1960-களில் மதுரை, சிதம்பரம், பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமே கதைக்களம். அதை அந்த காலத்துக்கே நம்மை கொண்டு வந்து இருக்கிற திரைக்கதையும் காட்சிகளும் உணர்ச்சிப் பொங்கல்.
இந்தி திணிப்பை எதிர்க்க மாணவர்கள் ஒருங்கிணைத்து போராடிய விதம், அப்போதைய சூழ்ச்சி அரசியல் அவர்களை சிதைத்த விதம், மாணவர்கள் போராட்ட விஷயத்தில் தப்புக் கணக்கு போட்ட மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய மனோபாவம் என எல்லாவற்றையுமே நிறைய உண்மை கொஞ்சம் கற்பனை கலந்து பேசியிருக்கிறது இந்த பராசக்தி.
மதுரையில் கல்லுாரி மாணவராக இருக்கும் சிவகார்த்திகேயன், அப்போது மத்திய அரசால் வலிந்து திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து சக மாணவர்களை கொண்ட ‛புறநானுாறு’ என்ற இளைஞர் படையை உருவாக்கி, போராட்டம் நடத்துகிறார். அப்போது அவர் நடத்தும் ரயில் எரிப்பு போராட்டத்தில் எதிர்பாராத சில இழப்புகள் நடந்து விட…
போராட்ட பாதையில் இருந்து விலகி, ரயில்வேயில் ஊழியராக வேலை செய்கிறார். வேலையில் வரும் புர மோஷனுக்காக இந்தியை கற்றுக் கொள்ளவும் தொடங்குகிறார். ஆனால் நேர்முகத் தேர்வில் இந்தி சரளமாக பேச வராததால் நிராகரிக்கப்படுகிறார்.
இதே நேரம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் அவர் தம்பி அதர்வா முரளியும் அண்ணனைப் போல இந்திக்கு எதிராக போராட, அவருக்கு நேரும் விபரீதத்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பில் தீவிரமாகும் சிவகார்த்திகேயனை குறி வைக்கிறார், இந்த போராட்டத்தை ஒடுக்க டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி ரவி மோகன். ஆனால் அவரது கண்ணில் மண்ணை தூவி விட்டு டெல்லிக்கு போய் அந்த பிரதமரை சந்திக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘இந்திக்கு நாங்கள் எதிரி அல்ல. வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பதை தான் எதிர்க்கிறோம்’ என்று தங்கள் போராட்டத்தின் நியாயமான காரணத்தை கூறி அப்போதைய பிரதமர் கவனத்தை ஈர்க்கிறார். ‘உங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு உண்டா?’என்று பிரதமர் கேட்க, ‘நிச்சயம் உண்டு’ என்கிறார்.
‘அப்படியானால் ஒரு நிகழ்ச்சிக்காக நான் அடுத்த வாரம் பொள்ளாச்சி வரும்போது மக்களின் ஆதரவை நிரூபியுங்கள். உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன்’ என்று பிரதமர் சொல்ல…
இப்போது அதுவும் ஒரு வாரத்துக்குள் பெருவாரியான பொதுமக்களின் ஆதரவை அவர்கள் கையெழுத்து வாயிலாக பெற்றாக வேண்டும். ஆனால் அதற்கு பெரும் தடையாக இருக்கிறார் சிறப்பு போலீஸ் அதிகாரி ரவி மோகன். அவரது கடுமையான பாதுகாப்பை தாண்டி சிவகார்த்திகேயன் நினைத்ததை சாதித்தாரா? என்பது திகு திகு திரைக்கதை.
உணர்ச்சி ததும்பும் இந்தப் போராட்ட கதைக்குள் அண்ணன்- தம்பி பாசம், அழகான காதல், அரசியல், பழிவாங்கல் என இணைத்து கதை சொல்லப்பட்டதில் படம் விறுவிறுப்பு வசமாகி விடுகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரம் காட்டும் இளைஞன் செழியனாக சிவகார்த்திகேயன் தனது நடிப்பு சிறப்பால் அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார். தம்பி அதர்வாவுக்கு நல்ல அண்ணனாக, நண்பர்களை அரவணைப்பவராக ஒவ்வொரு பரிமாணத்திலும் அவரை ரசிக்க முடிகிறது. பக்கத்து வீட்டு எம்.பி. மகள் ஸ்ரீலீலா உடனான காதல் காட்சிகளிலும் சுவாரசியம் களை கட்டுகிறது.
சிறப்பு போலீஸ் அதிகாரி என்ற பெயரில் வில்லனாக கடின முகம் காட்டுகிறார் ரவி மோகன். போராட்டத்தை நசுக்க அவர் எடுக்கும் உயிர்ப் பலிகள், சிவகார்த்திகேயனை வேட்டையாடத் துடிக்கும் வெறித்தன செயல்பாடுகள் என வில்லத்தனத்தில் மிரட்டி விடுகிறார்.
சிவகார்த்திகேயனின் தம்பியாக வரும் அதர்வா முரளி அநீதிக்கு பொங்கும் துடிப்பான இளைஞனை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார்.
தெலுங்கு பெண்ணாக இருந்தாலும், இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டும் ரத்னமாலா கேரக்டரில் ஸ்ரீலீலா அழகும் நடிப்புமாய் மனதில் நிறைகிறார். போராட்ட மாணவர்களுக்கு உதவ அவர் செய்கிற ரகசிய செயல்பாடுகள் அத்தனையும் காட்சிகளுக்கு கனல் சேர்க்கும் இடங்கள் சிவகார்த்திகேயனின் பாட்டியாக கொளப்புளி லீலா, மறைந்த முதல்வர் அண்ணாதுரையாக சேத்தன்,முன்னாள் முதல்வர் பக்தவச்சலமாக பிரகாஷ், கருணாநிதியாக வரும் குரு சோமசுந்தரம் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பிரகாசிக்கிறார்கள். கிளைமாக்சில் கவுரவ வேடத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும், மலையாள நடிகர் பசிலும் வந்து போகிற கொஞ்ச நேரத்திலும் நெஞ்சம் நிறைகிறார்கள்.
ஜி.வி.பிரகாசின் இசையில் ரத்ன மாலா பாடல் ருசிக்கிறது.
ரவி கே சந்திரனின் கேமரா 1965 காலகட்ட போராட்ட களத்தை கண் முன் நிறுத்துகிறது.
படத்தில் மெச்சத் தகுந்த பணிகளில் முக்கியமானது அண்ணாதுரையின் கலை இயக்கம். அந்த காலகட்டத்தில் இப்போது நாமே புழங்கியது போன்ற அற்புத அனுபவத்தை தந்ததற்காகவே விருது நிச்சயம்.
எழுதி இயக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.
இந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணி, அதை ஒடுக்க அப்போது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள், மாணவர்கள் போராட்டத்தை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் அலட்சிய மனோபாவம் என எல்லாமே வரலாற்றை வரலாறாய் கண் முன் பதிக்கிறது.
அப்போது மாநிலத்திலும் மத்தியிலும் ஆண்ட அரசுகளின் மாணவர்களுக்கு எதிரான மனநிலையை தைரியமாக சொன்ன விதத்துக்காகவே இயக்குனர் சுதா கொங்கராவுக்கு ஸ்பெஷல் பொக்கே.
மற்ற மொழி மாணவர்களும் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார்கள் என்பது இதுவரை வரலாற்றில் சொல்லப்படாத பக்கம்.
இந்த பராசக்தி, தங்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரு மொழியை எதிர்த்து போராடியவர்களின் வலியை உணர்ந்தும் பாரா சக்தியாக இருந்த மத்திய, மாநில அரசுகளை இனம் காட்டிய விதத்தில் மனதுக்கு ரொம்பவே நெருக்கமாகி விடுகிறாள்.
