ஸ்வீட்டி நாட்டி கிரேசி — திரை விமர்சனம்

நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாகி அப்புறம் காதலர்களாக மாறுகிறார்கள்.

அடுத்து திருமணம் என்ற நிலையில், பெண்கள் விஷயத்தில் தனது காதலன் எப்படிப்பட்டவன் என்பதை காதலன் வாயாலேயே தெரிந்து கொள்ள நாயகி விரும்ப…

அவனும் ஏற்கனவே அக்கா வயதுள்ள ஒரு பெண்ணுடனும், ஆன்ட்டி வயதுள்ள ஒரு பெண்ணுடனும் மன்மத லீலை வைத்துக் கொண்ட உண்மையை காதலியிடம் சொல்ல…

இவனை இப்படியே விட்டால், லீலைகளை தொடர்ந்து கொண்டே இருப்பான் என்ற பயத்தால் உடனடியாக கல்யாணம் செய்து கணவனாக்கிக் கொள்கிறார்.

தன் காதல் கணவனை அழைத்துக் கொண்டு கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, மனைவி மூலம் கிடைக்கப் போகும் குடும்பத்தை காண ஆவலோடு போகும் நாயனுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஒரு அதிர்ச்சி மட்டுமல்ல, இரண்டு அதிர்ச்சி.

அவரது அதிர்ச்சிக்கான காரணம் என்ன ? என்பது காதல் ரசம் பொங்கும் கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கும் த்ரிகுணின் தைரியத்துக்கே வாவ் சொல்ல வேண்டும்.

நடிகன் என்ற முறையில் அடல்ட் காமெடி படத்தில் நடிப்பது பெரிதல்ல, ஆனால் இப்படிப்பட்ட ஒரு சில்மிஷமான சிந்தனையோடு எழுதப்பட்ட கதையில் பயணித்திருப்பது தான் பெரிய விஷயம். காதல் பூக்களில் தேன் எடுக்கும் வண்டாக மன்மதன் ரேஞ்சுக்கு படம் முழுக்க வலம் வருகிறார்.

நாயகியாக வரும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் அறிவுரை மூலம் காதலனை கட்டிலில் சாய்ப்பதும், அவர் செய்த தவறை மன்னித்து மீண்டும் மீண்டும் அவருடன் நெருக்கம் காட்டுவதுமாய் காதலி மனைவி என்ற இரு வேறு நிலைகளிலும் நடிப்பில் டிஸ்டிங்க்ஷன் வாங்கி விடுகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மீண்டும் இனியா. பார்வையாளர்களை கிறங்கடிக்கும் அளவுக்கு நாயகனுக்கு காதல் டியூஷன் எடுக்கும் இடத்தில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கதி கலங்கித் தான் போகிறார்கள்.

‘சுந்தாரா டிராவல்ஸ்’ படத்தின் சுந்தர நாயகி இந்த படத்தில் ஆன்ட்டியாக வந்து ‘வயசானாலும் வாலிபம் போகலை’ என்பதை நிரூபிக்கிறார்.

தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், காமமே படத்தின் பிரதானம் என்பதால், அவர்கள் பெரிதாக சோபிக்க பெரிதாக வாய்ப்பு இல்லாது போய்விடுகிறது. ( இம்மாதிரி A சான்றிதழ் படங்களில் இது சகஜம்)

சி.விஜய்யின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பளிச்சென்று இருக்கிறார்கள். அவர்களது திரை இருப்பில் காட்சிகளிலும் காதலும் காம உணர்வும் கரை புரண்டு ஓடுவதை துள்ளலாய் படம்
பிடித்து இருக்கிறது கேமரா.

அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் குஷி மயம்.

எழுதி இயக்கியிருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்ட் காமெடி என்ற பெயரில் காதலை காமத்தின் பெயரில் துவைத்து எடுத்து இருக்கிறார். டபுள் மீனிங் வசனங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் அதற்கும் சிரிப்பில் அரங்கம் அதிர்கிறது என்பது அட, ஆச்சரியம்.

யார் என்று தெரியாமல் நாயகனை போட்டு புரட்டிய ஆன்ட்டியும் டியூஷன் டீச்சரும், நாயகன் யார் என்று தெரிந்த பிறகும் நாயகனின் தனிமை சந்திப்புக்காக ஏங்கும் இடங்கள் கதையின் வீக் பாயிண்ட்.
இந்த இடத்தில் எதுவுமே தெரியாமல் அதே வீட்டில் வளரும் நாயகி கேரக்டரை உருவாக்கி இருக்கும் இயக்குனர் அதற்காக மட்டுமே பாராட்டப்பட வேண்டியவர்.

இந்த வகையில் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ குளிருக்கு போர்த்த வேண்டிய காஸ்ட்லி கம்பளி .