லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டாப்ஸி அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் விக்ரம் கோச்சார், (அனில் குரோவர் ஆகியோருடன் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்காது. அதனால் பஞ்சாப்பில் இருக்கும் தங்கள் நண்பர் ஷாருக்கானுக்கு போன் செய்கிறார் டாப்சி. அவர், அவர்களைத் துபாய் வரச் சொல்கிறார். அவர்கள் அங்கு சென்றார்களா? பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு ஏன் விசா வழங்கவில்லை? அவர்கள் லண்டன் சென்றது எப்படி? அவர்கள் போன் செய்து அழைத்த ஷாருக்கான் யார்? என்பதற்கு விடை, உணர்வும் உயிரோட்டமுமான திரைக்கதை.
வெளிநாட்டு மாயையில் சட்டவிரோதமாக நாடு கடப்பவர்களின் உயிர் வலி பயணத்தை வேதனையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சொந்த நாட்டு சுகத்தை எந்த நாடும் தராது என்பதையும் ஆணி அடித்த மாதிரி பதிவு செய்திருக்கிறார்,
பெருங்கனவோடு இங்கிலாந்து செல்வதற்கான நேர்மையான வழிகளில், தோற்ற பிறகு, அவர்கள் சட்டவிரோதமான வழியைத் தேர்வு செய்கிறார்கள். அந்த வழி, பெரும் வலி நிறைந்தது என்பதை உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கிறது படம்.
உயிரைபணயம்வைத்து இலக்கை அடைந்தாலும் அங்கு, தாங்கள் கனவு கண்ட வாழ்க்கை இல்லை எனும் இடத்தில் இதற்கா இத்தனை ஜீவ மரணப்போராட்டம் என்றகேள்வியை நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள், சற்று ஆழமாகவே.
இளைஞர்-முதியவர் என்று இரண்டு கெட்டப்புகளிலுமே நடிப்பில் மாறுபாடு காட்டி கவர்கிறார், ஷாருக்கான். டாப்சியுடனான காதல் காட்சிகளிலும், பயணத்தின் போதான சென்டிமெண்ட் காட்சிகளிலும் நடிப்பு, ரொம்பவே சிறப்பு. கோர்ட்டில் நீதிபதியிடம் தங்கள் கையறு நிலை சொல்லும் இடத்தில் அவரும் கலங்கி நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.
டாப்ஸி ஷாருக்கானுடனான காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.. லண்டன் செல்ல ஆங்கிலத்தில் பயிற்சி பெறும் இடத்தில் டாப்சி அண்ட்கோவின் ரகளை அனைத்தும் ரசனை.
இங்கிலாந்தில் கணவரால் கொடுமைப்படுத்தப்படும் தனது காதலியை மீட்பதற்காக இங்கிலாந்து செல்ல முயற்சிக்கும் சுகி, அது முடியாமல் போகும் போது கதறுவதும், பிறகு தனது காதலிக்கு நேர்ந்த சோகத்தால் எடுக்கும் விபரீத முடிவும் கண்களை வெள்ளமாக்கி விடுகிறது.
முதல்பாதி கலகலப்பு. இரண்டாம்பாதி உணர்வின் உச்சம். 5 வருடங்களுக்குப் பிறக இயக்கிய இந்த படத்திலும் தனது இயக்க முத்திரையை ஆழமாகவே பதித்து விடுகிறார், ராஜ்குமார் . அதோடு வெளிநாட்டு மோகம் கொண்டவர்களுக்கும் பாடம் நடத்தியிருக்கிறார்..
