கொலைச் சேவல் –திரை விமர்சனம்

நாயகி தீபா பாலு தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி செல்போன் மூலம் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார். வெளியூரில் நடத்திய சந்தோஷ வாழ்க்கையின் அடையாளமாக நாயகி இப்போது ஒன்பது மாத கர்ப்பிணி.
இந்நிலையில் காட்டுக்குள் இருக்கும் தங்கள் குலதெய்வத்தை வழிபடுவதற்காக காதல் தம்பதிகள் இருவரும் தங்கள் உறவினர்களோடு அந்த காட்டு கோயிலுக்கு வருகிறார்கள்.
ஊர் வழக்கப்படி, காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருக்கிறது.

குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, அங்கே கொஞ்சமும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்கிறார்.
அது என்ன என்பதை நெஞ்சின் ரணமாக தந்திருக்கிறார்கள்.

நாயகனாக கலையரசன். இதுபோன்ற கேரக்டர்கள் இவருக்கென்றே அமைவது ஒருபுறம் இருந்தாலும், அந்த கேரக்டரில் அவரது தனித்துவம் நிறைந்த பங்களிப்பு வெல்டன் சொல்ல வைக்கிறது. நாயகியுடனான இவரது செல்போன் காதல் இதுவரை திரை பார்த்திராதது.

அறிமுக நடிகை தீபா பாலு நாயகியாக நடித்திருக்கிறார்.
எளிமையான அழகு. குடும்பப்பாங்கான தோற்றம்.
நிறைமாத கர்ப்பிணியாக கூடுதல் அழகில் ஜொலிக்கிறார். எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்து போகும் இடத்தில் நம் கண்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது.
தங்கள் காதல் பிளாஷ்பேக்கை காட்டுக்குள் கணவரின் குடும்பத்தவரிடம் இவர் சொல்லும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
நகைச்சுவை நடிகர் பால சரவணனோடு படத்தின் பிற்பகுதியில் குணச்சித்திரமும் இணைந்து கொள்கிறது. துடித்து துவளும் அந்த கிளைமாக்ஸில் இவர் நடிப்பு வேற லெவல்.

படம் முழுக்க ஒரு வார்த்தை கூட பேசாமல் வன்மம் நிறைந்த அந்த கேரக்டரில் கஜராஜ் மனதை பதறடித்து விடுகிறார்.
விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என நட்சத்திரக் கூட்டம் அதிகம். நடிப்பும் அதிகம்.
பி.ஜி.முத்தையா
வின் கேமராவுக்கு காடும் காடு சார்ந்த பகுதிகளும் என்றால் குதூகலம் வந்துவிடும். இந்தப் படத்திலும் அது நிகழ்ந்திருக்கிறது. கிளைமாக்ஸ் உருக்கம் நம்மை மேலும் பற்றிப் பிடிக்க இவரது கேமராவும் முக்கிய காரணம்.
சாந்தன் இசையில் சோகப் பாடல்கள்
காது மடல்களை ரத்தச் சேற்றில் நனைத்து விடுகின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.துதிவாணன். சாதிய ஆணவங்களை அதன் கொடூரங்களை, வன்மங்களை அதன் கோர முகங்களுடன் திரையில் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அந்த கிளைமாக்ஸ் இந்த சாதிய வன்மம் தீரவே தீராதாஎன்ற கேள்வியை நமக்குள் எழுப்பி விடுகிறது.
படத்தின் பிளஸ் : அழகான கவிதை போல் சொல்லப்பட்ட நாயகன் நாயகி காதல்.
படத்தின் கிளாஸ்: எல்லாவித உணர்வுகளையும் கண்கள் வழியே கொட்டித் தீர்க்கும் அறிமுக நடிகை தீபா பாலுவின் நடிப்பு.
ரேட்டிங் :5.2/10.