தி பெட் –திரை விமர்சனம்

ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நண்பர்கள் நால்வர் வார விடுமுறையை ஜாலியாக கொண்டாட ஊட்டிக்கு செல்கிறார்கள். கூடவே விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள்.

சிருஷ்டி டாங்கேவை விலைமாது கோணத்தில் பார்க்காமல் ஒரு தலையாக காதல் கொள்கிறார் ஸ்ரீகாந்த். அதனால் சிருஷ்டியை தனது நண்பர்கள் தொடாதவாறு அவர்களை ‘தண்ணி’யில் குளிப்பாட்டி தூங்க வைக்கிறார்.

இந்த நிலையில், சிருஷ்டி டாங்கே திடீரென்று மாயமாகி விடுகிறார். மறுநாள் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போய்விடுகிறார். மாயமான இருவரையும் நண்பர்கள் ஊட்டி முழுவதும் தேடுகிறார்கள்.

மாயமான இருவர் பற்றிய தகவல் போலீசுக்கு கிடைக்க, இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் தலைமையில் விசாரணை தொடங்குகிறது.

அவர்கள் மாயமான பின்னணியில் இருக்கும் மர்மம் போலீஸ் விசாரணையில் வெட்ட வெளிச்சமானதா? விலை மாது என்று தெரிந்தும் சிருஷ்டி மீது ஸ்ரீகாந்த் காதல் கொண்டது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் சஸ்பென்சான மீதிக்கதை.

நான்கு நண்பர்களில் ஒருவராக வரும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தாலும், கதையின் நாயகனாக தன்னை அவர் அர்ப்பணித்த விதம் அந்த கேரக்டர் மீது தனி ஈர்ப்பை கொண்டு வந்து விடுகிறது.
போலீஸ் விசாரணையில் அவரையும் முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். இருந்தாலும், தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அந்த கேரக்டரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விடுகிறார்.

நாயகியாக வரும் சிருஷ்டி டாங்கே, அழகான கால் கேர்ள் பெண்ணாக வந்து கவர்கிறார். அளவான நடிப்புடன் கவர்ச்சியிலும் ரசிக்க வைப்பவர், தனது கேரக்டரை அச்சு பிசகாமல் திரையில் பிரதிபலித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் நண்பர்களாக பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய் தான் படத்தின் ஹீரோவா என்று என்று எண்ணும் அளவுக்கு பிற்பகுதி படம் முழுக்க இவரது விசாரணை ராஜ்யம் தான். புத்திசாலித்தனமான விசாரணையில் அவர் குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை விறுவிறுப்பு விலகாத கதை அமைப்பு ரசிக்க வைக்கிறது. நாயகியின் அம்மாவாக வரும் திவ்யா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் தேவிப்பிரியா நடிப்பில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

தாஜ்நூர் இசையில் அந்த ஒரே ஒரு பாட்டு மனசின் ஓரம் தேங்கி விடுகிறது. பின்னணி இசை கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளில் திகிலூட்டும் விதத்தில் பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல், ஊட்டியின் இன்னொரு பக்கத்தை அழகுற அதாவது திகிலுற தந்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.மணிபாரதி, கால் கேர்ள் என்று தெரிந்தே காதல் கொள்ளும் நாயகன் என்ற பின்னணியில் ஒரு திரில்லர் கதையை முடிவு வரை பரபரப்பு குறையாமல் தந்திருக்கிறார். கொலையாளி யார் என்ற அந்த சஸ்பென்ஸ் தான் படத்தின் ஜீவன் என்பதை மனதில் கொண்டு காட்சிகளை உருவாக்கியதில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரியதாகி விடுகிறது.

விலைமாதுவான நாயகியை மையப்படுத்திய கதையை ஆபாசமின்றி அழகியலோடு தந்ததற்காக இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து.