தடைகளை உடைத்து தனது லட்சியமான விளையாட்டுத்துறையில் சாதிக்கப் போராடிய ஒரு இளைஞனின் கதை.
எங்கே என்ன நடக்கும்? யார் யாரை எப்போது வெட்டிக் கொண்டு சாவார்கள் என்ற அனுதின பயத்தில்
தென் மாவட்டங்களில் 90-களில் நடந்த சமூக மோதல்கள் அந்தப் பகுதி மக்களை குறிப்பாக இளைஞர்களை பாதித்த விதம், அதனால் திசை மாறிய அவர்களது வாழ்க்கை இதையெல்லாம் தாண்டி தனது கபடி கனவை நனவாக்க போராடும் ஒரு இளைஞன் அதில் உச்சம் தொட்டானா என்பதை ரத்தம் தெறிக்கும் பின்னணியில் மண்வாசனை மாறாமல் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி உணர்வும் உலைக்களனுமான கதைக் களத்தில் கதைக்கேற்ற மாந்தர்கள் தான் படத்தின் முதல் வெற்றியை தீர்மானிக்கிறார்கள். கேரக்டர்களுக்கு ஏற்ற நட்சத்திரத்
தேர்விலேயே முழு மதிப்பெண் வாங்கி வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
குறிப்பாக பசுபதி, துருவ் விக்ரம் ஏற்றிருந்த அப்பா மகன் கேரக்டர்களே படத்தின் வெற்றியை தீர்மானித்து விடுகின்றன. ( அப்படியே ஆளுக் கொரு தேசிய விருதையும்.)
நாயகன் துருவ் விக்ரத்தை நடிகராக ஒரு காட்சியில் கூட பார்க்க முடியவில்லை. அந்த கபடி வீரன் கேரக்டரில் வீறு கொண்ட வேங்கையின் சீற்றமாகவே அவரை உணர முடிகிறது. கபடி விளையாடக்கூடாது என்று சத்தியம் வாங்கும் தந்தையி டம் அவர் சத்தியம் செய்யும் அந்த நொடியில் கலைந்த கனவை பிரதிபலிக்கும் அந்த கண்கள் அடடா, அடடா…ரகம்.
ஒரு கட்டத்தில் அவரே கலவர பூமியின் கனம் தாங்காமல் இனி விளையாடப் போவதில்லை என்று முடிவெடுக்கும் இடத்தில் அந்த கேரக்டருக்கான மன அழுத்தத்தை நமக்குள்ளும் கடத்தி விடுகிறார்.
பைசன் என்ற தலைப்புக்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் துருவ் விக்ரம், கபடி வீரராக களத்தில் நிற்கும் காட்சிகள் அனைத்தும் நம்மை இருக்கை நுனிக்கு கொண்டு வரும்
வித்தையை செய்து விடுகின்றன.
சங்கடப் பார்வை என்றால் என்னவென்று தெரியுமா? லால் இருப்பிடத்துக்கு துருவ் விக்ரம் தனது விளையாட்டு தொடர்பாக வந்திருந்த நிலையில், எதிரி முகாம் ஆட்கள் மோப்பம் பிடித்து திடீர் தாக்குதல் நடத்த, அந்த தாக்குதலுக்கு பின்னணியில்
துருவ் தான் இருக்கிறார் என்று லாலின் அடியாட்கள் அவரை நம்ப வைக்க முயல… தன் மீதான சந்தேகப் பார்வைக்கு துருவ் காட்டும் ரியாக்ஷன் வேற லெவல்.
துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி, இருமுனை தாக்குதலிலும் சிக்கி மரண பயத்தில் வாழ்ந்து வரும் நேரத்திலும் மகனின் எதிர்காலம் கருதி அவற்றை சகித்துக் கொள்ளும் இடங்கள் அத்தனையும் அவர் நடிப்புக்கான சிறப்பு மகுடம். கலவரத்தில் ஊரே பற்றி எரியும் நேரத்தில் மகனை வெளியூருக்கு பஸ் ஏற்றி விட வந்து போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் இடத்தில், மகனின் எதிர்காலத்துக்காக போலீஸிடம் கெஞ்சும் அந்த அப்பா, நடிப்பில் அப்பப்பா…!
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அவரது ஆவேச அப்பாவாக நடித்திருப்பவர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால், நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது.
பின்னணி இசையும் காட்சிகளுக்கேற்ற உயிரோட்டம்.
ஒளிப்பதிவாளர் எழில் அரசுவின் காமரா தென் மாவட்ட நிலப்பரப்பை ரத்தமும் சதையுமாய் கண்களுக்குள் நிறைத்து விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ், கலவர பூமிக்குள் ஆடி இருக்கும் இந்த கபடியை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனி ன் கதையை திரைக்குள் கொண்டு வந்து ஒரு வரலாறுக்கு வாகை சூடி இருக்கிறார்.
பைசன், திரைப் பரவசம்.
