வங்காள விரிகுடா — திரை விமர்சனம்

பேச்செல்லாம் சினிமா, மூச்செல்லாம் சினிமா என்ற நிலையில் இருக்கும் ஒருவர் படம் இயக்கி, அவரே நாயகனாக நடித்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த வங்காள விரிகுடா திரைப்படம்.
நடிப்பு இயக்கம் மட்டும் தானா? வசனம், பாடல்கள் கலை, இசை, காஸ்ட்யூம் உள்பட படத்தின் 21 பொறுப்புகளை ஏற்று திரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறார்.

சரி, படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் குகன் சக்கரவர்த்தி. இல்லை என்று வருபவருக்கு இல்லையெனாது அள்ளிக் கொடுத்து வாழும் வள்ளலாக ஊர் மக்களால் கொண்டாடப்படுகிறார்.

இவருக்கும் ஒரு பிரச்சனை. அது இல்வாழ்க்கை
இல்லா வாழ்க்கையாகிப் போன பிரச்சனை. பிளஸ் டூ படித்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள பிடிவாதம் காட்ட, அதற்கு மேலும் சம்மதம் சொல்லாமல் போனால் அந்த பெண் எந்த விபரீத எல்லைக்கும் போவாள் என்பதை உணர்ந்து ஒரு வழியாக திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.
திருமணம் நடக்கிறது. முதலிரவிலேயே குழந்தை பிறப்பதை நாலு வருடம் தள்ளிப் போடுவோம் என்கிறாள், மனைவி. அதுவரை சேப்டியாக இல்லறம் நடத்தலாம் என்கிறாள்.
இதனால் அதிர்ச்சி அடையும் நம்ம நாயகன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மனைவி கேட்பதாக இல்லை.
இதனால் புதுப்பெண் தாய் வீட்டுக்கு வந்து விட, நம்ம நாயகனை சோகம் கவ்வுகிறது. சோகத்தை மறைக்க தனிமையை நாடு கிறார்.
இப்படி ஒரு நாள் கடற்கரையில் சோகத்தை உள்ளூர அசை போட்டபடி படுத்திருக்கையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஒரு பெண் கடலுக்குள் இறங்குகிறாள்.
இதைப் பார்த்ததும் மனம் பொறுக்காத நம்ம நாயகன் ஓடோடிப் போய் அந்த பெண்ணை காப்பாற்றுகிறார்.
அந்தப் பெண் யார் என்று பார்த்தால் அவரது முன்னாள் காதலி பாலாமணி. கட்டிய கணவன் ஜெயக்குமாரின் கொடுமை தாங்காமல் அவள் இந்த முடிவுக்கு வந்திருப்பதை என்பதை தெரிந்து கொண்ட நம்ம நாயகன், முன்னாள் காதலியின் கணவரை ஆள் வைத்து குளோஸ் பண்ணுகிறார். காதலிக்கு பாதுகாப்பாக அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.
ஆனால் மழை விட்டும் தூறல் விடாத கதையாக கணவன் ஜெயக்குமார் செல்போனில் இருந்து அவளுக்கு போன் வருகிறது. நான் உயிரோடு தான் இருக்கிறேன். உன்னை சந்திக்க வருகிறேன் என்கிறது இந்த போன் கால்.
அவள் பயந்து நடுங்குகிறாள். நம்ம நாயகனிடம் இது விஷயம் சொல்கிறாள். அவரோ
அவன் இறந்து போனது நிச்சயம் என்கிறார். அதை தனது அடியாள் மூலமாக உறுதிப்படுத்தியும் கொள்கிறார்.
ஆனால் நள்ளி ரவா னால் தொடர்ந்து கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் யாரும் இல்லை. மூடி விட்டு வந்தால் மறுபடியும் டொக்… டொக்… டொக். திறந்து பார்த்தால் யாருமில்லை. இதில் பாலாமணி தான்
ரொம்பவே பயந்து நடுங்குகிறாள்.

தன் காதலியையும், தன்னையும் மிரட்ட முயற்சிக்கும் நபர் யார் ? என்பதை அறியும் முயற்சியில் நம்ம நாயகன் ஈடுபடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? நாலு வருட தவணை சொல்லி நம்ம நாயகனை பிரிந்து வாழும் மனைவியின் அடுத்த கட்ட நிலை என்ன? என்பது பிற்பகுதி கதை.

நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, திரை முழுவதையும் தனது நடிப்பால் ஆக்கிரமிக்கிறார். அடிதடியில் எதிரிகளை தூக்கிப் போட்டு
பந்தாடுகிறார். அதற்கேற்ற ஆஜானு பாகுவான அவரதுஉடம்பு சண்டைக் காட்சிகளை நம்ப வைக்கிறது. சோகத்தில் துவண்டு புலம்பும் இடங்களில் திலக நடிகர்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார்.
நாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி என்று இரண்டு கதாநாயகிகளும், கமர்ஷியல் நாயகிகளாக பாடல் காட்சிகளுக்கு உதவுகிறார்கள். அதோடு கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார்கள்.
வில்லன் நடிகர்களில்
பொன்னம்பலம்
தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார் இவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தி இருக்கலாம்.
வாசு விக்ரம் குண சித்திரத்தில் நெகிழ வைக்கிறார். திருநங்கையாக வரும் வையாபுரி கொடுத்த காசுக்கு மேல் கூவி இருக்கிறார். கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். ஏராள புதுமுகங்கள் திரைக்கு தாராள வரவாக இருந்தாலும் நடிப்பில் குறையில்லை என்பது இனிய ஆச்சரியம்.

‘வந்தது வரிகள். அதற்கு தந்தது இசை’ என்கிற அளவிலேயே படத்தின் இசை இருக்கிறது. என்றா லும் அந்த கலாம் பாட்டுக்கு ஒரு சலாம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தை தோளில் சுமந்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, ஒன்று நடிக்கலாம். அல்லது இயக்கலாம்.
குறிப்பாக நடிகராக அவரது ஒவ்வொரு அசைவுகளும் மாஸ் ஹீரோக்களே மிரண்டு போகும் அளவுக்கு செம மாஸ் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
-வங்காள விரிகுடா ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவம்.