எவ்வளவு பெரிய அதிகாரத்தையும் ஒரு எளிய புன்னகை வென்று விடும் என்பது இந்த கதை சொல்லும் பொது நீதி.
எளியவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளோடு வாழும் சசிகுமாரும், அவரது மனைவியும் லோக்கல் அரசியல்வாதி ஒருவனால் அவர்கள் உயிருடன் இருந்தும் இறந்து போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.
நாங்கள் இறந்து போகவில்லை. வெளியூரில் தான் இருந்தோம்’ என்று கதறி கண்ணீர் விட்ட போதிலும், அரசு அதிகாரிகள் அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டு தங்கள் அடுத்த பணிக்கு போய் விடுகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இரண்டும் கேள்விக்குறி ஆகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த ஒரு அபூர்வ வாய்ப்பு மூலம் சாமான்ய சசிக்குமார் அரசுக்கு புகட்டும் பாடமே படம்.
மத்திய மந்திரியான ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி உயிருக்கு போராடும் நிலை. இதனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முயற்சியில் ரகசிய ஏற்பாடுகளை முடுக்கி விடுகிறார். அதே சமயம், அவரது ரத்தப் பிரிவு அரிதிலும் அரிதானது என்பதால், அவருக்கான மாற்று சிறுநீரகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்திய அளவில், அவருக்கான மாற்று சிறுநீரகத்தை தேட, வட மாநிலத்தில் ஒருவர், தென் தமிழகத்தில் ஒருவர் என இருவர் சிக்குகிறார்கள். வட மாநில பிரஜை ஒரு சில மருத்துவ காரணங்களால் தவிர்க்கப்பட… தென் தமிழகத்தின் கோவில்பட்டி சசிகுமார் மட்டுமே இப்போது அவர்களது ஒரே சாய்ஸ்.
சசிகுமாரை தேர்வு செய்யும் மத்திய மந்திரி தரப்பு, சசிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இரண்டையும் ஒரே நாளில் பெற்றுத் தருகிறார்கள். அதோடு அவரை ரகசியமாக சென்னைக்கு அழைத்து வர முயற்சிக்கிறார்கள். அவர்களது வழியில் சென்று தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரசு இயந்திரத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் சாமானியனான சசிகுமார் எழுதும் தீர்ப்பு தான் இந்தக் கதையின் மையப்புள்ளி.
அப்பாவி முகம், போராட்ட வாழ்க்கை, வெள்ளந்தி சிரிப்பு என்று சசிகுமாருக்கு இந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்தி விடுகிறது. அதிகார வர்க்கத்தினால் பாதிக்கப்படும் சாமானியர்களை தனது உடல் மொழிகளால் பிரதிபலித்திருக்கும் சசிகுமார், நடிப்பில் அடுத்த படி எடுத்து வைத்திருக்கிறார். விருது நிச்சயம்.
சசிகுமாரின் மனைவியாக வரும் சைத்ரா ஜே.ஆச்சார் திரை தந்த இன்னொரு நடிப்பு ராட்சசி. உடல் நலமற்ற நிலையை வேதனையின் விளிம்பு நிலை வரை தனது உடல் மொழியால் நமக்குள் அற்புதமாக கடத்தி விடுகிறார். குறிப்பாக தந்தை ஆவி அவருக்குள் வரும் நேரத்தில் அவர் சுருட்டு பிடிக்கும் ஸ்டைலே தனி. அம்மணிக்கும் விருதுகள் காத்திருக்கு.
மத்திய மந்திரியாக வரும் ஆஷா சரத், அதிகாரத் திமிரை தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தும் இடங்களில் மிரட்டி விடுகிறார், மிரட்டி. மகனும் மகளும் கிட்னி தர மனமின்றி ஏமாற்றி விட்ட நிலையில், அதை மனதளவில் ஜீரணிக்க முடியாமல் அவர் காட்டும் முக பாவங்கள் அத்தனை யதார்த்தம்.
பத்திரிகையாளராக வரும் குரு சோமசுந்தரம், இந்தக் கதையின் இன்னொரு ஆணிவேர். அரசியல்வாதிகளின் அட்டூழியத்தை தோலுரித்ததற்காக அவர்களின் குண்டர்களால் அடிபட்டு, மிதிபட்டாலும் அதை சகஜமாக எடுத்துக் கொண்டு அடுத்த ஆபரேஷனுக்கு தயாராகும் நேர்மையின் சிகரமாக நடிப்பில் ஜொலிக்கிறார். இம்மாதிரி கேரக்டர்களுக்கு நிச்சயம் இவர் தான் குரு.
ஹைகோர்ட் நீதிபதியாக ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞராக இயக்குநர் கோபி நயினார், வட்டி தொழில் செய்யும் வசுமித்ரா படத்தின் பிரதான பாத்திரங்களை தங்கள் நடிப்பால் நிரப்புகிறார்கள்.
பிரமாண்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எளிய மனிதர்களின் வாழ்வியலை தனது கேமராவில் அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஷான் ரோல்டனின் இசை படத்தின் ஜீவனாகவே உலா வருகிறது. பாடல்கள் பின்னணி இசை.
ஓ லார்ட்’ ரகம். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை கதைக்களமாக எடுத்துக்கொண்டு மாயாஜாலம் செய்வதில் எப்போதுமே வித்தகர் ராஜூ முருகன். இந்தப் படத்திலும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்து இருக்கிறது.
கதைக்கான பாத்திரத் தேர்வுகள் சசிகுமார், சைத்ரா, குரு.சோமசுந்தரம் உள்ளிட்ட கலைஞர்கள் மூலம் வெளிப்படும் இடங்களில் ராஜ்முருகன் நம் கண் முன்பு வியாபித்து நிற்கிறார்.
இந்த ‘மை லார்ட்’ எளிய மனிதர்களின் ஏற்றமிகு அடையாளம். ரேட்டிங்: 7.2/ 10.