இதயம் திரைப்படத்தில் தனது காதலை நாயகியிடம் கடைசி வரை சொல்லாமலே இருந்து விடுவார் நாயகன் முரளி.
அப்பா முரளியின் காதல் இப்படி என்றால் மகன் அதர்வா காதல் வேறு ரகம். பள்ளியில் தொடங்கிய முதல் காதல் சொல்லப் படாமலே தோல்வியில் முடிகிறது.
அந்த வலிக்கு கல்லூரி காலத்தில் மருந்தாக அமைகிறது அடுத்த காதல். இந்தக் காதலை யாவது காதலியிடம் சொன்னாரா என்றால், ஊஹூம்.
இனி காதல் நமக்கு செட்டாகாது என்று முடிவு செய்த தருணத்தில் மாமா நட்டி திருமணத்துக்கு ஒரு பெண்ணை காட்டுகிறார். இருதரப்பிலும் பிடித்து திருமணம் உறுதியாகிறது. திருமணத்துக்கு இன்னும் சிலநாட்களே இருக்கும் நிலையில் பள்ளிக் கால காதலி மறுபடியும் நாயகனின் காதல்
வளையத்துக்குள் வருகிறாள். இப்போது நாயகன் என்ன முடிவெடுக்கிறான் என்பது கிளைமாக்ஸ்.
நாயகன் அதர்வா இந்த கேரக்டரை ரசித்து செய்து இருக்கிறார். ஒவ்வொரு காதலாக புட்டுக் கொண்டு போகும் இடங்களில் அப்பா முரளியை நம் மனக்கண்ணில் நிறுத்துகிறார்.
நடை உடை பாவனை அனைத்தும் திரையில் அவரை புதிதாக காட்டியிருக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் அழகுப் பதுமைகளாக வருவதோடு கொஞ்சம் நடித்து விட்டும் போகிறார்கள்.
அதர்வாவின் மாமா வேடத்தில் வரும் நட்டி அந்த கேரக்டரை ரசித்து செய்திருக்கிறார்.
தமன்.எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஏனைய கேரக்டர்களில் கதைக்களத்து மாந்தர்களாக ஜொலிக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம ஹம்சாவின் கேமரா, காட்சிகளை கண் முன் கொண்டு வந்து கதையை நமக்கு நெருக்கமாக்கி விடுகிறது.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கலாம் ரகம். பின்னணி இசை காட்சிகளோடு அழகுற கைகோர்க்கின்றன.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி இருக்கிறார். நாயகனின் அடுத்தடுத்த காதல்களை ஒருதலையாக கோர்க்க முயன்றதில் பாதிக்கிணறு மட்டுமே தாண்டி இருக்கிறார்.
இதயம் படத்தில் அப்பாவின் காதல் சொல்லப்பட்ட விதம் வேறு. அதுவே அந்த இதயத்தை இப்போது வரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இந்த கதையில் நாயகன் தன் காதலை சொல்ல தயங்கும் கூச்ச சுபாவி கிடையாது. அதற்கேற்ப கதையில் சற்று மாற்றம் செய்திருந்தால் படத்தின் லெவலே வேறு.
பிளஸ்: வியக்க வைக்கும் பிரம்மாண்ட காட்சியமைப்பு.
பிளாஷ்: அமெரிக்க அழகு வரை அள்ளிக் கொண்டு வந்த கேமரா.
ரேட்டிங்: 5/10.
