உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் கிஷோருக்கு இசை மீது நாட்டம் அதிகம்.
அவர் பணியாற்றும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் அவரது மனைவி சுபத்ரா ராபர்ட், மகன் ஜஸ்வந்த் மணிகண்டன், மகள் தனன்யா வர்சினி என அழகான சின்னக் குடும்பம் அவருடையது.
தனக்கே உரிய இசை ஆர்வத்தில் தொலைக்
காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார். அதில் அவர் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை. இசைக்காக பள்ளியில் எடுக்கும் விடுமுறைகள் ஒரு கட்டத்தில் அவர் வேலைக்கே உலை வைக்க,
ஒருவழியாக போராடி மீண்டும் அந்த வேலையை பெறுகிறார். அதன் பிறகும் இசை அவர் கனவில் இருந்ததா?
இதற்கிடையே மகனுக்கு வேலை கிடைக்கிறது. அதன்பின் குடும்பத்தில் பல உணர்வுப் போராட்டங்கள். இதைத் தாண்டி இசை மீண்டும் அவரை ஈர்க்க, அவரது இசைக்கனவு கொண்டாடப்பட்டதா என்பதை தாள லயம் மாறாமல் சொல்லி இருக்கிறது இந்த மெல்லிசை.
அன்பான குடும்பத்தலைவர்,பொறுப்பான தந்தை, இசையை உயிரெனக் கருதும் கலைஞன், குடும்பத்தின் சுமைதாங்கி என பல்வேறு வகைப்பட்ட உணர்வுகளை நடிப்பில் நமக்குள் கடத்தி விடுகிறார் கிஷோர். அதிலும் குறிப்பாக அவருக்கும் மகளுக்குமான அந்த அதீத அன்பு தனித்துவம் வாய்ந்தது.
கிஷோரின் மனைவியாக வரும் சுபத்ரா ராபர்ட் அந்தப் பொறுப்பான மனைவி பாத்திரத்தில்
வசீகரிக்கிறார். குடித்துவிட்டு வந்த கணவரை கண்டிக்கும் இடத்தில் பொறுப்புள்ள மனைவியாக, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் தாயாக அவரை உணர முடிகிறது. சபாஷ் சுபத்ரா.
மகனாக நடித்திருக்கும் ஜஸ்வந்த் மணிகண்டன்
அலட்டல் இல்லாத நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். மகளாக வரும் தனன்யா வர்ஷினி தந்தையிடம் காட்டும் செல்லக் கோபம் கூட அத்தனை அழகு.
ஹரிஷ் உத்தமனிடம் தனது தந்தை போட்டோவுடன் வந்து வீட்டுக்காக தவணை கேட்கும் இடத்தில் நெகிழ வைத்து விடுகிறார்.
பொறுப்பான பாத்திரத் தேர்வுகளில் ஜார்ஜ் மரியானும் ஹரிஷ் உத்தமனும் சிறப்பு.
ஒளிப்பதிவாளர் தேவராஜ் புகழேந்தியின் கேமரா கதையோடு ஒன்றி பயணிக்கிறது.
சங்கர் ரங்கராஜன் இசையில் போட்டிப் பாடல்கள்
அமுதகானம்.
இசையை தலைப்பிலேயே வைத்திருக்கும் படம் என்பதை உணர்ந்து இசை மீட்டி இதயங்களை நிரப்பி விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் திரவ், ஓர் எளிய மனிதரின் வாழ்க்கைப் பயணத்தை அவரது கனவுகளுடன் இணைத்து கதை சொல்லி இருக்கிறார்.
கதைப்போக்கில் அந்த குடும்பம் நம்மோடு ஐக்கியமாகி விடுவது தான் இயக்குனரின் வெற்றி.
இந்த மெல்லிசை, மனதை வருடும்.
மதிப்பெண்: 6.5/10.
தலைப்பில் இருக்கும் மென்மை படத்திலும் இசைந்து படத்தோடு நம்மை இணங்க வைத்திருக்கிறது.
