தலைப்பை பார்த்ததுமே 1944-ல் நடந்த பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு கதையா இது என்று உங்களுக்குள் கேள்வி எழும்.
இது அந்த கதை இல்லை. வேறு கதை. கொலைக் குற்றவாளி யாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனுக்கு அந்த தண்டனை தேவை தானா? என்று விவாதிக்கிற கதை.
அந்த கிராமத்து படித்த பட்டதாரி இளைஞன் அரசு வேலைக்கு முயற்சிக்கிறான். வேலை கிடைக்க தாமதமாகவே, அதுவரை சும்மா இருப்பானேன் என்று சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறான்.
அப்படி திருடப் போகும் ஒரு வீட்டில்
அந்த வீட்டு உரிமையாளரையே அவன் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்து விடுகிறது.
கொலையை ஒப்புக்கொண்டாலும் கொலைக்கான காரணம் சொல்ல மறுப்பவனுக்கு கோர்ட் தூக்கு தண்டனை விதிக்கிறது.
தூக்குத் தண்டனை என்பது கிட்டத்தட்ட அரசாங்கம் நடத்தும் ஒரு கொலை மாதிரி தான் என்று என்பது அந்த இளைஞனின் கருத்தாக இருக்கிறது. சட்டம் அவனை
தண்டித்ததா என்பது கிளைமாக்ஸ்.
படத்தை
இயக்கிய தயாள் பத்மநாபன், இப்படம் மூலம் மரண தண்டனையும் ஒரு விதத்தில் கொலை தான் என்ற விவாதத்தை முன் வைத்திருக்கிறார். கதையின் பெரும் பகுதி நேரத்தை அந்த விவாதமே எடுத்துக் கொள்ள, அதுவும் கருத்துச் செறிவுடன் அமைந்து
கவனிக்க வைக்கிறது என்பது சிறப்பு.
இந்த விவாதத்தின் முக்கிய கருத்தாக இயக்குனர் வைப்பது, குற்றவாளியின் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் குற்றப்பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதி வழங்க வேண்டுமே தவிர, வெறும் குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது நீதி அல்ல என்பது தான்.
மரண தண்டனை கைதியாக வரும் வெற்றி அலட்டல்
இல்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் தூக்குக் கயிறு தனக்காக காத்திருக்கிறது என்ற நிலையிலும் ஜெயி லரிடம் கேட்கும் அத்தனை கேள்விகளிலும் நடிப்பில்
அத்தனை உயிர்த் துடிப்பு.
பதற்றம் இல்லாத வசன உச்சரிப்பு வேறு நடிப்பில் அவரை தனித்து காட்டுகிறது.
நாயகியாக வரும் பிரிகிடா சகாவுக்கு, கிராமத்து மேடம் என்றாலும், யதார்த்த நடிப்பின் மூலம் அந்த கேரக்டருக்குள் தன்னை அழகாக பொருத்திக் கொள்கிறார்.
சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, வெற்றியின் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிப்பில் பளிச்சிடுகிறார்.
நிஜ வாழ்க்கையில் வாதிடுவது அவருக்கு புதிதல்ல என்றாலும், அதை ஒரு கதாபாத்திரமாக கையாளும் சவாலை திரையில் இயல்பாக செய்து சபாஷ் பெறுகிறார்.
வெற்றியின் நண்பராக நடித்திருக்கும் மாறன், கோர்ட்டில் கதறுமிடத்தில் தேர்ந்த குணச்சித்திரத்திலும் வெளிப்படுகிறார்.
வெற்றியின் அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியை தூக்கிலிடும் ஹேங்மேனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் அழகாக ஊடுருவிக் கொள்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம், இயல்பான காட்சிப் பதிவு மூலம் கண்களை
நிறைக்கிறார்.
தர்புகா சிவாவின் இசை, கதையை தாங்கும் ஆணிவேராகவே மாறிப் போயிருக்கிறது. பின்னணி இசை இறுக்கமான சூழல்களுக்கு ஏற்ப பயணித்து அந்த சூழலை சுலபத்தில் நமக்குள்ளும் கடத்தி விடுகிறது.
மரண தண்டனை என்பது ஒருவருக்கான நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்ற ரீதியில் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் தயாள் பத்மநாபன், காட்சிகளைப் புதிய கோணத்தில் அணுகி படத்தை எதிர்பார்ப்புக் குரியதாக மாற்றி விடுகிறார். அருவி மதன் தொடர்பான அந்த தீர்ப்பு, நிச்சயம் நீதி பரிபாலனத்தை அசைத்துப் பார்க்கும்.
பிளஸ்: மரண தண்டனைக்கு எதிரான கதைக் களத்தை கையாண்ட விதம்.
பிளாஷ்: மொத்த கதைக்கும் விடையாக மாறும் அருவி மதன் கேரக்டர்.
ரேட்டிங்: 7/10.
