தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் நிலையை அனோமி என்ற அடைமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
இந்தக் கதையும் அப்படி
மனதளவில் பலவீனமானவர்கள் பற்றியது தான். இப்படி கை விடப்பட்ட மனநிலையில் இருப்பவர்கள் அடுத்தடுத்து மரணமடைகிறார்
கள். அது தற்கொலை என்று காவல்துறை சுலப கணக்கு போட்டு
பைலை மூடுகிறது.
ஒரு கட்டத்தில் அது கொலை என்று காவல்துறை கண்டறிய…
இவர்களை தேடிப் பிடித்து கொன்றவர்கள் யார்?
எதற்காக இந்த கொலை?
கேள்விகளுக்கு விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ்.
தடயவியல் நிபுணராக பாவனா வருகிறார். சாலை விபத்தொன்றில் தனது பெற்றோரை இழக்கிறார். அந்த விபத்தில் உயிர் பிழைத்த அவரது தம்பி மனரீதியாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.
அவரைக் காப்பாற்றி பாதுகாத்து வருகிறார்.
இந்நிலையில்,
பாவனாவின் தம்பி போன்ற மனநிலையில் இருக்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். சிலதினங்களில் அதேமுறையில் பாவனாவின் தம்பியும் இறந்து போக…
இவை இரண்டுமே கொலை என்று பாவனா சொல்ல, காவல்துறையோ தற்கொலை என்று அடம் பிடிக்கிறது.
இதனால் வேறு வழி இன்றி தம்பி மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறிய பாவனாவே களத்தில் இறங்குகிறார்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம்.
தடவியல் நிபுணராக நடித்திருக்கும் பாவனா, அந்த கேரக்டரின் தன்மையை அப்படியே நடிப்பில் பிரதிபலிக்கிறார். அவர் திரட்டும் தடயங்கள், அவற்றின் மூலம் கொலையாளியை நெருங்கும் விதம் கதையோடு நம்மை இணைத்துக் கொள்கிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரகுமான் துப்பறியும் பயணம் அழகான எபிசோட். நடை உடை பாவனைகளில், கொலையாளியை நெருங்கும் காட்சிகளில் இவரது காக்கிச்சட்டையின் விறைப்பு அதிகம்.
பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன், காதலன் அர்ஜுன்லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா பொருத்தமான நட்சத்திரத் தேர்வில் பிரகாசிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்கின் கேமரா கண்கள் இந்த திரில்லர் கதைக்குள் ஊடுருவி காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது.
ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசையில் பாடல்கள் கதையோடு
இணைந்து ரசிக்க வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ரியாஸ் மராத். இதுபோன்ற கதைகளில் கொலைக்கான காரணம் தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். அதை உணர்ந்து நடந்து முடிந்த கொலைகளுக்கு இதுவரை திரையில் எவரும் தொட்டிடாத புதிய காரணம் சொல்லி இருக்கிறார். இப்படி யெல்லாம் கூடவா நடக்கும் என்று யோசிக்க வைக்கிற அந்த திரைக்கதை தான் படத்தின் வெற்றிப் பாதைக்கும் வித்திட்டு விடுகிறது.
ரேட்டிங்: 6.2/ 10.
