மகா சேனா — திரை விமர்சனம்

குரங்கணி மலைப்பகுதியில் வாழும் யாழி கிராம மக்களுக்கும் மலையடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகை. அந்தப் பகை இப்போது வரை புகைந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து தோற்று வருகிறார்கள்.
யாழி கிராமத்து மக்களின் தலைவன் செங்குட்டுவன் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.
யாழி கிராமத்தில் ஆண்டாண்டு கால வழக்கப்படி சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள்.
அதே நாளில் அடிவார பகுதி மக்கள் சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டமிடுகிறார்கள்.
மக்கள் தலைவனாக இருப்பதோடு சேனா என்ற யானையை யும் பிரியமாக வளர்த்து வருகிறான் செங்குட்டுவன். திருவிழா நெருங்கும் சமயத்தில் அந்த யானைக்கு மதம் பிடித்து தலைவரின் மகளையே தூக்கி கடாசி விட்டு காட்டுக்குள் தலைமுறைவாகி விடுகிறது. மதம் பிடித்த நிலையில் அந்த யானையால் மற்றவர்களுக்கும் ஏதேனும் நேர்ந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் காட்டுக்குள் சென்று யானையை தேட போகிறான் செங்குட்டுவன்.
செங்குட்டுவனின் முழு கவனமும் திருவிழா மீது இல்லாத நிலையில் யாழி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றதா? எதிரிகளிடம் இருந்து சாமி சிலையை செங்குட்டுவன் பாதுகாத்தானா? என்பது படத்தின் மீதிக் கதை.
செங்குட்டுவனாக விமல் வருகிறார். பெயருக்கேற்ற அந்த கேரக்டருக்கு முடிந்தவரை தனது நடிப்பால் கம்பீரம் சேர்க்க முயற்சி செய்கிறார். விமலின் மனைவி பொம்மியாக சிருஷ்டி டாங்கே வருகிறார். தன் பகுதி மக்களை அரவணைப்பது, அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போவது, ஒரே மகளுக்கு நேர்ந்த துயரத்தில் துவண்டு போன நேரத்திலும் மக்கள் பணிக்காக தன்னை முன்னெடுப்பது என காட்சிக்கு காட்சி நடிப்பில் வியக்க வைக்கிறார்.
வனத்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் மலைவாழ் மக்களிடம் அதிகார திமிரை காட்டும் இடங்கள்
வில்லத்தனத்தின் உச்சம். படம் முழுவதும் அவர் கத்திக் கொண்டே இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. கல்லூரி பேராசிரியரை ‘டா’ போட்டு பேசுவது மட்டும் காமெடியில் எந்த வகை என்று
புரியவில்லை.
சிலை கடத்தல் கும்பலின் தலைவனாக கிளைமாக்ஸ்சில்
வந்து படத்தின் டெம்போவை கூட்டுகிறார்
கபீர் துஹான் சிங். இவரது ஆஜானுபாகுவான தோற்றமே அந்த
வில்ல கேரக்டரை நமக்குள் கனெக்ட் செய்து விடுகிறது.
அடிவார பகுதி மக்கள் தலைவி கங்காவாக வரும் மகிமா குப்தா கவர்ச்சி
வில்லியாக
அட்டெண்டன்ஸ் போடுகிறார்.

விமலின் மகளாக வரும் சிறுமி இலக்கியா வளரும் இளம் நட்சத்திரம் என்பதை குறைந்தபட்ச காட்சியிலேயே நிரூபித்து விடுகிறார்.
இடும்பன் கதாபாத்திரத்தில் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியராக அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக சுபாங்கி ஜா ஏற்றுக்கொண்ட கேரக்டர்களில் சிறப்பாகவே திரை வல ம் வருகிறார்கள்.
படத்தின் நிஜமான ஹீரோ என்றால் அது
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு தான். அந்த அழகிய காடுகளை அவரது கேமரா படமாக்கிய விதம் நிஜமாகவே ஒளி ஓவியம்.
ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே. உதய் பிரகாஷ் பின்னணி இசை கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், மதிப்பு மிக்க கோவில் சிலையை அபகரிக்க முயலும் இரு வேறு கும்பலின் கதையை கடைசி வரை பரபரப்பாக சொல்ல முயன்று இருக்கிறார்.
திருவிழா காட்சிகளை திகிலுக்கு குறையாமல் படம் பிடித்த விதத்தில் ‘உள்ளேன் ஐயா’ என்கிறார். நாயகன் வளர்க்கும் யானை கடைசி வரை ஏதாவது செய்யப் போகிறது என்று பார்த்தால் ‘ப்ச்’. மலைவாழ் கிராம மக்களின் கபடமற்ற அன்பும் அன்யோன்யமும் படத்துடன் நம்மை இணைத்து விடுவது நிஜம்.
மகா சேனா, காட்டுக்குள் திருவிழா பார்த்த உணர்வு.