கிராமத்து கதைகளில் எப்போதுமே ஒரு வித உயிர்ப்பு இருந்து கொண்டிருக்கும். அப்படியோர் உயிர்ப்புடன் கூடிய கதை இது.
இளவரசுவின் மகளுக்கு விடிந்தால் திருமணம். இளவரசு வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள தம்பி ராமையாவின் தந்தை சோதனையாக அன்று பார்த்து இறந்து விடுகிறார். பக்கத்து பக்கத்து வீடுகளில் ஒரு வீட்டில் திருமணம். அடுத்த வீட்டில் மரணம்.
எங்கேயாவது எப்பவாவது இது நிகழ்வது தானே என்று இந்த நிகழ்வை சுலபத்தில் கடந்து விட முடியாது. காரணம் இரண்டு வீட்டுக்காரர்களுக் குள்ளும் நிரந்தர பகை. ஒருவர் சந்தோஷம் மற்றவருக்கு ஆகாது என்ற நிலை.
திருமணத்தை எந்த குறையுமின்றி நடத்திக் கொடுக்க அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் ஜீவா இளவரசு வீட்டுக்கு வருகிறார். வந்த பிறகு தான் பக்கத்து வீட்டு துயரச் செய்தி அவர் காதுக்கு வருகிறது. உடனே அங்கே சென்றவர் தம்பி ராமையாவிடம், ”பக்கத்து வீட்டு பெண்ணின் திருமணம் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. அதற்குப் பிறகு மதியம் 12 மணி வாக்கில் உங்கள் தந்தையின் இறுதி ஊர்வலத்தை வைத்துக் கொள்வோம்” என்கிறார்.
ஆனால் தம்பி ராமையாவோ, “பக்கத்து வீட்டில் கல்யாணம் நடக்கும் அதே பத்து முப்பது மணிக்குத் தான் என் தந்தையின் இறுதி ஊர்வலமும் நடக்கும்” என்கிறார்.
ஒரே நேரத்தில் கொண்டாட்டமும் துயரமும் எப்படி?, தலையை சுற்று கிறது ஜீவாவுக்கு. பக்குவமாக தம்பி ராமையாவிடம் சொல்லிப் பார்க்கிறார். எடுபடவில்லை.
தன் மகள் திருமணம் தனது வீட்டில் தான் நடக்க வேண்டும், என்பதில் இளவரசுவும் உறுதியாக இருக்கிறார்.
இந்த இரண்டு குடும்பங்களையும் சமாதானப்படுத்தி, இரண்டு நிகழ்வுகளையும் சரியாக நடத்தும் பொறுப்பில் ஜீவா வெற்றி பெற்றாரா ? என்பதை நிறைய சிரிக்கும்படியும், கொஞ்சம் சிந்திக்கும்படியும் சொல்வதே ‘தலைவர் தம்பி தலைமையில்’.
தலைவர் என்பவர் மக்களில் ஒருவர். மக்களோடு இணக்கமாக இருப்பவர். அவருக்கு எவரிடத்தும் பேதம் இல்லை. இப்படி ஒரு இலக்கண சுத்தியோடு பஞ்சாயத்து தலைவர் கேரக்டரில் ஜீவாவை ரொம்பவே ரசிக்க முடிகிறது. இரண்டு வீட்டு பிரச்சனையும் அவர் தலைக்கு மேல் கத்தியாக தொங்க, இளவரசுவையும் தம்பி ராமையாவையும் ஒருவர் மாற்றி ஒருவர் என்று சமாதானம் பேசிப் பார்க்கும் இடத்தில் அக்கறையுள்ள ஒரு பஞ்சாயத்து தலைவரை நடிப்பில் கண் முன் நிறுத்தி விடுகிறார் ஜீவா. இன்னும் சரியாக சொல்லப்போனால் தனது இயல்பான நடிப்பு மூலம் முழு படத்தையும் தன் தோளில் சுமப்பவரே இவர் தான்.
ஜீவாவுக்கு அடுத்த இடத்தில் இளவரசுவு ம் தம்பி ராமையாவும் இருக்கிறார்கள். மகளின் திருமணம் குறித்த நேரத்தில் நடக்குமா என்ற தலைப்பில் இளவரsu வும், ‘உன்னை சந்தோஷமாக கல்யாணத்தை நடத்த விட்டு விடுவேனா?’ என்று சபதம் போடாத குறையாக தம்பி ராமையாவும் தங்கள் தங்கள் கேரக்டர்களில் தனித்துவ முத்திரை பதிக்கிறார்கள்.
பார்க்கிங்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக கவனம் ஈர்த்த பிரார்த்தனா நாதன், இதில் மணமகள் கதாபாத்திரத்தில் வருகிறார். எளிமையான அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் தனது கேரக்டரை நடிப்பால் உயர்த்திப் பிடிக்கிறார். கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்ற தந்தையின் மனநிலை தனக்குள்ளும் வந்துவிட்ட சூழலில், ஆசையாய் போனில் பேச வரும் மனமகனை டீல் செய்யும் இடம் அவர் நடிப்பில் தனி அழகு. நைசான வில்லத் தனத்தில்
ஜென்சன் திவாகர் சுலபத்தில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் படம் முழுவதும் கதைப்போக்கில் சிரிக்க வைக்கிறார்கள்.
குறிப்பாக கல்யாண மாப்பிள்ளையாக வருபவரும் அவரது பரட்டை தம்பியும் செம. படம் முழுவதையும் பரபரப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் பப்ளு அஜுவின் கேமரா.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் கொண்டாட்ட ரகம். பின்னணி இசை வேறு லெவல்.
சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோரது திரைக்கதை காட்சிகளின் போது இன்னும் வலிமை கூடித் தெரிகிறது.
எளிமையான கதைக்கருவுக்கு மிகப்பெரிய வலிமை சேர்த்திருக்கிறது, சுவாரஸ்யம் இணைத்து எதிர்பார்ப்புடன் சொல்லப்பட்ட திரைக்கதை.
படம் முழுவதும் நகைச்சுவையாக இருந்தாலும், அதில் சிந்திக்க வைக்கும் தருணங்களும் இயல்பாக அமைந்தது படத்தின் பிளஸ்.
இயக்குநர் நித்திஷ் சகாதேவ், எதார்த்தமான வாழ்வியல் சம்பவங்களை மிக நேர்த்தியான காட்சிகள் மூலம் நகைச்சுவையாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் புரட்டிப் போடும் எதிர்பாராத அந்த வாட்டர் டேங்க் கிளைமாக்ஸ் நிஜமாகவே சூப்பர்.
மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ நடந்திருப்பது ஒரு அசத்தல் திரை மேளா.