சிறு வயதிலேயே தந்தையையும் தம்பியையும் தொலைத்து அநாதை இல்லத்தில் வளரும் அண்ணன், ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியேறி பல்வேறு தில்லாலங்கடி வேலைகள் செய்து உயர்ந்த அந்தஸ்தை எட்டுகிறார். வரும் தேர்தலில் ஜெயித்தால் நிச்சயம் மந்திரி ஆவார் என்கிற அளவுக்கு அவர் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த நிலையிலும் தனது தந்தை, தம்பி மீதான பழிவாங்கல் உணர்வு அவருக்குள் மேலோங்கியே இருக்கிறது.
இதற்கிடையே போலந்து நாட்டில் இருக்கும் தம்பி தந்தை இறந்த நிலையில் அண்ணனை தேடி தமிழகம் வருகிறார். அப்படியே தன் சென்னை காதலி படிக்கும் கல்லூரியில் எம். பில். வகுப்பில் சேர்ந்தபடி அண்ணனை தேடுவதையும் தொடர்கிறார்.
தம்பி மீது கொலை வெறியோடு இருக்கும் அண்ணன். அண்ணன் மீது அன்பை கொட்ட காத்திருக்கும் தம்பி. இந்த இருவரையும் அரசியல் பிரிக்கிறது. அண்ணன் விரும்பும் பெண் தம்பியின் காதலி என்ற சூழலும் இந்த பாச உறவுக்கு பகையாய் நிற்க…
தேர்தலில் போட்டியிடும் அண்ணன் வெற்றி பெற்றாரா? இருவரும் அண்ணன் – தம்பி என்று தெரிய வந்த பிறகு என்ன ஆனது ? கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.
அண்ணன் அரசியல்வாதி கொற்கைப் பாண்டியன், தம்பி கல்லூரி மாணவர் பிரபாகரன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் நாயகன் இஷாக் உசைனி. அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களிலும் சின்ன சின்ன மேனரிசம் காட்டியிரு க்கிறார்.
பிரியா மற்றும் ஜூலி கதாபாத்திரங்களில் நாயகிகளாக வரும் இரண்டு நடிகைகளும் கதைக்கான தங்கள் பங்களிப்பில் சரியான தேர்வாக தங்களை நிரூபிக்கிறார்கள்.
கல்லூரி மாணவர்களாக நடித்தவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சதாசிவ ஜெயராமன் இசையில் பின்னணி இசை மேலோங்கி இருக்கிறது ஒளிப்பதிவாளர்கள் தயாள் ஓஷோ மற்றும் தேவராஜின் ஒளிப்பதிவு சொல்லிக் கொள்ளும்படி
இல்லை.
நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இஷாக் உசைனி, அரசியல் ஆக்ஷன் மாஸ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். கதையை விடவும் அவரது அதிரடி தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
‘பூகம்பம் அதிரடி கொண்டாட்டம்.