வெஞ்சன்ஸ்– திரை விமர்சனம்

தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசவேண்டும். தன் பெயர் பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே வேணியின் வெறித்தனமான ஆசையாக இருக்கிறது. அதற்கே தனது செயல்கள் மூலம் அவ்வப்போது புதிய வண்ணம் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில் உச்சப் புகழ் அவள் லட்சியமாகிறது. அதை தனது பத்தாம் வகுப்பிலேயே சாதிக்கிறாள். பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறாள். மக்கள் அவளைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். ஆனால் அதெல்லாம் சில நாட்கள் தான். அப்புறம் மறந்து போகிறார்கள்.

இது வேணிக்கு போதவில்லை. அதனால் எதை செய்தாலும் மற்றவர்கள் தன்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவள் லட்சியமாகவே மாறிப் போய் விடுகிறது.

ஆனால் எதற்காகவும் படிப்பை விட்டு விடவில்லை. வெறித்தனமான படிப்பில் உயர் பட்டங்கள். ஒரு கட்டத்தில் இந்த தீவிர படிப்பு வேணியை மாவட்ட ஆட்சியர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கிறது. இந்த அதிகார பதவி வேணியை முதலமைச்சருடன் மோதல் போக்கில் கொண்டு போய் விடுகிறது.
எப்போதுமே பெரிய அதிகாரம் சின்ன அதிகாரத்தை வீழ்த்தி விடும் அல்லவா. இங்கேயும் அதுதான் நடக்கிறது.

ஆனால் அதற்காக சுருண்டு போய் விடவில்லை வேணி. முன்னிலும் அதிக வேகம் எடுக்கிறாள். இம்முறை முதலமைச்சரையே கட்டுப்படுத்தும் அளவுக்கு அவள் கையில் அதிகாரம். இதுவே முதலமைச்சரை சீண்டிப் பார்க்க…

இந்த ‘நீயா நானா’ அதிகார ஆட்டத்தில் அடுத்து என்னவெல்லாம் நடக்கின்றன? என்பது பரபரப்பான திரைக்களம்.

வேணியாக வரும் அபர்ணதி நடிப்பில் நிறைய ஆச்சரியங்கள் பூத்திருக்கின்றன. மாவட்ட ஆட்சியராக வரும்போது அந்த உடல்மொழியே ஒரு கணம் மிரட்டி விடுகிறது. சீனியர் தலைவருடன் மோதும் ஒவ்வொரு காட்சியிலும் அவரது அசாத்திய மேனரிசம் நிஜமாகவே அட்டகாசம். தனது பள்ளி நண்பர் என்று அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் நபருக்கு கடைசியில் வைக்கும் ஆப்பு இருக்கிறதே, நிஜமாகவே சூப்பரப்பு.

முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய் (அண்ணன் எப்போதுமே வழக்கமான ஓவர் ஆக்டிங் தான்) அபர்ணதியின் தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக சரவண சுப்பையா ஆகியோரது கதாபாத்திரங்கள் தமிழக அரசியல் சம்பவங்களை நினைவூட்டிப் போகின்றன.

பிரதமராக நடித்திருக்கும் மங்கல், கௌரவ தோற்றத்தில் சச்சு பளிச். எம்.எஸ்.பிரபுவின் கேமரா இந்த அரசியல் கள கதைக்குள் சிலம்பமே ஆடி இருக்கிறது.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையின் வேகத்திற்கு பக்க பலம்.

தன்னை முன்னிலைப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு பெண்ணின் கையில் ஆளும் அரசாங்கத்தையே ஆட்டிப் பார்க்கும் அதிகாரம் சிக்கி விட்டால் என்னவாகும் என்பதை கொஞ்சமும் சமரசமின்றி காட்சிப் படுத்தியதற்காகவே இயக்குனருக்கு கொடுக்கலாம், அழகான பூங்கொத்து.

படத்தின் பிளஸ்: அபர்ணதியின் ஆளுமைத் திறன்மிக்க நடிப்பு.

படத்தின் கிளாஸ் : பிரித்து மேயப்பட்ட நேற்றைய தமிழக அரசியல்.

ரேட்டிங்: 6.5/ 10.