ஆண்பாவம் பொல்லாதது — திரை விமர்சனம்

நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இளம் தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஈகோ குறுக்கிட்டு சந்தோஷத்தை கலைத்து போடுகிறது. கணவனை புரிந்து கொள்ளாத மனைவி, மனைவியை முழுசாக தெரிந்து கொள்ளாத கணவன் என்ற கோணத்தில் சண்டை சச்சரவுகள் தொடர, ஒரு கட்டத்தில் அதுவே மனைவியின் கரு கலைந்து போகவும் காரணமாகிறது.
இந்த சூழலில் மனைவி விவாகரத்து கோரி கோர்ட்டை நாட…
அப்படி ஒரு சிந்தனையே இல்லாத கணவன் அதிர்ந்து போகிறான்.
கோர்ட்டில் நீதிபதியிடம் சேர்ந்து வாழவே விருப்பம் என்கிறான்.
என்னதான் சிக்கல் ஏற்பட்டாலும் விவாகரத்து பெற்றே தீருவேன் என்ற பிடிவாதத்தில் மனைவி இருக்க, அவருடன் சேர்ந்து வாழ்வதில் ரியோ ராஜ் உறுதியாக இருக்க..
இறுதியில், இருவரில் யார் வெற்றி பெற்றது ? என்பதை தற்போதைய தம்பதிகளின் வாழ்க்கைக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
கதைப்படி பார்த்தால் இந்த படம் சீரியஸாகத் தானே இருக்க வேண்டும்… அதுதான் இல்லை. படம் முழுக்க கலகலப்பு கொடி கட்டுறது. அதுவே திரைக்கதையின் வெற்றிக்கும் காரணமாகி விடுகிறது.
இளம் தம்பதியாக ரியோ ராஜ்- மாளவிகா. பொருத்தம் என்றால் பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம். கொஞ்சுவதிலும் சண்டை போட்டுக் கொள்வதிலும் இந்த ஜோடியிடம் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
ஒரு கட்டத்தில் இன்றைக்கு என்ன காரணத்துக்காக சண்டை போடப் போகிறார்கள் என்று ரசிகனே ஆவலுடன் எதிர்நோக்கும் அளவுக்கு அந்த சண்டைகள் சுவாரசியமிக்கவை என்பது சிறப்பு. மொத்த படத்தையும் தங்கள் நடிப்பால் தூக்கி சுமந்து இருக்கிறது இந்த இளம் ஜோடி. இருவருக்கும் தினம் தினம் ஏற்படும் சில்லறைச் சண்டைகள் தற்போதைய தம்பதிகள் கடந்து போகும் சம்பவங்கள் என்பதால், ஒவ்வொரு காட்சியிலும் உயிரோட்டம் ‘உள்ளேன் ஐயா’ என்கிறது.

வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த்,– ஷீலா ஜோடி படத்தின் இன்னொரு பக்க சுவாரஸ்ய இணைப்பாகி விடுகிறார்கள். அவர்கள் பிரிந்து வாழும் தம்பதிகள் என்பது ஒரு புறம் இருக்க, அவர்களில் கணவர் நாயகனுக்கும் மனைவி நாயகிக்கு மாக கோர்ட்டில் ஆஜராகும் காட்சிகள் படத்தின் விறுவிறுப் புக்கும் உத்தரவாதம் ஆகி விடுகின்றன.
கணவர் மீதான கோபத்தை கண்களுக்குள்ளேயே வைத்திருக்கும் ஷீலாவும், மகளை வீடியோ காலில் பார்த்த ஆனந்தத்தில் மகிழ்ச்சி மழையில் நனையும் விக்னேஷ் காந்தும் ஒருசேர ரசிகர்களின் இதயத்துக்குள் இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.
விக்னேஷின் உதவியாளராக வரும் ஜென்சன் நகைச்சுவை பொறி பறக்கிறது. அவர் வார்த்தைகளை உதித்தாலே சிரிப்பு மழை தான் போங்க. ‘டேய் இவ்வளவு வசதி இருந்துமா எனக்கு மட்டமான சரக்கு வாங்கி கொடுத்தே?’என்று நாயகனை சாடும் இடத்தில் அந்த சரவெடி காமெடியில் அதிர்கிறது திரையரங்கம்.
நாயகியின் அப்பாவாக வந்து வழக்கறிஞர் ஷீலாவை கரித்துக் கொட்டும் இடத்தில் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் கவனம் பெறுகிறார்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். பின்னணி இசையிலும் பின்னி எடுத்து இருக்கிறார் மனிதர்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா கண்களுக்கு ஒளி ஓவியம் படைக்கிறது.
இளம் தம்பதியின் வாழ்க்கையை மையக்கருவாக வைத்துக் கொண்டு கதை எழுதியிருக்கும் சிவகுமார் முருகேசன் மற்றும் கலையரசன் தங்கவேல் இன்றைய தம்பதிகளின் ஈகோவை நாடி பிடித்து பார்ப்பதில் முழு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இயக்கி இருக்கிறார் கலையரசன் தங்கவேல். தம்பதியருக்குள் ஈகோ முளை விட
சோசியல் மீடியாவும் முக்கிய காரணம் என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி இருப்பது சிறப்பு. மனைவி மீதான கோபம் மெல்ல மெல்ல மாற்றம் கண்டு அவளது விருப்பத்துக்கு அதாவது
விவாகரத்துக்கு கணவன் சம்மதிக்கும் இடம் ஈகோக்களை உடைத்து நொறுக்கும் அதி உன்னத இடம். வழுக்குப் பாறையில் வழுக்காமல் நடக்கும் சவால் மாதிரியே இந்த கதைக்குள் ளும் கலகலப்பு சரவெடியாய் ஒரு அற்புத மேஜிக் நடத்தி இருக்கிறார்
இயக்குனர்.
முடிவாக ஒன்று. தமிழ் சினிமாவில் எப்போதாவது
இம்மாதிரி அதிசயங்கள் நடக்கும். தற்போதைய அதிசயத்தின் பெயர் ‘ஆண்பாவம் பொல்லாதது.’