மலரினும் மெல்லியது காதல் என்பார்கள். அப்படி ஒரு காதல் இந்த படம்.
இண்டீரியர் டெகரேஷன் துறையில் நுழைந்து வெற்றிபெறும் கனவில் நாயகன் சந்தோஷ் சோபன் இருக்க…
ஐ.டி.யில் பணியாற்றி முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தில் நாயகி மானசி வாரணாசி அதற்கான தேடலில் இருக்க…
இருவருக்கும் இடையே நிகழ்கிறது அந்த எதிர்பாராத சந்திப்பு. அதுவே அவர்களை ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. ஒருவர் சாந்தம் மற்றவர் காந்தம். எதிர்மறை இல்லாத அவர்களின் செயல்பாடுகளில் எதிர்பார்க்கிற மாதிரியே எட்டிப் பார்க்கிறது காதல். மெல்ல மெல்ல தொட்டுப் பார்க்கிறது. போகப் போக தென்றலாய் தழுவுகிறது.
காதல் வந்தபிறகு அதற்குத் தடை வராமலா? வருகிறது, நாயகியின் பெற்றோர் வடிவில். அது காதலியை காத தூரம் பிரிக்கிறது.
இந்நிலையில் காதல் கோட்டை அழிக்க வந்த மழைத்துளியாக நாயகிக்கு இன்னொரு சிக்கல். அதிலிருந்து அவள் மீண்டாளா?
துவண்டாளா? இந்த காதல், கல்யாணம் வரை போனதா என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக சந்தோஷ் சோபன். திறமை மிகுந்த துறைசார் வல்லுநராகவும், மனம் நிறைந்த காதலனாகவும் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். காதலியின் தந்தையிடம் சிக்கிக் கொள்ளும் இக்கட்டான தருணத்தில் அவரது நடிப்பும் உடல் மொழியும் ஆஹா லெவல். மறுபடியும் காதலியை சந்திக்க நேர்ந்த நேரத்தில் ஒட்டுமொத்த சோகமும் உள்ளுக்குள் பொங்கப் பொங்க… உள்ளூர உடைந்து போகும் இடத்தில் அந்த நடிப்பு நிஜமாகவே நெஞ்சின் துடிப்பு.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசிக்கு நடிக்க நிறைய வாய்ப்புள்ள கேரக்டர். அது புரிந்து அவரும் நடிப்பில் காட்சிக்கு காட்சி கொடி கட்டுகிறார். இனி அவ்வளவுதான் என்று உள்ளூர உடைந்து போகும் அந்த தருணத்திலும் காதலனுக்கு அவர் தருகிற தன்னம்பிக்கை, காதல் அத்தியாயத்தில் இதுவரை கண்டறியப்படாத புது இலக்கணம்.
நாயகனின் தொழில்துறை நண்பராக வரும் யோகிபாபு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். கௌரவத் தோற்றத்தில் வந்தாலும் தன் கேரக்டருக்கு தனி கௌரவம் சேர்த்துப் போகிறார், லிவிங்ஸ்டன்.
ராஜிவ் கன்கலா,ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் பளிச்சிடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமனின் கேமரா, கதையில் பொங்கி வழியும் காதலை திரை தாண்டி நம் இதயம் வரை கொண்டு சேர்க்கும் மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது. ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் நெஞ்சாங் கூட்டுக்குள் புகுந்த நேசப் பூங்காற்று.
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் சந்திரசேகர், உண்மையான காதலுக்கு எந்நாளும் மரணமில்லை என்பதை ஒரு நல்ல கூட்டணியுடன் இணைந்து சொல்லியிருக்கிறார்.
அதோடு, காதல்,கல்யாணம் ஆகியனவற்றின் மூலம் பெண்களின் கனவுகள் கனவாகவே போய் விடக்கூடாது எனும் நல்ல கருத்தையும் காட்சி வழியே மனம் பதித்திருக்கும் இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே. காதலியின் டைரியை காதலன் படிக்க நேரும் அந்த கிளைமாக்ஸ் இதெல்லவா காதல் என்று கொண்டாடத் தோன்றுகிறது.
-புதிய காதல் வேதம். ரேட்டிங்: 7.5/ 10.