பெத்தி -திரை விமர்சனம்

அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடும் ஒரு மலைவாழ் இளைஞனின் கதையே, இந்த பெத்தி.

கூலி வேலைக்கு போவதைப்போல, கூலிக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான் இளைஞன் பெத்தி. ஊர் பெயர் கூட இல்லாத ஒரு மலைக்கிராமம் அது என்பதால் அவர்களுக்கான எந்த அடையாளமும் அரசாங்கத்தால் மறுக்கப்படுகிறது.
இந்த விதத்தில் பெத்தியும், அவரின் ஊர் மக்களும் அந்த ஊரையடுத்த மேல் தட்டு மக்களால் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இடுப்பொடிய வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைப்பது பாதி சம்பளம் தான்.
அந்த மலைப்பாதையில் போகும் ரயில் அவர்கள் ஊரில் நின்று போனால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சகல பிரச்சனைகளுக்கும் அது அவர்களுக்கு தீர்வாக அமையும். அதற்காக தங்கள் ஊரில் ரயில் நின்று போக வேண்டும் என்று மனு கொடுத்தபோது இந்திய வரைபடத்தில் அந்த மலை கிராமம் இல்லை என்று கூறி அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
இதற்காக தொடர்ந்து 30 வருடமாக மனு கொடுத்து ஓய்ந்த அந்த ஊர் பெரியவர் தங்கள் ஊர் வழியாக வரும் ரயில் முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்.
இதற்குப் பிறகு இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொள்ளும்
பெத்தி, தனக்கு கிடைத்த விளையாட்டுக்கான அங்கீகாரத்தை கொண்டு தன் கிராமத்துக்கு மறுக்கப்பட்ட அத்தனை உரிமைகளையும் எப்படி பெற்றுத் தருகிறான் என்பது கொஞ்சமும் வேகம் குறையாத திரைக்கதை.

விளையாட்டு வீரருக்கான உடல் மற்றும் ஆற்றலோடு படம் முழுவதும் வலம் வரும் நாயகன்
ராம் சரண், கடுமையாக உழைத்திருப்பது திரையில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. கிரிக்கெட் வீரராக இருக்கும் போது ஒரு தோற்றம், குஸ்தி பயில்வானாக மாறும்போது இன்னொருவித உடல் மாற்றம் என தோற்ற மாற்றத்தில் தொடங்கி முழு படத்திலும் நடிப்பிலும் விஸ்வரூபம்
எடுத்திருக்கிறார்.
தன் சமூகத்திற்கான அடையாளத்தை அடைவதற்கான அவரது ஒவ்வொரு விளையாட்டு முயற்சியும் அவரது நடிப்பால் நிரம்பி நிற்கிறது. ஜான்வி கபூர் உடனான காதல் காட்சிகளில் அந்த திருட்டு காதல் முத்தம் ருசிகரம். சிக்கிரி பாடல் காட்சி அந்தத் துள்ளல் நடனத்துக்காகவே ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது.
நாயகியாக வரும் ஜான்வி கபூர் வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி. கிளைமாக்ஸ்சில் மட்டும் கொஞ்சம் நடிக்கவும் வாய்ப்பு.
சுருதிஹாசன் ஒரு பாட்டுக்கு அவர் பாட்டுக்கு வந்து ஆடிப் போகிறார்.
குஸ்தி வாத்தியாராகவே வாழ்ந்திருக்கும் சிவராஜ்குமார் தனக்கான கேரக்டரில் தலைநிமிர்ந்து நிற்கிறார். குஸ்தியில் ராம் சரணை அவர் உருவாக்கும் காட்சிகள் நிஜமாகவே கம்பீரத் தாண்டவம்.
தங்கள் ஊரில் ரயிலை நிறுத்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தே ஓய்ந்து போகும் கேரக்டரில் ஜகபதி பாபு பிரகாசிக்கிறார்.
திவ்யேந்து சர்மா, பொம்மன் இரானி அனுபவ நடிப்பில் தடம் பதிக்கிறார்கள்.
ஆர்.ரத்னவேலுவின் கேமரா கிரிக்கெட் , குஸ்தி, ஓட்டப்பந்தயம் என அனைத்து விளையாட்டுகளிலும் நம்மை பார்வையாளராகவே உணரவைக்கும் வித்தையை செய்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை
காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.
வல்லரசு நாடு என்ற அடையாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில், பெயரே இல்லாத கிராமங்களும் இருந்து கொண்டே வருகின்றது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அல்லாடும் பல கிராமங்கள் இருப்பதை சமீபத்தில் எந்தத் திரையும் இத்தனை வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்னமும் எட்டவில்லை… எட்டப்படவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் புச்சி பாபு, தங்கள் ஊருக்கான அடையாளத்துக்காக தன்னைப் பெரிதும் வருத்திக் கொள்ளும் பெத்தி கேரக்டரை உயிர்ப்புடன் வடிவமைத்த விதத்திலேயே கதை கம்பீரம் பெற்று விடுகிறது. அதுவே படத்தை வெற்றிப் பாதைக்கும் இட்டுச் சென்று விடுகிறது.

பிளஸ்: எல்லாருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற கதைக்களம்.

பிளாஷ்: விளையாட்டும் வினை புரியும் என்பதை வீரியம் குறையாமல் சொன்ன இயக்கம்.

மதிப்பெண்: 7.5/10.