கருப்பு பல்சர் — திரை விமர்சனம்

சென்னையில் வசிக்கும் தினேஷ், தனது தங்கைக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், தனக்கு மேட்ரிமோனி மூலம் பெண் தேடுகிறார். அதே மேட்ரிமோனி ஆப்பில் நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் மாப்பிள்ளை தேடி வருகிறார். ஒரு சுப தினத்தில் சந்திக்கிறார்கள். அந்த முதல் அறிமுகமே அவர்களுக்குள் நல்ல புரிதலை உண்டாக்கி விடுகிறது.

இந்நிலையில், வருங்கால மனைவிக்காக ஒரு கருப்பு நிற பல்சர் பைக்கை தினேஷ் வாங்குகிறார். இருவரும் அதில் பயணம் செய்யும் போது அமானுஷ்யமான முறையில் விபத்து ஏற்பட்டு தப்பிப் பிழைக்கிறார்கள்.

அடுத்த கட்ட அதிர்ச்சி, அந்த பைக்கை யார் ஓட்டினாலும் விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் வட்டித்தொழில் செய்யும் பிரின்ஸ் அஜய்யும், சென்னையில் வாட்டர் கேன் விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானும் தினேசை கொலை செய்ய திட்டமிட, அதற்கு பின்னாக அந்த கருப்பு பல்சர் பைக் ஒரு காரண கருவியாகிறது.

முன்பின் தெரியாதவர்கள் எதிரி ஆகி கொல்லத் துடிக்கும் அளவுக்கு போனது ஏன்? என்பதற்கு எதிர்பாராத திருப் பங்களுடன் கூடிய கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

நாயகன் தினேஷ், மதுரையைச் சேர்ந்த மாடுபிடி வீரராகவும், சென்னையில் வசிக்கும் இளைஞனாகவும் இரட்டை வேடத்தில் வருகிறார்.

இரண்டிலும் நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரராக வரும் குறைந்தபட்ச நேரத்திலும் நடிப்பில் வெளிப்படும் அந்த கம்பீரம் தனித்துவம்.

ரேஷ்மா வெங்கடேஷ் அழகும் நடிப்பும் இணைந்த கலவையாய் பிரகாசிக்கிறார். மதுரையில் நடக்கும் கதைக்களத்தில் இன்னொரு நாயகியாக வரும் மதுனிகா அந்த குறைந்த பட்ச நேரத்திலும் தன் இருப்பை நிரூபித்து விடுகிறார்

தினேஷின் நண்பனாக வரும் பிராங்ஸ்டர் ராகுல் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். வில்லன்களாக வரும் மன்சூர் அலிகான், பிரின்ஸ் அஜய் இருவரில், பிரின்ஸ் விஜய் பயமுறுத்த, மன்சூர் அலிகான் காமெடி கலந்த வில்லத்தனத்தில் முத்திரை பதிக்கிறார். கதையின் திருப்பு முனைக்கு உதவும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் சரவண சுப்பையா தனது அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்.

பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும், இன்பாவின் இசையும் ஓகே ரகம்.

கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் முரளி கிரிஷ், கருப்பு பல்சரை குறித்து கொஞ்சம் கொஞ்சமாக பயம் ஏற்றிக்கொண்டு வரும் காட்சி அமைப்புகளில் தேர்ந்த இயக்கம் தெரிகிறது.

திரைக்கதை மிதமான வேகத்தில் அமைக்கப்பட்டிருப் பது சிறு குறை. அதே நேரம் கருப்பு பல் சரை வைத்து முடிவு வரை எதிர்பார்ப்புடன் கதை சொன்னதில் ஜெயித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த கருப்பு பல்சர், சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளை.

மதிப்பெண்: 5.5/10.