கர திரை விமர்சனம்

கர

— திரை விமர்சனம்

வழிப்பறி கொள்ளைக்கார
னாக இருந்த
வால்மீகி திருந்தி ராமாயண காவியம் படைத்தார் என்பது புராணம் சொல்லும் வரலாறு. கர படத்தின் நாயகன் கரசாமி கிட்டத்தட்ட இதே ரகம் தான். திருடனாக இருந்தவன் திருந்தி தனது ஊருக்கே
குல சாமி ஆகிறான். அது எப்படி என்பதை கிராமத்து கதைக் களத்தில் விறுவிறுப்பாக தந்திருக்கிறார்கள்.
திருட்டையே தொழிலாக கொண்ட நாயகன் தனுஷ், தன் காதலி மமிதா பைஜுவுக்காக தனது திருட்டு தொழிலை முடிவுக்கு கொண்டுவர எண்ணுகிறார்.
கடைசியாக ஒரு திருட்டு. அதுவும் வசதியான தங்கள் ஊர் எம்.எல்.ஏ. வீட்டில் திருடுவது என முடிவு செய்து தன் நண்பன் பிரித்விராஜுடன் நள்ளிரவில் கொள்ளைக்கு கிளம்புகிறார்.
ஆனால் சோதனையாக நண்பன் தப்பி விட, தனுஷ் சிக்கி விடுகிறார்.
இந்த திருட்டு வழக்கின் மூலம் தன்னை
பிரபலப்படுத்திக் கொள்ள விரும்பும்
போலீஸ் டிஎஸ்பி. சுராஜ் வெஞ்சர மூடு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் நேரத்தில், அவரை தாக்கி விட்டு தப்பும் தனுஷ், காதல் மனைவியுடன்
ஆந்திரா போய் ஓர் உணவகத்தில் வேலை செய்கிறார். அங்கு சராசரி வாழ்க்கைக்கு பழகிவிட்ட மனைவியின் சொந்த ஓட்டல் கனவை நிறைவேற்ற
முடிவு செய்கிறார்.
அதற்கு பணம் வேண்டுமே.
அதற்காக ஊருக்கு வருகிறார். தாய் மாமன் அடித்து
விரட்ட, தந்தையோ அரவணைத்துக் கொள்கிறார்.
ஆனால் மகன் வந்தது தங்கள் குடும்ப சொத்தை விற்று பணம் வாங்கி போகத்தான் என்று தெரிந்ததும் அதிர்ந்து போகிறார்.
அப்போதுதான் அவர்கள் குடும்ப சொத்து வங்கிக்
கடனில் இருப்பது தெரிய வருகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் வீடு ஜப்திக்கும் வருகிறது.
மகனுக்கு அவன் தொழில் விஷயத்தில் உதவ முடியாத தந்தை அந்த சோகத்தில் மரணத்தை தழுவ.

சொந்த நிலத்தில் தந்தையை புதைக்க கூட வங்கி நிர்வாகம் தடை போட…
சொத்தை பறித்த வங்கியிலேயே ஆட்டையை போட முடிவு செய்யும் தனுஷ், திருட்டு தொழிலில் தனக்கு ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து வங்கி கொள்ளைக்கு திட்டமிடுகிறார்.
இதற்கிடையே எம்எல்ஏ. வீட்டு திருட்டில் தன்னை
தாக்கி விட்டு தப்பிய தனுஷின் ஊருக்கே விருப்ப மாறுதல் கேட்டு வருகிறார்
டி எஸ் பி. சுராஜ் வெஞ்சரமூடு.
இவர்களுக்கிடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் சுவாரசியமான பிற்பகுதி கதைக் களம். தந்தையை சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடிந்ததா என்பது நெகிழ்வான கிளைமாக்ஸ்.

அந்த சாதாரண கிராமத்து இளைஞன் கரசாமி கதாபாத்திரம் தனுஷுக்கு அச்சு அசலாக பொருந்திப் போகிறது. தந்தைக்கு நேர்ந்த திடீர் மரணத்தில் தவித்துப் போவது, தன்னை நம்பி வந்த காதலியின் மென்சோகம் கண்டு உள்ளூர உடைந்து போவது, நண்பனுக்கு ஒன்று என்றால் துடித்துப் போவது என தவிப்பும் துடிப்புமான கிராமத்து இளைஞனை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார்.

நாயகியாக வரும் மமிதா பைஜு ஏற்கனவே அழகு. இந்தப் படத்திலோ இருக்கிற அழகையும் டல் மேக்கப்பில் குறைத்துக் காட்டுகிறார்கள். ஆனால் நடிப்பிலோ அழகில் கூடித் தெரி கிறார். மறுபடியும் பழைய தொழிலை கணவன் தேர்ந்தெடுத்த நிலையில், ‘அப்புறம் என்ன பத்தி நீ யோசிக்கவே இல்லையா?’ என்று கேட்கிற இடத்தில் எதிர்கால இருட்டை கண்களில் தேக்கி நிற்கும் அந்த முகம் நெஞ்சுக்குள் பதிந்து போகிறது.

தனுஷின் தந்தையாக வரும் கே.எஸ். ரவிக்குமார் அந்த மாறுபட்ட ஒப்பனையில் மட்டுமின்றி மாறுபட்ட நடிப்பிலும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அந்த உடல் மொழியும் வேறு லெவல்.
தனுஷின் தாயாக வரும் ஸ்ரீஜாரவி, கிராமத்து அம்மாவாக வாழ்ந்து இருக்கிறார்.

தனுஷின் மாமாவாக வரும் கருணாஸ், ஆரம்பத்தில் தனுஷி டம் கோப முகம் காட்டும் இடம் அந்த கேரக்டரை நமக்குள் அழகாக இடப் பெயர்ச்சி செய்து விடுகிறது. மருமகனின் திருடும் நோக்கத்துக்கான பின்னணி தெரிய வந்ததும் தன்னை அப்படியே மாற்றிக்கொண்டு மருமகனின் தவறுக்கு துணை போகும் இடங்கள் எல்லாமுமே இவர் நடிப்பில் அத்தனை அழகு.
தனுஷின் நண்பராக வரும் பிருத்வி பாண்டியராஜன் அந்த கேரக்டரில் இன்னொருவரை யோசிக்க முடியாத அளவுக்கு அசத்தி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ஜெயராம், காவலதிகாரி சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரும் பொருத்தமாக நடித்திருப்பதுடன் விறுவிறுப்பான கதைப் போக்குக்கும் உதவுகிறார்கள்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில்1990 கால கட்ட ராமநாதபுரம் தெரிகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உயிரோட்டம். குறிப்பாக அந்த கண்ணம்மா பாட்டு மனசை திருடி விடுகிறது. பின்னணி இசையும் சிறப்பு.

எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ்ராஜா, வங்கிக் கடன்களால் பாதிக்கப்படும் கிராமத்து மனிதர்களின் கதையை கையில் எடுத்திருக்கிறார். கடன் கொடுத்து விட்டு அவர்கள் சொத்தை ஜப்தி என்ற பெயரில் வாரிக் கொள்ளும் இடங்கள் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாயகன் எதற்காக திருட்டுத் தொழிலை தேர்ந்தெடுத்தான் என்பதற்கு
விளக்கம் தந்திருக்கலாம். கடனுக்கு வாங்கி தற்போது வீட்டு முன் சும்மா நிற்கும் டிராக்டரின் இரண்டு டயர்கள் எதற்கு பயன்பட்டது என்பதை சொல்லும் இடத்தில், அந்த வறுமை பின்னணியில் கூட அழகியல் தெரிகிறது. கிளைமாக்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
பிளஸ்: கந்து வட்டி ரேஞ்சுக்கு கழுத்தை நெறிக்கும் வங்கி கடன்களால் ஏற்படும் விபரீதம் சொல்லத் துணிந்தது.
பிளாஷ் : முற்றிலும் புதிதான கிராமத்து கதைக்களம்.
ரேட்டிங்: 8.2/10.