நல்ல வேலையில் இருந்த போதும் நாயகன் சத்யாவுக்கு திருமணம் தள்ளிப்போகிறது. அவனது அக்கா ஏற்பாட்டின் பேரில் காபி ஷாப்பில் இளம் பெண் மோனிஷாவை சந்தித்து பேசுகிறான். இருவருக்கும் மனம் ஒத்துப் போனால் திருமண ஏற்பாடு. எவர் ஒருவருக்கு பிடிக்காமல் போனாலும் ஒரு ‘பை பை’ யில் அந்த சந்திப்பு முடிந்து விடும்.
இந்த சந்திப்பின்போது தான் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது அவர்களுக்கே தெரிய வருகிறது. சத்யா மாணவப் பருவத்தில் பள்ளி மாணவி அனுஷாவை விரும்பி கடைசி வரை அவளிடம் காதலை சொல்ல முடியாமலே தனது காதலை முடிவுக்கு கொண்டு வந்தவன். இந்தப் பெண் மோனிஷாவோ அதே பள்ளியில் ஒரு மாணவனை விரும்பியும் கடைசி வரை அவன்
அவளுக்கு கிடைக்காதே போகிறான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த மோனிஷாவின் காதலுக்கு ஒருவிதத்தில் சத்யா தான் வில்லனாக இருந்திருக்கிறான்.
காலம் இப்போது இவர்களையே சந்திக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது.
இப்போது நமது நாயகன் சத்யாவுக்கு தனது காதலை சொல்லவே முடியாமல் போன தனது அந்த மானசீக காதலி அனிஷா எப்படி இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம்.
நாயகி மோனிஷாவுக்கோ தனது பள்ளிப்பருவ காதலன் இப்போது எங்கு இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள ஆசை.
இதை தெரிந்து கொள்ள ஒரே வழி, இருவருமே தத்தம் முதல் காதலைத் தேடிப்போகும் முடிவை எடுக்கின்றனர். அந்தப் பயணத்தில் இருவருமே தங்கள் ஜோடியை சந்திக்க முடிந்ததா? அந்த காதல் இப்போதும் உயிர்ப்புடன் இருந்ததா? என்பதை ஆட்டோகிராப் கொஞ்சம், 96 கொஞ்சம் என அடித்து கலக்கி ஜூஸ் ஆக தந்து இருக்கிறார்கள்.
நாயகன் சத்யாவாக அபிஷன் ஜீவிந்த், பள்ளிப் பருவம் மற்றும் இளமைப் பருவம் என இரண்டு தோற்றங்களுக்கும் பொருந்திப் போகிறார். குறிப்பாக பள்ளிப்பருவ காட்சிகளில் நடிப்பில் ரகளை செய்திருக்கிறார். பள்ளியில் தான் உயிராய் நேசித்த அனிஷா தன்னை விரும்புகிறாளா, இல்லையா? என்பதை கண்டறிய முயற்சிப்பதில் அவரது துறு துறுப்பான அந்த ஓட்ட சாட்டம் ரசிக்க வைக்கிறது.
மோனிஷாவாக அனஸ்வரா ராஜன், எளிமையான அழகு, எழிலான நடிப்பு என மனதை வசப்படுத்தி விடுகிறார். முன்னாள் காதலன் இன்னமும் பேச்சிலர் தான் என்பதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இவரது ரியாக்ஷன் வேற லெவல்.
சத்யாவின் மானசீக காதலிஅனிஷா கதாபாத்திரத்தில் காவ்யா அனில் அலட்டிக் கொள்ளாத அழகியல் நடிப்பில் மனதில் இடம் பிடித்து விடுகிறார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னான சந்திப்பில் நாயகனிடம், ‘அப்ப உன்னால சொல்ல முடியாததை இப்ப சொல்லு பார்ப்போம்’ என்று கேட்கிற இடத்தில் குறும்பு கொப்பளிக்கும் அந்த கண்கள் அடடா ரகம். (அந்த தெற்றுப் பல் இவருக்கு தனி அழகுங்கோ)
நாயகனின் தந்தையாக தேனி முருகன், பள்ளி ஆசிரியராக சித்தப்பு சரவணன், நாயகனின் நண்பர்களாக ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளித் தோழிகளாக டிம்பிள் கண்ணா, சாச்சனா, நாயகனின் அக்காவாக ஆர்.ஜே.ஆனந்தி கதையோடு இணைந்த கேரக்டர் களாக நெஞ்சில் பதிகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா யூனிபார்ம் மாட்டி நம்மையும் பள்ளிப்பருவ காலத்துக்கே கொண்டு சென்று விடுகிறது.
இசையமைப்பாளர்ஷான் ரோல்டன் பாடல்களில் விட்ட கோட்டையை பின்னணி இசையில் பிடித்து விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் மதன், இன்றைய இளம் ஜோடிகள் தங்கள் முதல் காதல் அனுபவங்களை அசைபோடும் காட்சிகளை உண்மைக்கு நெருக்கமாக தந்திருக்கிறார். நாயகன் கேரக்டர் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பத்தாம் பசலித்தனம். சில இடங்களில் ‘த்சூ’ சொல்லவும் வைக்கிறது. நாயகன் சிகரெட்டை விட்டதற்கு காரணம் சொல்லும் இடத்தில் இயக்குனரின் அந்த சமூக அக்கறைக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கத் தோன்றுகிறது.
