ஆங்கிலத்தில் உள்ள A, E, I, O, U ஆகிய ஐந்து எழுத்துகளும் வௌவல்ஸ் (உயிரெழுத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து எழுத்துக்கள் பின்னணியில் இது ஐந்து கதைகளைக் கொண்ட படம்.
ஒவ்வொரு கதையையும் ஒரு இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்த ஐந்தையும் இணைக்கும் ஒற்றைப்புள்ளி காதல். அதாவது ஐந்து கதைகளும் காதலை மையமாக வைத்தே நகர்கின்றன.
கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் காதலால் நடக்கும் கொலை முதல் கதை.
ஆபத்தான பயணத்தை விரும்பும் ஒருவரால் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் நேரும் பாதிப்பு இரண்டாவது கதை.
காதல் பிரிவால் தற்கொலைக்கு தயாராகும் மனங்களை மாற்றும் உணர்வுப்பூர்வமான காதல் மூன்றாவது கதை.
உண்மை அன்பை தேடி வரும் காதல் மருத்துவம் நாலாவது கதை.
உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய் என்பதை சற்று குழப்பமான பின்னணியில் சொல்லும் கதை ஐந்தாவது. ஐந்திலுமே ஒவ்வொரு கோணத்தில் சொல்லப்பட்ட காதல் கவனம் பெறுகிறது.
யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போப்பையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா என ஐந்து கதைகளில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பொருந்திப் போய் இருப்பது சிறப்பு.
குறிப்பாக யூகி சேதுவின் கதாபாத்திரமும், அவர் பேசும் வசனங்களும் பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது. ரசிக்கவும் வைக்கிறது.
கல்லூரி மாணவராக பல படங்களில் நடித்த சின்னி ஜெயந்த்துக்கு இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியாக புரமோஷன் முதிர் வயதில் வரும் அவரது காதல் மற்றும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகள் அவர் நடிப்பில் சிறப்பு பெறுகிறது.
ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரியின் கேமராக்கள் ஐந்து கதைகளையும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
ஐந்து கதைகளுக்கும் ஏற்ப, ஏற்ற இசையை வழங்கி இருக்கிறார் சரவண சுப்பிரமணியம்.
ஹரீஷ் கோம்மே-வின் படத்தொகுப்பு மருத்துவமனையில் பூப் பூக்கும் நான்காவது காதலை
நெஞ்சுக்குள் இறக்கி விடுகிறது.
திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஆளுக்கொரு கதையை இயக்கி இருக்கிறார்கள்.
ஐந்து கதைகளில் எந்த கதையுமே அழுத்தமாக எழுதப்படாமல் இருப்பது சிறுகுறை. இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருக்கலாம்.
படத்தின் பிளஸ்: குட்டி குட்டி கதைகள்.
மைனஸ்: அடுத்த கதை வந்ததும் முந்தின கதை மறந்து போவது.
ரேட்டிங்: 5/10.