அரசுப் பள்ளி ஆசிரியரான பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அநீதிக்கு எதிராக போராடுவது பற்றியும் கற்றுக் கொடுக்கிறார்.
இதன் முதல் கட்டமாக ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற மாணவர்கள் போராட்டம் நடத்த, மதுபான கடை அந்த இடத்தில் இருந்து அகற்றப் படுகிறது. இதனால், பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. போராட்டத்துக்கு மாணவர்களை தயார் செய்த ஆசிரியர் பிரபாகரன் மீது கோபம் கொள்கிறார். தொடர்ந்து அதே ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் நடத்தும் போராட்டத்தால்
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் லெனின் வடமலைக்கு பெருமளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வடமலையின் ஒட்டு மொத்த கோபமும் ஆசிரியர் பிரபாகரனை நோக்கி திரும்புகிறது. பழிவாங்குவதற்கு சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலா கிறார்கள். அதே சமயம், மேஹாலி மீனாட்சி ஏற்கனவே திருமணமானவர் என்பது லெனின் வடமலைக்கு தெரிய வர, இது போதாதா? ஆசிரியர் பிரபாகரனை பள்ளியில் இருந்து விரட்டியடிக்க திட்டம் போடுகிறார். அவரது எண்ணம் ஈடேறியதா? ஏற்கனவே
திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனை காதலிப்பது ஏன் ?, கேள்விகளுக்கான விடை, பரபர கிளைமாக்ஸ்.
நாயகனாக அறிமுக நடிகர் பிரபாகரன் வருகிறார். கிராமத்து ஆசிரியர் கதாபாத்திரத்திற்கு நடிப்பால் கம்பீரம் சேர்க்கிறார்.
குறிப்பாக ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் அமைதி வழியில் அதற்கு சமூக தீர்வு காண்கிற இடங்களில் நடிப்பில் அத்தனை ஆழம்.
நாயகியாக வரும் மேஹாலி மீனாட்சி, ஆசிரியை கதாபாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார். பாடல் காட்சிகளில் மட்டும் இவர் தந்திருப்பது கவர்ச்சி ஸ்பெஷல்.
வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் லெனின் வடமலை, தோற்றம் மற்றும் நடிப்பு மூலம் அந்த வில்லன் கேரக்டருக்கு கம்பீரம் சேர்க்கிறார்.
லெனின் வடமலையின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் துகின்
சேகுவேரா, இன்னொரு நடிப்பு ஆச்சரியம்.
வில்லனின் மனைவியாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர். வினிதா கோவிந்தராஜன் வருகிறார். செளந்தர்யன் இசையில், லெனின் வடமலையின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.
ஜெய்குமாரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரினி ன் கேமரா பாடல் காட்சிகளை அழகுற படமாக்கி இருக்கிறது.
கதை,வசனம், பாடல்கள் எழுதி இயக்கமும் செய்திருக்கும் லெனின் வடமலை சரியான கோட்டை சரியான நேரத்தில் போட்டிருக்கிறார்.
படம் நெடுக அறிவுரை மற்றும் விழிப்புணர்வு காட்சிகள் வரிசை கட்டினாலும் சுவாரசிய கதைப்போக்கு படத்தை நிமிர்த்தி விடுகிறது. மூடநம்பிக்கை எதிராக இயக்குனர் சுழற்றி இருக்கும் சாட்டையே அவரை சமூக அக்கறை கொண்ட இயக்குனர்கள் வரிசையில் கொண்டு சேர்க்கும்.
Prev Post