தேரே இஷ்க் மே –திரை விமர்சனம்

தனுஷ், கிருத்தி சனோன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தி படம். தமிழிலும் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். தேரே இஷ்க் மே என்ற ஹிந்தி தலைப்புக்கு தமிழில் ‘உன் காதலில்’ என்று பொருள்.
கதைக்கு வருவோமா..

இந்திய விமானப்படையில் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகிறார். கட்டுப்பாட்டுடன் இவர் செயல்பட வேண்டும் என்பதற்காக சைக்காலஜி மருத்துவரிடம் கவுன் சிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறதுஇந்த உத்தரவு நாயகி கிருத்தி சனோன் இடம் செல்ல, தானே முன் வந்து தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறுகிறார்.

ஏற்கனவே இருவருக்குமான முன் கதை சுருக்கம் இருக்க, பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அவர்கள் சந்திக்கிறார்கள்.

இப்போது அந்த முன் கதைக்கு வருவோமா…

கல்லூரி மாணவரான தனுஷ் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிதடி என்று இறங்கி விடுவார். இது ஒரு பக்கம் இருக்க, தனது ஆய்வறிக்கை (thesis) மூலம் எப்படிப்பட்ட வன்முறை மனிதனாக இருந்தாலும், அவனை சராசரி மனிதனாக மாற்ற முடியும் என ஒரு ஆய்வு கட்டுரை தயார் செய்து அதில் முனைவர் பட்டம் வாங்க வேண்டும் என்பது அவரது நோக்கம்.

இதற்காக அவர் தேர்ந்தெடுப்பது கோபக்கார தனுஷை. அவரிடம் குடி கொண்டிருக்கும் கோப குணத்தை அடியோடு மாற்றி இயல்பான மனிதர் ஆக்கிவிட்டால்

கிருத்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார்
கிருத்தி.

ஆனால், தனுஷோ, ‘நீ என்னை உண்மையாக நேசித்தால் நான் அடியோடு மாறி விடுவேன்’ என்கிறார்.
சரி சொன்ன கிருத்தி, அவரிடம் படிப்படியாக அன்பை விதைக்கிறார். அழகும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற கிருத்தியின் தனுஷ் மீதான அணுகுமுறை அவரை அசைக்கிறது படிப்படியாக கோபம் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொள்கிறது.

இந்த இடைப்பட்ட நாட்களில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.

தனுஷும் அப்படியே போக, கிருத்தியின் அதிகாரம் பலம் வாய்ந்த அப்பாவோ அவமானப்படுத்தி அனுப்புகிறார். நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. மாநில அரசின் ஜாயிண்ட் செகரட்டரி என்ற உயர் பதவியில் இருக்கிறேன். நீ ஐஏஎஸ் படிப்பின் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு என்னை வந்து பார் என்கிறார்.

அவரது சவாலை ஏற்கும் தனுஷ், கிருத்தியிடம்,,உன் அப்பா சொன்ன அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற்ற பிறகே உன்னை போனில் தொடர்பு கொள்வேன்…’ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மூன்று வருடங்களுக்கு பின், ஐ ஏ எஸ் முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்ற கையோடு கிருத்தியை ஃபோனில் தொடர்பு கொண்டபடி அவரது இல்லம் வருகிறார்.

அங்கே கிருத்தியின் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது.

‘அப்புறம் என்ன… என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு’ கதை தான். மறைந்த கோபம் மறுபடியும் அவருக்குள் விஸ்வரூபம் எடுக்க, பெட்ரோல் குண்டு வீசி ரகளை செய்கிறார். அவரை அடித்து நொறுக்கும் போலீஸ் படை ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறது. தனுஷுக்காக அவர் தந்தை பிரகாஷ் ராஜ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவ தற்குள் இறந்தும் போகிறார்.

இதன்பிறகு கிருத்தியின் திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போகிறது. அதன் பிறகு அவர்கள் சந்திக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தனுஷ் விமானப்படையில் பொறுப்பான பதவியில். இங்கும் அவ்வப்போது தலை தூக்கும் அவரது கோபம் வேலைக்கு பிரச்சனை ஆகிறது. மனோதத்துவ ரீதியில் அவர் நார்மலாக தான் இருக்கிறார் என்று அதற்கான அதிகாரி சான்றிதழ் கொடுத்தால் தான் வேலையில் நீடிக்க முடியும்.

கிருத்தி இப்போது பழைய நபர் இல்லை. குடித்து குடித்து உடம்பு பாழ் பட்ட நிலையில் நிறை மாத கர்ப்பிணி வேறு.

‘என் நாட்கள் முடிகிறது. இப்போது உன்னைத் தவிர எனக்கு என்று யாரும் இல்லை. பிறக்கப் போகும் என் குழந்தையை உன்னிடம் விட்டுப் போகிறேன். பார்த்துக்கொள்’ என்று கெஞ்சலும் கண்ணீருமாய் கேட்டுக்கொள்கிறார். அப்படியே தனுஷ் வேலை பார்க்க தகுதியானவர் என்ற சான்றிதழும் தருகிறார்.
நேசித்த பெண்ணின் கடைசி ஆசையை தனுஷ் நிறைவேற்றினாரா என்பது கிளைமாக்ஸ்.

ராஞ்சனா படத்துக்கு பிறகு இயக்குநர் ஆனந்த் எல். ராயும் தனுஷும் மீண்டும் இணைந்திருக்கும் படம் இது. ஆனால் முந்தின படத்தை போல் இந்த படம் இல்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஏற்கனவே தனுசுடன் காதலில் இருக்கும்

கிருத்தி அப்புறமாய் கல்லூரி நண்பன் என்று கூறியபடி இன்னொருவனுடன்n குற்ற உணர்வு எதுவும் இன்றி திருமணத்துக்கு தயாராகிறார். இந்த விதத்தில் உண்மைக் காதலுக்கு துரோகம் செய்வது அவர்தான். அப்புறமாய் நான் காதலிக்கவில்லை நட்பாகத் தான் பழகினேன் என்று சொல்லிவிட்டு அதன் பிறகு கல்லூரி நண்பனுடன் நிச்சயதார்த்தம். ஆனால் திருமணம் நடக்காமல் நின்று போகிறது. மகளின் ன் வாழ்க்கையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டு விட்டோமே என்ற வேதனையில் அப்பாவும் போய்ச் சேர…

இதன் பிறகு கிருத்தி எந்நேரமும் மது போதையில். அதோடு கர்ப்பிணி வேறு.( கணவர் இல்லாமலே கர்ப்பமா…)

ஒரு வித்தியாசமான காதல் கதையை சொல்ல வேண்டும். அது இதற்கு முன் வந்த எந்த கதையை போலவும் இருக்க கூடாது என்று யோசித்து யோசித்து இந்த பருத்தி முட்டையை குடோனில் இருந்து தூக்கி வந்திருக்கிறார். காதலா இல்லையா காதலா இல்லையா என்று குழப்பம் மிக்க இப்படி ஒரு அபத்தமான காதல் கதை தான் அவருக்கு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காதல் விஷயத்தில் நாயகிக்கு அடிக்கடி ஏற்படும் தடுமாற்றம் தான் கதைக்களம் என்றால் அதையாவது தெளிவாக சொல்லி இருக்க வேண்டும்.
நடிப்பை பொறுத்தவரையில் தனுஷும் சரி கிருத்தி சனோனும் சரி எந்தக் குறையுமே வைக்கவில்லை. இயக்குனர் எதிர்பார்த்ததற்கு ஒரு படி மேலாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களை தாண்டி அனைவரையும் கண்கலங்க வைத்தவர் தனுஷின் அப்பா கேரக்டரில் வரும் பிரகாஷ் ராஜ். மகனுக்காக ஒரு தந்தை எந்த எல்லைக்கும் செல்வான், அது தனது கவுரவத்தை விட்டுக் கொடுப்பதற்கும் என்பதை பிரகாஷ் ராஜ் தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரஹ்மானின் இசை எனலாம். பாடல்களும் பின்னணி இசையும் நிஜமாகவே வேறு லெவல்.