ்.
எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் ஜனா, தற்போதைய காலக்கட்டங்களில் நகரில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கந்துவட்டி கொடுமைகளின் பின்னணியை தோலுரித்து காட்ட முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.