காளிதாஸ் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இதோ இரண்டாம் பாகம். இதுவும் வெற்றி இலக்கை எட்டியதா? பார்க்கலாம்.
சென்னை புறநகரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு தான் கதைக்களம். அந்த குடியிருப்பில் வசிக்கும் அனந்த் நாக்- அபர்ணதி தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத், பவானி ஸ்ரீயின் அதி தீவிர விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது.
அந்த இளைஞர் வழக்கறிஞர் என்பதும் பிரபல வழக்கறிஞர் பிரகாஷ் ராஜிடம் ஜூனியராக இருப்பவர் என்றும் தெரியவர… சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை அவரது சீனியர் பிரகாஷ்ராஜ் அழைத்துச் சென்று விடுகிறார்.
அப்படியானால் குழந்தையின் இறப்புக்கு யார் காரணம்? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் போலீஸ் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்க… இதனால், அங்குள்ள மொத்த குடியிருப்பு வாசிகளும் பயத்தில் உறைந்து போகிறார்கள்.
இந்த மர்மக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் என்பதை பரத் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதை பாதி திகிலும் மீதி பரபரப்புமாய் சொல்வதே ‘காளிதாஸ் 2’.
கதையின் மையக்கரு ஒரு கொலை சம்பவம் என்றாலும், அதற்கான திரைக்கதையில் பல்வேறு குற்ற சம்பவங்களை இணைத்து, முழு படத்தையும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். ஸ்ரீ செந்தில்.
கொலைக் குற்றவாளி யார் ? என்பதில் சஸ்பென்ஸ் வைத்து…இவரா அவரா என்று திகைக்க வைத்து காட்சிப்படுத்தியதில் ஒரு கட்டத்தில் ரசிகனை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக பரத் வருகிறார். நிதானமான அதே நேரம் தீர்க்கமான துப்பறிதல், காட்சிகளை எதிர்பார்ப்புடன் வைத்துக் கொள்கிறது.
மேலதிகாரி சீறும் இடத்திலும் நிதானமாக தன் பக்க நியாயம் சொல்லும் இடத்தில் தேர்ந்த அனுபவம், நடிப்பில்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிகம் பேசாத அந்த நடிப்பின் மூலம் அந்த கேரக்டருக்கான நடிப்பை நமக்குள் கடத்தி விடுகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்திருக்கும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, அந்த சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, தனது ஆக்ரோஷ நடிப்பால் கம்பீரம் சேர்க்கிறார். தனக்கு கீழே உள்ள அதிகாரி மரியாதை கொடுப்பதில்லை என்ற ஆதங்கம் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறது. களப்பணி பற்றி சரியாக தெரியாமல், போலீஸ் கமிஷனரிடம் பேச்சு வாங்கும் இடத்தில் அம்மணியின் முகம் பார்க்க வேண்டுமே.. சூப்பர் எக்ஸ்பிரஷன்.
குழந்தையை தொலைத்து விட்டு தவிக்கும் கேரக்டரில் அபர்ணதி கனகச்சிதம். படத்துக்கு படம் நடிப்பில் மெருகேறிக் கொண்டே வருகிறார்.
அவரது கணவராக அனந்த் நாக், சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் திரைவரவு காட்சிகளுக்கு போதிய கனம் சேர்த்து விடுகிறது.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் கேமரா, படம் முழுவதிலும் அந்த நீண்ட நெடிய அப்பார்ட்மெண்ட்டை சுற்றி வந்து திகில் கூட்டுகிறது.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை தான் ஜீவன். .அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் சாம்.சிஎஸ். பாடல்களும் ஓகே ரகம்.
முதல்பாகத்தைப் போலவே இதையும் வெற்றிப்படமாக ஆக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், விறுவிறுவென படத்தைக் கொண்டு சென்றிருப்பதோடு, கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது யார் இந்த சஸ்பென்சை உடைக்கும் இடத்தில் அடடா சொல்ல வைக்கிறார். முடிவில் மூன்றாம் பாகத்துக்கும் லீடு கொடுத்திருக்கும் இடம் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
பிளஸ்: ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ்
பிளாஷ் : தொய்வில்லாத திரைக்கதை.
ரேட்டிங்: 6/10.