சீதா பயணம் — திரை விமர்சனம்

சிறு வயதிலேயே தாயை இழந்த சீதா, தன் அப்பாவால் அன்பும் அக்கறையுமாக வளர்க்கப்பட்டவள்.

கோடீஸ்வர குடும்பம். மகளுக்கு திருமணம் செய்து வைத்தால் தன் கடமை முடிந்து விடும் என்று தந்தை நினைக்க, மகளோ திருமண பேச்சை மட்டும் தவிர்த்து விடுகிறாள்.
இதற்கு ஒரே காரணம், தன்னை உயிராக நேசித்த தந்தை எதற்காகவும் தனிமைப் பட்டு விடக்கூடாது என்பதுதான்.

இந்நிலையில் சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்ற சீதா, மதுரையில் உள்ள
பிரபல சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றிற்கு காரில் பயணப்படுகிறாள்.
போகிற வழியில் இளைஞன் ஒருவன் காரை நிறுத்தி லிப்ட் கேட்க, சில கண்டிஷன்களுடன் காரில்
ஏற்றிக் கொள்கிறாள்.

பயணத்தில் டீக்கடையில் அன்பு உபசரிப்பு, ஸ்கூல் குழந்தைகள் நட்பு, ரோட்டில் பழம் விற்கும் பெண்ண்ணிடம் கரிசனம், பசு மாட்டை தாயாக போற்றி வளர்க்கும் சிறுவன் மீதான அக்கறை என அனைவரையும் சந்தித்து அவர்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறாள். லிப்ட் கேட்டு வந்த இளைஞனை அவன் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் மதுரை போய் சேர்கிறாள்.
அவள் ஒர்க் ஷாப் நடைபெறும் பில்டிங் அருகில் வரும் போது கேஸ் கசிவால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, சீதா மயிரிழை யில் உயிர் தப்பிக்கிறாள்.

இதனால் ஒரு முடிவுக்கு வரும் சீதா, தீ ப்பிடித்த கட்டடத்துக்கு தான் தாமதமாக வர, வழியில் தான் சந்தித்த நபர்களே காரணம் என நம்புகிறாள்.

அதனால் ஊருக்கு போகிற வழியில் தன்னை சந்தித்து பேசியவர்களை, அதாவது 20 நிமிட தாமதத்துக்கு காரணமாக இருந்தவர்களை சந்தித்து நன்றி சொல்ல விரும்புகிறாள்.
அந்த பயணத்தில் அவளுக்கு நேர்ந்த திருப்புமுனை சம்பவங்கள் பிற்பகுதி சுவாரஸ்ய கதை.
இதில் முக்கியமானது, மதுரைக்கு வரும்போது பயணத்தில் அவளிடம் லிப்ட் கேட்டு வந்த இளைஞன் யார் என்ற சஸ்பென்சையும் இணைத்து இருப்பது.
சீதாவாக ஐஸ்வர்யா அர்ஜுன். தந்தையை அம்மா என்று அன்புள்ள அழைப்பதில் தொடங்கி பயணக் காட்சிகள் வரை எதிலுமே அலட்டிக் கொள்ளாத அவரது நடிப்பு, காட்சிகளுடன் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. லிப்ட் கேட்டு வந்த இளைஞனிடம் ஆரம்பத்தில் ரொம்பவே காட்டும் அந்த கெடுபிடி, போகப் போக அதுவே அன்பாகி விடும் ஆச்சரியம் என கதை முழுக்க அந்த கேரக்டராகவே மாறிப் போயிருக்கிறார்.

லிப்ட் கேட்டு வரும் இளைஞராக வரும் நிரஞ்சன் அந்தப் பாத்திரத்தை தனது நடிப்பால் அலங்கரிக்கிறார். ஆரம்ப கட்ட துறுதுறுப்பிலும் சரி, பிற்பகுதியில் ஐஸ்வர்யாவிடம் காதலை காதலை சொல்ல தயங்கும் காரணத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லும் இடத்திலும் சரி, அந்த கேரக்டருக்குள் மூழ்கி முத்தெடுத்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
நாயகியின் அப்பாவாக சத்யராஜ், நாயகனின் தாத்தாவாக பிரகாஷ்ராஜ் இருவரும் இந்த கனமான கதையின் பக்கத் தூண்கள். பிற்பகுதி படத்தை நடிப்பால் தாங்கி பிடிப்பவர்களும் இவர்கள் தான்.
கடத்தப்பட்ட பசு மாடுகளை மீட்க எதிரிகளை பந்தாடும் துருவா சார்ஜாவின் அதிரடி படத்துக்கு கிடைத்த இன்னொரு எனர்ஜி பேட்டரி.

நாயகி போகும் பயணத்தில் கோவை சரளா, அர்ஜுன் சந்திப்பு தொடர்பான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பழம் விற்கும் சிறுமியை எம்எல்ஏ. ஆட்கள் கடத்தி செல்ல, நாயகன் மீட்பதெல்லாம் கதையை வளர்க்கவே பயன்படுகின்றன.
படத்தின் ஒளிப்பதிவும், பாடல்களும் கண்களுக்கும் காதுகளுக்குமான அருமருந்து. குறிப்பாக பின்னணி இசை கிளைமாக்ஸில் நின்று பேசுகிறது.
மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுனே எழுதி இயக்கி இருக்கிறார். கடமைக்கும் காதலுக்கும் இடையே நாயகன் நாயகி இருவரும் விதையாக விழுந்த காதலை தங்களுக்குள்ளே போட்டு புதைத்து விட முடிவு செய்யும் அந்த கிளைமாக்ஸ் படத்தின் ஒட்டுமொத்த ஜீவன்.

காதலர் தினத்தில் கண்டெடுத்த காதல் பொக்கிஷம்.

ரேட்டிங்: 5/10.