நீளிரா திரை விமர்சனம்

நீளிரா என்றால் நீண்ட இரவு. நீளமான ராத்திரி. தூங்கினால் சட்டென்று விடியலுக்குள் நம்மை தள்ளிவிடும் அந்த ராத்திரி, அந்த கல்யாண வீட்டை மட்டும் தூங்கா ராத்திரி ஆக்கி விடுகிறது.

1980 கால கட்டத்தில் இலங்கை போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழீழ குடும்பத்து பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இதோ விடிந்தால் திருமணம்.

ஆனால் போர் சூழலில் மறு தினம் விடியுமா? அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்குமா? என்பதை நெஞ்சம் பதை பதைக்க காட்சிப்படுத்தியிருக்கும் திரைக்கதை படத்தின் முதல் பிளஸ்.

தமிழ் ஈழப் போராட்டம் மற்றும் போர்க் காலங்களில் மக்கள் எதிர்கொண்ட அனுதின உயிர் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘நீளிரா’ போர் முனையின் பதட்டத்தோடு கதையை நமக்குள் கடத்தி விடுகிறது.

ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை என்றாலும், ஈழப் போரின் பின்னணி, அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் மற்றும் சமாதானம் என்ற பெயரில் அம்மண்ணில் அடியெடுத்து வைத்த இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.

விடிந்தால் திருமணம், சுற்றி பதற்றமான சூழல், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற பயம் இருந்தாலும், திருமண வீட்டார் திருமண ஏற்பாடுகளை வீட்டுக்குள் இருந்தபடியே சைலண்டாக கவனிக்கிறார்கள். இதற்கிடையே போராளிகளை தேடி இந்திய ராணுவம் அங்கு வருகிறது. மறுபுறம் அவர்கள் இருப்பதை அறிந்த போராளிகள் அவர்களை தாக்க தயாராகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்திய ராணுவப்படை அந்த திருமண வீட்டுக்குள் அத்து மீறி நுழைகிறது.

ஒரு பக்கம் போராளிகள், மறுபக்கம் இந்திய ராணுவப்படை என போர்ச்சுழலில் சிக்கிக்கொள்ளும் திருமண வீட்டாரின் நிலை என்ன ஆனது ? அமைதிப்படை அவர்கள் அமைதியை குலைத்ததா என்பதை திக் திக் திகிலுடன் தந்து இருக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படையின் கேப்டனாக வரும் நவீன் சந்திரா மனிதநேயம் கலந்த அந்த கேரக்டரை நடிப்பால் அதியற்புதமாக கண்முன் நிறுத்துகிறார். போராளிப் படையின் கேப்டனாக வரும் சனத்தின் உடல் பொருள் ஆவி வரை நடிக்கிறது.

மணப் பெண்ணின் அக்காவாக மனப்பிறழ்வு ஏற்பட்ட நிலையில் நடைப் பிணமாக வாழும் கேரக்டரில் ரூபா கொடுவாயூர் மனதை பிழிந்தெடுத்து விடுகிறார்.

கபிலா வேணு, விது, சித்து குமரேசன், நவயுகா, ‘கயல்’ வின்சென்ட், சுவாதி கிருஷ்ணன் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

இரவில் நடக்கும் கதை என்றாலும், அந்த உணர்வே ஏற்படாத வகையில், கதைக்குள் நம்மை சுற்றி சுழன்று அடிக்கிறது, செல்வரத்னம் பிரதீபனின் கேமரா.

கே இசையில் ஈழ மக்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள பாடல் உணர்ச்சியின் உச்சம். பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் படபடப்பை கண் முன் கொண்டு வருகிறது.

ஒரு வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த கதைக்குள் உலக அரசியலையும், ஈழ மக்களின் வலியையும் ஒரு சேர சொல்லிய விதத்தில் இது கவனிக்கத்தக்க படமாகி விடுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் சோமிதரன், ஒரு இரவில் நடக்கும் கதையில், ஈழப் போரின் முழு வரலாற்றையும் மிக தெளிவாக பேசியிருக்கிறார். யுத்தமும், ரத்தமும் காட்சிப்படுத்தப்பட
வில்லை என்றாலும், அம்மக்கள் அனுபவித்த வலியை பார்வையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்து விடுகிறார். அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அந்த வீட்டுக்குள் நுழைந்தது தொடங்கி படம் முடியும் வரை பார்வையாளர்களை ஒருவித படபடப்புடன் பார்க்க வைத்திருக்கிறார்.

பிளஸ்: போரின் கோணத்தை வேறு விதத்தில் அணுகிய திரைக்கதை.
பிளாஷ் :
கேரக்டராகவே மாறிப்போன நட்சத்திரங்கள்.
ரேட்டிங் : விழுப்புண்ணுக்கு மருந்து தான் தேவை. மதிப்பெண் அல்ல.