குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் ராமநாதபுரம் மாவட்ட கிராமமொன்றில் குடிநீருக்காக கிணறு தோண்டுகிறார்கள். அந்தக் கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பழங்கால உயிரினமான டைனோசரின் எலும்புக்கூடு கிடைக்க, அது முதல் அந்த கிராமம் தொல்லியல் துறை வசமாகிறது . அந்த நொடியில் இருந்து
அதுவரை யாரும் அறியாமலிருந்த அந்த கிராமம் நாடெங்கும் பிரபலமாகிறது. அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.
அதையெல்லாம் தாண்டி அந்தப் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனை முடிவுக்கு வந்ததா? என்பதை சொல்லியிருக்கும் படமே ‘கெணத்த காணோம்.’
நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, அந்த பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதனால் பல காட்சிகளில் அவரிடம் இருந்து வரக்கூடிய காமெடி மிஸ்ஸிங். பதிலுக்கு நெற்றியடி வசனங்களை போட்டுத் தாக்குகிறார்.
சொந்த மாமா பெண் தன்னை விரும்பியும் மணக்க தடையாக இருக்கும் தண்ணீர் பிரச்சனையை சரி செய்ய ஊர் மக்களுடன் முயற்சி மேற்கொள்ளும் யோகி பாபு , மண்டேலா படத்துக்கு பிறகு கிராமத்து நாயகனாக நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கிணற்றில் டைனோசரின் படிமம் கிடைத்த பிறகு தனது போராட்டத்தை வேறொரு விதமாக திருப்புமிடத்திலும் உணர்வு பூர்வமான ஒரு கிராமத்து நாயகனை உணர முடிகிறது
யோகிபாபுவின் காதலியாக வரும் லவ்லின் சந்திரசேகர் யோகி பாபு மீதான தனது தீவிரக் காதலை தந்தையிடம் உணர்த்தும் இடத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். பல இடங்களில் வசனம் சொல்ல அவசியமில்லாமல் இவரது கரிய பெரிய கண்களே அதை செய்து முடித்து விடுகின்றன.
தொல்லியல் துறை அதிகாரியாக வந்து கிராம மக்களிடம் கண்டிப்பு காட்டும் ரேச்சல் ரெபெக்கா அந்த கேரக்டரை தனது நடிப்பால் உயர்த்திப் பிடிக்கிறார். அவரது உதவியாளராக வரும் ராமகிருஷ்ணன்,
மாவட்ட ஆட்சியராக வரும் ஜார்ஜ்
மரியான், கிராமத்து வார்ப்பாக ஹலோ கந்தசாமி ஆகியோர்
பொருத்தமான பாத்திரத் தேர்வில் பிரகாசிக்கிறார்கள்.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல
வேண்டியது கிராமத்து மாந்தர்களாக உலா வரும் மக்களின் இயல்பான நடிப்பு.
வறட்சியின் பிடியில் இருக்கும் ஒரு கிராமத்தை, தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் அதே கிராமத்தை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பாடல்களில் மனம் தொட்டு , பின்னணி இசை மூலம் கிராம மக்களின் வலி மிக்க உணர்வுகளை நமக்குள் கடத்தி விடுகிறார்.
படத்தின் ஜீவனாக இருக்கும் இன்னொருவர்
கலை இயக்குநர் சுபேனந்தர். இவரது கை வண்ணத்தில் கலை வண்ணம் கண்டிருக்கிறது அந்த கிராமம்.
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய படங்களின் இயக்குநர் சுரேஷ் சங்கையா,இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
படம் வெளிவரும் முன்பே அவர் மறைந்துவிட்டது பெரும் சோகம் என்றாலும், இம்மாதிரி சமூக அக்கறையுடன் கூடிய அவரதுகலை படைப்புகள் அவரை நமக்குள்
உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது நிச்சயம்.
கிளைமாக்ஸ், எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
படத்தின் பிளஸ்: இதுபோல் கண்டுகொள்ளப்
படாத கிராமங்களின் மீது படர்ந்த வெளிச்சம்.
படத்தின் கிளாஸ்: அற்புதமாக வடிவமைக்கப்பட்
டிருந்த அந்த கிராமத்து தியாகி கேரக்டர்.
ரேட்டிங் : 5.8/ 10.