நிர்வாகம் பொறுப்பல்ல — திரை விமர்சனம்

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் தங்கள் ஜகஜால வித்தையை காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் ஏமாந்து நிற்பவர்களுக்கான விழிப்புணர்வு படமே இது.
கதையின் நாயகன் நாலைந்து பேர் அடங்கிய சின்ன டீமை வைத்துக் கொண்டு தனது ஏமாற்றும் படலத்தை தொடர்கிறான். ஒரு லட்சம் பணம் கட்டினால் மாதம் பத்தாயிரம் வட்டி வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்கிறான். அதை நம்பி பணம் கட்டுபவர்களுக்கு மாதம் பத்தாயிரம் பத்து மாதம் வட்டியாக கொடுத்ததில்
மக்களுக்கு நம்பிக்கை வர…
இது போதாதா? ஒரு லட்சம் பணம் கட்டியவர்கள் இப்போது அங்கே இங்கே கடன் வாங்கி 5 லட்சம்,10 லட்சம் என பணம் கட்டுகிறார்கள். இதில் ஒரு குடும்பம் தன் குடும்பத்துக்கு ஒரே வாழ்வாதாரமாக இருந்த கோழிப் பண்ணை வரை விற்று பணம் கட்டுகிறார்கள்.
முதலில் நம்பிக்கை ஏற்படுத்துவது. அப்புறமாய் முழுசாய் ஏமாற்றுவது.
இதுதானே இம்மாதிரி ஏமாற்று கம்பெனிகளின் சூட்சுமம். இந்த கம்பெனி அப்படியே இந்த சூட்சுமத்தை கடைப்பிடிக்க, ஏமாந்தவர்கள் நொந்து போகிறார்கள். இவர்களில் குறிப்பாக கோழிப்பண்ணை விற்று பணம் கட்டியவர் அதிர்ச்சியில்
இறந்தே போகிறார்.
இதன் பிறகு 250 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என அடுத்த ஏமாற்று வேலையை தொடங்குகிறார்கள். அதிலும் வழக்கம் போலவே மக்கள் ஏமாந்து போகிறார்கள்.
இப்படி ஏமாற்றிய 5000 கோடி பணத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட நினைக்கும் நேரத்தில்
மோசடி கும்பல் தலைவன் இன்ஸ்பெக்டர் அன்பரசியிடம் சிக்குகிறான். அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் தண்டனை கிடைத்ததா? பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு அவர்கள் பணம் திரும்ப கிடைத்ததா? என்பது அதிரி புதிரி கிளைமாக்ஸ்.

படத்தை இயக்கிய கார்த்தீஸ்வரனே நாயகனாக நடித்து இருக்கிறார். ஆன்லைன் விளம்பரம், ஏமாற்று வியாபாரம் என ஒரு நகைச்சுவை நாயகன் போல் படத்தை கலகலப்பாக நகர்த்திக் கொண்டு போகிறவர் இவர் தான். போலீஸ் அதிகாரியிடம் வசமாக சிக்கிக்கொண்ட நிலையிலும் பேரம் பேசும் அந்த கெத்துக்கு தனி சபாஷ்.

நாயகி ஸ்ரீநிதிக்கு காவல் ஆய்வாளர் கதாபாத்திரம். வசீகர அழகில் காக்கி சட்டை கம்பீரத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாமே இளமைத் துள்ளல். ஏமாறும் கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன். மொத்த பணமும் போச்சே என்ற அதிர்ச்சியில் அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் தேர்ந்த நடிகர் என்பதை உறுதி செய்கிறார். ஏமாற்றுக் கும்பலில் ஆதவன், ஏமாறும் கும்பலில் பிளாக் பாண்டி தனித்து தெரிகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் துள்ளல் அதிகம்.
என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளில் எதார்த்தம்.
பல்வேறு மோசடிகளைக் காட்டி, அதை எப்படிச் செய்கிறார்கள்? என்பதை மட்டும் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு அதில் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை மணி யையும் அடித்திருக்கிறார் இயக்குனர். கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த கிளைமாக்ஸ் இயக்குனர் கார்த்தீஸ் வரனை தேர்ந்த இயக்குனர் வரிசையில் கொண்டு போய் நிறுத்துகிறது.