திரையில் இதுவரை இப்படி ஒரு கதையை பார்த்ததில்லை. அப்படி ஒரு கதை. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண். மாலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆண்.
இப்படி ஒரு பிறவிக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அந்த பிரச்சினையில் இருந்து அவளும் அவனும் மீளவே வாய்ப்பு இல்லாத சூழலில் அவரவர் வாழ்க்கைக்கு என்னதான் தீர்வு என்பதை தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரசியம் குறையாமல் சொல்லி இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் இருவருக்கும் ஆளுக்கு ஒரு காதல். பகலில் பார்க்க நேரும் ரஜினியை அவள் அலுவலக சக ஊழியர் உயிராய் காதலிக்க…
இரவில் ஆணாகி விடும் ரஜினியை உயிராய் ஒரு பெண் நேசிக்க என்று தொடக்கம் முதலே கதை ஜெட் வேகம் பிடித்து விடுகிறது.
அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கிய படம். இந்த கதையில் பேண்டசி, காதல், சண்டை, கலகலப்பு, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது என்பது வெகுஜனத்துக்கான ஸ்பெஷல் கிப்ட்.
பெண் ரஜினியை காதலிப்பவராக வினோத் கிஷன் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்.
தனது காதலியின் உடல் மாற்றம் குறித்து அதிர்ந்து போகும் இடம் தொடங்கி முடிவு வரை தனது நடிப்புக் கொடியை பறக்க விட்டுக் கொண்டே இருக்கிறார்.
அவரது ஜோடியாக வரும் ரேஷ்மா, காதலனின் அன்பை ஏற்கும் மன நிலைக்கு வந்து விட்டபோதிலும் குற்ற உணர்வில் தவிக்கும் இடங்கள் நடிப்பில் இவரை
பளீரென அடையாளம் காட்டி விடுகிறது.
இரவானால் ஆணாக மாறிவிடும் கேரக்டரில் சந்தோஷ், காதலியிடம் தான் யார் என்று உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் இடங்கள் அத்தனையும் படத்தின் கலகலப்பு மையம். அவரது ஜோடியாக வரும் சம்யுக்தா ஸ்டைலிஷ் ஆன நடிப்பில் கவர்கிறார். தனது காதலனின் தோற்ற மாற்ற பின்னணி தெரிய வரும் இடத்தில் இவரது ரியாக்ஷன், தமிழ் சினிமாவுக்கு நடிக்கத் தெரிந்த நடிகை ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது.
வில்லன்களாக பக்ஸ், விச்சு வருகிறார்கள்.
சாந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் இந்த சிக்கலான காதல் படத்தை இளமை இளமை ததும்ப இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்து விடுகிறது.
ஆண், பெண்ணாக மாறும் இருவரின் பெயரும் ரஜினி. கிளைமாக்சில் கமல் பெயரும் வருகிறது. குஷ்புவும் கவுரவ வேடத்தில் வருகிறார்.(குளோசப்பில் தான் இவரை அடையாளம் காண முடிகிறது என்பது அதிர்ச்சி.)
தங்கள் பிறப்பில் உள்ள சிக்கலை தங்கள் காதல் ஜோடி யிடம் தெரிவித்தாலே சிக்கல் வரலாம் எனும் நிலையில், ஒரு வில்லன் வேறு வந்து மரபணு ஆராய்ச்சி அது இதுவென்று வ
இவர்களைக் காட்சிப் பொருளாக்கி பணம் சம்பாதிக்க எண்ணும் இடங்கள் எல்லாமே ‘உஸ் அப்பாடா’ ரகம்.
விடிவி.கணேஷ் முழு படத்திலும் சிரிக்க வைக்கிறார். பிரச்சனைக்குரிய பெற்றோராக போஸ் வெங்கட்- வினோதினி நிறைவான நடிப்பில் நெஞ்சில் பதிகிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசாமி. ‘ஒருவரில் இருவர்’ என்ற கதைக் களத்தில் சுவாரசியமாக கதை சொல்லி இருக்கிறார். கதை புதுசு காட்சிகளும் புதுசு இந்த விதத்தில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.
பிளஸ்: இதுவரை திரையில் சொல்லப்படாத கதை
பிளாஷ்: இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று சொல்லக்கூடிய ஒரு கதை, திரையில் ஏற்படுத்தும் மாயா ஜாலம்.
ரேட்டிங்: 7.5/ 10.