பாக்யராஜின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக தாக்கி கொன்றுவிட்டு
அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீடு பேய் வீடு எனப்படுகிறது. அதனால் பேய்க்கு பயந்து யாரும் குடி வராத நிலையில்,
அந்த வீடு பற்றிய உண்மை தெரிந்தும் அந்த மாடிவீட்டில் குடி வருகிறார் நாயகன் அஜய் கார்த்திக்.
வந்த முதல் நாளே அவர் தைரியம் பறிபோகிறது. இரவானால்
அமானுஷ்ய சேட்டைகள் ஆரம்பம்.
ஆனாலும் மனதை
திடப்படுத்திக் கொண்டு அந்த வீட்டில் வசிக்கும் அஜய் கார்த்திக், சில தினங்களுக்குப் பிறகு சில அமானுஷ்ய விஷயங்களின் பின்னணி தெரிய வரும்போது அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
இதற்கிடையே, நாயகன் அஜய், தன்னைத் தானே தாக்கிக் கொண்டு இறந்து போக, அதே வேளையில்வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் இறந்து கிடக்கிறார்.
சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை பெயர் சொல்லி எச்சரித்து விட்டு மீண்டும் சரிந்து விழுகிறார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, திடுக்கிடும் இந்த சம்பவத்தையும், தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தன் பெயரை குறிப்பிட்டதையும் வைத்துக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ? , அஜய் கார்த்திக் எதிர்கொண்ட அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் இளைஞர்களின் மர்ம மரணங்களின் பின்னணி என்ன ? என்பதை திகில் மயமாய் தந்து இருக்கிறார்கள்.
படம் முழுக்க பார்வையாளர்களை படபடப்புடன் வைத்திருக்கிறது
இந்த டார்க்.
கதையின் நாயகனாக வரும் அஜய் கார்த்திக், பேய் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட இளைஞன் கேரக்டரில் பயத்தையும் பதட்டத்தையும் சிறப்பாகவே நடிப்பில் பிரதிபலிக்கிறார்.
ஜாலியான இளைஞராக அறிமுகமாகி, பேய் வீட்டுக்குள் சென்றதும், நாளுக்கு நாள் தனது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளையும் தன் நடிப்பில் கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி இந்த வழக்கில் மேற்கொள்ளும் புலன் விசாரணை தொடர்பான காட்சிகள் அவரது நடிப்புக்கும் பெயர் சேர்க்கும்.
வீட்டு உரிமையாளராக வரும் கே.பாக்யராஜ், பேய் வீடு அடையாளத்தால் தனது வீடு விற்க முடியாத நிலையை நாயகனிடம் சொல்லி புலம்பும் இடத்தில் தேர்ந்த குணசித்திர நடிகராக அனுபவ நடிப்பில் பிரகாசிக்கிறார்.
அவரது மகளாக
அஞ்சனா நேத்ரன், நட்சத்திர நடிகராக விடிவி கணேஷ், மற்றும் இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி சின்ன கேரக்டர்களிலும் சின்னமாய் மனதில் பதிந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களை திகில் குறையாமல் தந்திருக்கிறார்.
மனு ரமேஷின் பின்னணி இசை திகில் காட்சிகளில் பார்வையாளர்களை பயத்தின் உச்சத்திற்கே
இட்டுச் செல்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், திகில் கதை என்றாலும் அதை உளவியல் ரீதியாக கையாண்ட விதத்தில் தனித்து தெரிகிறார்
மர்மமான முறையில் இறந்து போகும் மூன்று இளைஞர்கள், அவர்களை தொடர்ந்து அந்த வீட்டுக்குள் குடி வரும், நாயகனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் என அடுத்தடுத்து வரும் காட்சிகளில் பார்வையாளர்கள் மனதில் பயத்தை விதைத்து விடுகிறார்.
பாக்யராஜ் மகள் தொடர்பான ரத்தின சுருக்கமான அந்த பிளாஷ் பேக் இயக்குனர் ஸ்பெஷல்.
பிளஸ்: வித்தியாசமான ஆவிக் கதையை இயக்குனர் அணுகிய முறை.
பிளாஷ்: மிரட்டும் இசையும், குறைந்த வெளிச்சத்தில் பயமுறுத்தும் கேமராவும்.
ரேட்டிங்: 5.8/10.
