எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி சிறுகதையை திரையில் அங்கம்மாளாக
வார்த்திருக்கிறார்கள்.
பிடிவாத குணம் கொண்ட கிராமத்து அங்கம்மாள் திரை முழுக்க வியாபித்து நிற்கிறாள்.
அங்கம்மாளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனை பெரிதாக படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் இளைய மகனை டாக்டர் ஆக்கி விடுகிறாள்.
மூத்த மகன் மனைவி தென்றல். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி ஏழு வயதில் மகள் இருக்கிறாள்.
தாய் அங்கம்மாளும் லேசுப் பட்ட ஆள் இல்லை. மனதுக்கப்பட்டதை சரி என்று செய்கிற ஆள்.தப்பு என்று தெரிந்தால் முகத்தில் அடித்த மாதிரி பேசி விடுவாள். இதனால் மருமகளுக்குக் கூட அவள் சிம்ம சொப்பனம் தான்.
டிவிஎஸ். சேம்ப்பில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாளிடம் இளைய மகனுக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, அவன் அம்மா ஜாக்கெட் அணியாமல் இருப்பது தான்.
டாக்டருக்கு படித்த இளைய மகன் ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணைக் காதலிக்கிறான். அவர்கள் வேற்று மதமும் கூட. இருப்பினும் பெண் வீட்டார் சம்மதிக்கிறார்கள்.
இப்போது இளைய மகனின் ஒரே பிரச்சினை, இதுவரை ஜாக்கெட் அணியாத அம்மாவை எப்படியாவது தனது திருமணத்துக்குள் ஜாக்கெட் அணிய சம்மதிக்க வைக்க வேண்டும்.
தன் அம்மாவிடம் அவன் இது குறித்து பேசிய போது மகனுக்காக சம்மதிக்கிறாள். ஜாக்கெட் போட்டுக் கொள்கிறாள். ஆனாலும் அதை ஊர் வேறு விதமாகப் பார்க்க, அவள் மனம் மாறுகிறாள். ஜாக்கெட்டை தீயில் எரித்து விடுகிறாள். இதனால் மறுபடியும் விரக்திக்கு உள்ளாகும் இளைய மகன் இந்த ஜாக்கெட் பிரச்சினையால் கல்யாணம் நின்று விடுமோ என்று கவலைப்படுகிறான். இளைய மகன் மீது எப்போதும் அதிக பாசம் கொண்ட
அங்கம்மாள் இந்த ஜாக்கெட் விஷயத்தில் மகனுக்காக விட்டுக் கொடுத்தாளா என்பது மீதிக் கதை
‘உச்சிமலை காத்து உச்சாணிப்பூ ‘கதையை தனது பேத்தியிடம் அங்கம்மாள் கூறுவது போல படம் தொடங்குகிறது. அங்கம்மாள் பாத்திரத்திற்கு கீதா கைலாசம் அச்சு அசலாக பொருந்துகிறார். எப்போதும் வாயில் சுருட்டு தொற்றிக் கொண்டிருக்க புகைபிடிக்கும் அந்த ஸ்டைலே தனி. மகன்கள் மருமகளிடம் சிடுசிடுத்தாலும் பேத்தியிடம் பாசத்தைப் பொழிகிறார்.
யார் எது கேட்டாலும்
பதிலுக்கு கெட்ட வார்த்தை போட்டு பேசி அதிர வைக்கிறார்.மொத்தத்தில் அங்கம்மாளாகவே வாழ்ந்திருக்கிறார். அவ்வப்போது அரங்கையும் அதிர்ச்சியில் அதிர வைக்கிறார். அன்போ பாசமோ எதையும் அதிரடியாக சொல்லித்தான் அவளுக்கு பழக்கம் என்பதை அந்த கேரக்டர் மூலம் அவர் வெளிப்படுத்திய விதம் தனி அழகு. அங்கம்மாவுக்கு விருது நிச்சயம்.
வீட்டில் சச்சரவுகளைக் கண்டு கொள்ளாமல் மனதில் எதையும் வாங்கிக் கொள்ளாமல் மூத்த மகனாக வரும் பரணிக்கு இது லைஃப் டைம் கேரக்டர்.
தனது ஏமாற்றங்களை வெளிக் காட்டாமல் நாதஸ்வரம் வாசித்து தன்னை ரிலாக்ஸ் கொள்ளும் இடத்தில் அந்த கேரக்டர் பரணி நடிப்பில் இன்னும் அழகாகி விடுகிறது.
குடும்பத்துக்குள் வீசும் புயல் நடுவே சிக்கிக்கொண்ட மருமகளாக தென்றல் வருகிறார். கணவரின் தம்பிக்காக மாமியாரிடம் பரிந்து பேசும் இடத்திலும், அதே மாமியார் தன்னை உதாசினம் செய்யும் இடத்திலும் தான் நடித்த பாத்திரத்திற்கு ஜீவன் கொடுத்திரு க்கிறார்.
இளைய மகனின் காதலியாக வரும் முல்லை அரசி துடிப்பான காதலியாக மனதில் நிற்கிறார்.
படித்து டாக்டரான போதிலும் அம்மாவிடம் நேரடியாக வாதாடத் தயங்கும் பாத்திரத்தில் கார்த்திக் சரண் சிறப்புற வெளிப் படுகிறார்.
அந்த கேசரி தாத்தா கூட நடிப்பில்லாத நடிப்பை தந்து இருக்கிறார்.
உச்சிமலை காத்து வீச உச்சாணிப்பூ வரும் பாடல் ரசிக்க வைக்கிறது.
என்ஜாய் சாமுவேலின் கேமரா இயற்கை ஒளியிலேயே அனைத்துக் காட்சிகளையும் படம் பிடித்து கதையோடு நம்மை இணைத்துக் கொள்கிறது
முகமது மக்பூல் மன்சூர் இசை அமைத்துள்ள உச்சாணிப்பு பாட்டின் சூப்பரப்பு.
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி சிறுகதையை திரைப்படத்தை திரைப்படுத்திய விதத்தில் தேர்ந்த இயக்குனராக தன் இருப்பை பதிவு செய்து விடுகிறார்
அங்கம்மாள் எடுக்கும் முடிவு நிச்சயம் எதிர்பாராதது.
மொத்தத்தில் இந்த அங்கம்மாள் விருதை அள்ளிக் கொள்வாள்.