சில காலத்திற்கு பிறகு உருப்படியாய் வந்திருக்கும் திகில் படம்.
அமானுஷ்யமான ஒரு கிராமம். அங்குள்ள காட்டில் இதயம் குதறி எடுக்கப்பட்டு உயிரற்ற நிலையில் சிறுமியின் சடலம் கிடக்க, சிறுமியின் உடன் சென்ற பாட்டியோ இன்னமும் அதிர்ச்சி விலகாமல் அரைகுறை மயக்க நிலையில் இருக்கிறார். போலீஸ் வருகிறது. விசாரணை நடக்கிறது. தீவிர விசாரணையிலும் கொலையாளி யார் என்று கண்டறிய முடியாத நிலையே தொடர்கிறது.
இந்த நிலையில் ஒரு இளம் தம்பதி தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அந்த ஊருக்கு வருகிறார்கள். தங்கள் பழைய பங்களா வீட்டில் தங்குகிறார்கள். அந்த வீட்டுக்கு நூறு வயதை எட்டும் ஒரு பாட்டி வருகிறாள். பசி மயக்கம் அவளை வாசலிலே மயக்கம் போட்டு விழ வைக்கிறது.
இரக்கப்பட்ட தம்பதிகள் அந்த பாட்டிக்கு உணவு கொடுத்து உறைவிடமும் கொடுக்கிறார்கள்.
பாட்டியின் வருகைக்கு பிறகு அந்த பங்களா வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்கள் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
ஒரு கட்டத்தில் அந்த பாட்டியால் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து என்று தெரிய வரும்போது அதை தடுக்கும் இடத்தில் அந்த தம்பதிகள் இல்லை.
அந்தப் பாட்டி யார்? பாட்டியிடம் சிக்கிய 2 குழந்தைகளும் உயிர் தப்பினார்களா என்பது திகில் திரில்லருடன் கூடிய கிளைமாக்ஸ்.
இறப்பே இல்லாமல், நீண்ட நாட்கள் இளமையுடன் வாழ வயதான கணவன், மனைவி மேற்கொள்ளும் விபரீத ஆசைதான் கதைக்களம். அதை திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
படத்தின் முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களுக்கு ஒரு வித படபடப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் விஜயகுமாரன்.
கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமியின் மர்ம மரணம், போலீஸ் விசாரணை தொடங்கும் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை ஒருவித பதட்டத்துடனே ரசிகர்களை வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
மர்ம மரணம் குறித்து விசாரணை செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் திலீபனும், ஏட்டு சிங்கம்புலியும் அந்த காட்சிகளுக்கு வலு சேர்த்து, திரைக்கதையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போகிறார்கள்.
ஆனந்த் நாக்- அபர்ணா தம்பதிகள் பூர்வீக வீட்டிற்குள் என்ட்ரி, அதன் பிறகு வடிவுக்கரசி, வயது முதிர்ந்த ஒச்சாயி கதாபாத்திரத்தில் அறிமுகம். அவளை அடையாளம் காணும் கஜராஜ் இப்படி ஒவ்வொருவராக, கதைக்குள் என்ட்ரி கொடுக்கும் போது திகில் கூடிக்கொண்டே போவது நிஜம்.
பாட்டியின் விஸ்வரூபம் தெரிந்து குழந்தைகளை காப்பாற்ற போராடும் இடத்தில் ஒரு தாயின் துடிப்பை கண் முன் நிறுத்துகிறார் அபர்ணா.
ஒச்சாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவுக்கரசி, நடிப்பில் மிரட்டுகிறார். இளமையை திரும்ப பெற தனக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் குழந்தைகளையே காவு வாங்க துடிக்கும் இடத்தில் நடிப்புக்கு அரசி என்பதை நிரூ பிக்கிறார்.
பழமையான அந்த பங்களாவையும், அந்த கிராமத்தையும் சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு பயம் ஊட்டும் விதத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார் மணிகண்டன். செல்லையா பாண்டியனின் இசை, பாட்டியின் வருகையின் போதெல்லாம் பயமுறுத்தி வைக்கிறது .
ஒச்சை என்ற ஒச்சாயியின் பின்னணியை சொல்லும் காட்சிகள் தான் கதையின் மூலம் என்பதால், அதற்கேற்ப காட்சிகளில் திகிலை வஞ்சகம் இல்லாமல் வாரி இறைத்திருக்கிறார்கள்.
ஒரு திகில் கதையை ஈரக்குலை நடுங்கும் அளவுக்கு இயக்கத்தில் மிரட்டி இருக்கிறார் விஜயகுமாரன்.
‘க்ராணி’ – திகில் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து.