பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது தாத்தாவை தேடி செல்லும் நாயகனுக்கு தனது தாத்தா யார் என்று தெரிய வரும்போது பெரும் அதிர்ச்சி. மாய வித்தைகள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பயங்கரமான மந்திரவாதி தான் தனது தாத்தா என்பதை தெரிந்து அதிர்கிறார். அதைவிட பெரிய அதிர்ச்சி, அந்த தாத்தா தற்போது உயிரோடு இல்லை என்பதும், ஆவி நிலையிலும் அவர் போராட்ட குணம் கொண்டவராக இருக்கிறார் என்பதும்.
அவரை தனது ஆவி தாத்தாவுடன் மோத வைக்கிற கதை தான் மொத்த படமும். இந்த மோதலில் நாயகன் எந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பதும், அதிலிருந்து அவரால் மீண்டு வர முடிந்ததா என்பதும் பரபரப்போடு இணைந்த கிளைமாக்ஸ்.
நாயகனாக பிரபாஸ், அவரது தாத்தாவாக சஞ்சய் தத் இந்த பேண்டஸி கதைக்குள் பொருந்திப் போகிறார்கள்.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் எந்த படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தை பாகுபலி படத்தோடு ஒப்பிட்டு பார்க்கவே தோன்றுகிறது. இந்தப் படத்திலும் அந்த எண்ணம் வந்து போகிறது. பாகுபலியை தாண்டி இன்னொரு படம் அவர் நடிப்பில் சீக்கிரமே அவர் தந்தாக வேண்டும் என்பது நமது அவா.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டிருந்தாலும், கதையோடு எந்த விதத்திலும் அவை கனெக்ட் ஆகவில்லை என்பது உண்மை.
அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என மூன்று நாயகிகள் இருந்தாலும் டூயட் பாட மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு கூட அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.
பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத், பாட்டியாக சரினா வஹாப் கொடுத்த கேரக்டர்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஜமீன்தார் குடும்பத்து பெண்ணாக அம்மு அபிராமி வருகிற காட்சிகளில் கலை இயக்குனர் கைவண்ணத்தில் பிரம்மாண்டம் ஜொலிக்கிறது.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு உயர்தரம் தமன்.எஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம். மாய தாத்தாவை எதிர்த்து போராடும் பேரன் என்ற கான்செப்ட்டை எடுத்துக்கொண்ட இயக்குனர் மாருதி அதற்கு வேகமான திரைக்கதை அமைக்க தவறி விட்டார். நடிப்பை பொறுத்தவரை பிரபாஸ் ஏமாற்றவில்லை என்பது ஆறுதல்.
