Bp 180 –திரை விமர்சனம்

அரசு மருத்துவமனை மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன், விபத்தில் இறந்த பெண்ணை உடற்கூராய்வு செய்கிறார். அப்போது திருமணமாகாத அந்த பெண்ணின் வயிற்றில் மூன்று மாத கரு இருப்பதை கண்டறிகிறார். அது பற்றிய மருத்துவ அறிக்கை அவர் எழுதும் போது தான் சிக்கல் வந்து மிரட்டலாய் எதிரில் நிற்கிறது. பெரிய குடும்பத்து பெண் என்பதால் வயிற்றில் உருவாகியிருந்த கரு பற்றி ரிப்போர்ட்டில் எழுத வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

உண்மையை உள்ளபடி எழுதுவதுதான் மனுதர்மம் என்கிற நாயகிக்கு அதன் பிறகு ஏகப்பட்ட மிரட்டல்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று ஆளாளுக்கு மிரட்டிப் பார்க்கிறார்கள். யாருடைய மிரட்டலுக்கும், உத்தரவுக்கும் அஞ்சி அடிபணியாமல் அவர் கொள்கையில் அவர் உறுதியாக நிற்க…

இறந்த பெண் அந்த ஏரியாவின் பயங்கரமான ரவுடி டேனியல் பாலாஜிக்கு உறவினர் என்பதால் அவரும் தன் பங்குக்கு மிரட்டுகிறார். உண்மையை எழுதினால் உயிரோடு இருக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்.

ஆனால் நாயகியோ, ‘நீ தைரியமான ஆம்பளையா இருந்தா நேரில் வாடா’ என்று சவால் விடுக்கிறார்.
இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி மருத்துவர் தன்யா ரவிச்சந்திரனை பழிவாங்க துடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது? நாயகிக்கு ரவுடி கும்பலால் விபரீதம் எதுவும் நேர்ந்ததா என்பது திகிலும் திருப்பமுமான திரைக்கதை.

நாயகியாக மருத்துவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில், தைரியமான பெண்ணாக தன்யா ரவிச்சந்திரன், அந்த பாத்திரத்திற்கு நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், தனது மருத்துவ பணியை நேர்மையாக செய்து முடிப்பதில் முனைப்பு காட்டுவதும், எதிரிகளின் மிரட்டல்களை அலட்சியமாக கடந்து போவதுமாய் அசத்தியிருக்கிறார்.

காசிமேடு ரவுடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, செய்யும் அடாவடிகள் ஓவராக இருப்பது தோன்றினாலும், தனது நடிப்பில் அந்த கேரக்டரை ரசிகனுக்கு மிக நெருக்கமாக கொண்டு வந்து விடுகிறார். யாராலும் வீழ்த்த முடியாத வீரன் என்ற மமதையில் திரியும் அவரின் எண்ணத்தை ஒரு பெண் அடித்து நொறுக்கும் போது, அவரது கோபத்தை பார்க்க வேண்டுமே… (நடிப்பு அசுரன் இப்போது நம்மிடம் இல்லையே என்கிற வேதனை இந்த நேரத்தில்) இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வாக அருள்தாஸ், காவல்துறை ஆணையராக தமிழ், சமூக ஆர்வலராக ஜாக் அருணாசலம், நாயகியின் தங்கையாக ஸ்வேதா டோரத்தி, சகோதரராக ரங்கா, தோழியாக நயனா பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் நடிப்பில் நிரம்பி வழிகிறார்கள். .

பாடல்கள் இல்லை என்ற போதிலும் பின்னணி இசை மூலம் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான், இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் மனநிலையை இசை மூலமாகவே வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

எழுதி இயக்கி இருக்கும் ஜெ.பி, அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இடையிலான மோதல், அதனால் ஏற்படும் விளைவுகளை தனது மேக்கிங் மூலம் மிரட்டலாய் தந்திருக் கிறார். கடற்கரையில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் காவல்துறை ஆணையரை வில்லன் கொல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும். என்றாலும் இந்த Bp, இயக்குனர் ஜேபிக்கு சினிமா நிச்சயம் ஒரு உயரம் கொடுக்கும்.