லீடர் — திரைவிமர்சனம்

தூத்துக்குடி துறைமுகம் அருகே கார் மெக்கானிக்கான நாயகன் லெஜண்ட் சரவணன் தானுண்டு தன் பாச மகள் உண்டு என அமைதியாக வாழ்ந்து வருகிறார்

துறைமுகத்துக்குள் சட்டவிரோதமாக நடக்கும் ஒரு விசயத்தைக் கண்டுபிடிக்க காவல்துறை நாயகனின் உதவியை நாட…

அவரோ மறுத்து விடுகிறார். அதனால் அவருடைய மகளைக் கடத்தி வைத்துக் கொண்டு துறைமுகத்தில் சட்டவிரோதச் செயல்கள் செய்யும் வில்லன் கடத்திவிட்டார் என்று அவரை நம்ப வைக்கிறது போலீஸ்.

மகளை உயிருக்கும் மேலாக நேசிக்கும் லெஜன்ட் இதற்குப் பிறகு சும்மா இருப்பாரா?

சும்மா தான் விடுவாரா? வீறு கொண்ட வேங்கையாய் களத்தில் பாய்கிறார்.

இதன் பிறகு என்ன நடக்கும்? எதிரிகள் துவம்சம் ஆகிறார்கள்.

இதேநேரம் போலீஸ் துப்பறிந்து சரவணன் கார் மெக்கானிக் அல்ல என்பதை கண்டுபிடிக்கிறது. அப்படியானால் அவர் யார்? அவர் இந்த வேலையில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
கேள்விகளுக்கு ஆக்ஷன் டிராமாவாக விரிவடையும் திரைக்கதை பதில் தருகிறது.

நாயகன் லெஜண்ட் சரவணனுக்கு இது இரண்டாவது படம். முதல் படத்தில் இருந்ததைக் காட்டிலும் இரண்டாவது படத்தில் நடிப்பில் அசுர தேர்ச்சி பெற்று இருக்கிறார். அதிலும் ஆக்ஷன் ஹீரோவாக அதிரடிக்கும் அவரை ரசிக்க முடிகிறது சண்டைக்காட்சிகள் மட்டுமின்றி பாசக் காட்சிகளிலும் நடிப்பில் பன்மடங்கு முன்னேற்றம் தெரிகிறது.

மகள் மீதான பாசமே படத்தின் ஜீவநாடி என்பதை உணர்ந்து அவரும் மகளுக்காக எதையும் செய்யும் அப்பாவாக நடிப்பில் வியாபித்து நிற்கிறார்.

நாயகனின் மனைவியாக வரும் பாயல் ராஜ்புத்துக்கு, மகளைப் பெற்றெடுத்துவிட்டு மறைந்து விடுகிற சின்ன என்றாலும், அதிலும் மனதில் சின்னமாய் பதிந்து போகிறார். மகளாக நடித்திருக்கும் சிறுமி இயல் நடிப்பில் அத்தனை இயல்பு. தாயை கொன்ற தந்தையை அடியோடு
வெறுப்பதாக தந்தையிடமே சொல்லும் அந்த இடம் கதையின் கனமான செண்டிமெண்ட் ஏரியா.

காவல்துறை அதிகாரிகளாக வரும் ஷாம், ஆண்ட்ரியா காக்கி சட்டைக்கு கம்பீரம் சேர்க்கிறார்கள்.
பிரதான வில்லனாக சந்தோஷ் பிரதாப் மிரட்டியிருக்கிறார். பாகுபலி பிரபாகர் இன்னொரு வில்லன்.
மெக்கானிக் செட் ஓணராக வரும் விடிவி.கணேஷ் வரும்போது எல்லாம் கூடவே நகைச்சுவையும் வருகிறது. அறந்தாங்கி நிஷா மின்னல் போல் வந்து போகிறார்.

லால், அம்ரிதா ஐயர், ஜெகன் கவிராஜ் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷின் கேமரா, செண்டிமெண்ட் காட்சிகளில் ஒரு விதமாகவும் அதிரடி காட்சிகளில் இன்னொரு விதமாகவும் அமைந்து காட்சிகளில் ரசனை கூட்டுகிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் பரமசுகம். பின்னணி இசை படத்தை நமக்குள் நெருக்கமாக்கி விடுகிறது. சமீபத்தில் இப்படி சண்டைக் காட்சிகள் படங்களில் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இறங்கி அடித்திருக்கிறார் லெஜெண்ட்.

இதற்காக சண்டைக் காட்சிகளை வடிவமைத்த இயக்குநர் மகேஷ் மேத்யூவுக்கு ராயல் சல்யூட். குறிப்பாக அந்த ரயில் சண்டைக் காட்சி சூப்பரப்பு.

அப்பா-மகளின் அமைதியான வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் குறுக்கிட்டால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கான களமே இந்த அதிரடி படம். அதை புதுமையான சஸ்பென்ஸ் திரைக்கதை மூலம் சுவாரசியம் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் துரை.செந்தில்குமார்
மொத்தத்தில் இந்த லீடர் பாசமிகு தந்தையாக, அதிரடி வேங்கையாக மனதில் நின்று போகிறார்.
பிளஸ்: அப்பா –மகள் பாச
சென்டிமென்ட்.
பிளாஷ் : கிளைமாக்ஸ் திருப்பம்.
ரேட்டிங்: 6.5 /10.