சலார் திரை விமர்சனம்

இந்தியாவின் எந்த சட்ட திட்டங்களும் நுழைய முடியாத இடம் கன்சார் ராஜ்ஜியம். இங்கே உள்ள அதிகார போட்டியை சமாளிக்கவும், எதிரிகளை வீழ்த்தவும் தனது பால்ய கால நண்பன் பிரபாசை அழைத்து வருகிறார் இளவரசன் பிருத்விராஜ். .அந்த நண்பன் ஆடும் ரணகள ஆட்டம் தான் சலார்.
சலார் என்றால் மன்னன் கேட்பதை எல்லாம் தருபவன் என்று அர்த்தம்.

நண்பர்கள்பிரிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிருத்விக்கு ஒரு பிரச்சினை வர, மீண்டும் கான்சாருக்குள் நுழைகிறார் பிரபாஸ்.. அப்படி பிருத்வியின் அந்த இக்கட்டான பிரச்சினையை பிரபாஸ் எப்படி எதிர்கொள்கிறார்?, பிரபாசுக்கும் கான்சாருக்கும் உள்ள உறவு என்ன? தேவாவின் வருகை கான்சாரை எப்படி புரட்டிப் போடுகிறது? கேள்விகளுக்கு தன் ஸ்டைலில் ஒரு ஆக்ஷன் திரைக்கதையை அமைத்து ரத்தமும் சதையுமாய் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

கே.ஜி.எப்.பின் தொடர் வெற்றிகளில் புகழின் உச்சம் தொட்ட பிரசாந்த் நீல், பாகுபலி வெற்றிநாயகனுடன் இணைந்து இந்த சலாரை பிரமிப்பூட்டும் வகையில் தந்திருக்கிறார்.

அதிகம் பேசாமல் ஆக்ஷனில் பேசுகிறார், பிரபாஸ். அடிக்கிற அடி ஒவ்வொன்றும் இடியாக நம் இதயம் வரை இறங்குகிறது. ஆறடிஉயர ஆஜானுபாகு தோற்றம் அவர் நூறு பேரை அடித்தாலும் நம்பச் சொல்கிறது. சத்தியத்துக்கு கட்டுப்பட்ட ‘அம்மாபிள்ளையாக’ அடக்கி வாசிக்கும் இடத்திலும் இவர் நடிப்பு வேறு லெவல்.

இரண்டாம் தாரத்து இளைய இளவரசனாக, அதற்காக அவமானங்களை சுமக்கும் இடத்தில் தன் கேரக்டர் தேர்வை நியாயப்படுத்துகிறார், பிருத்விராஜ். ஆரம்ப கட்ட பரபரப்புக்கு ஸ்ருதிஹான் பயன்படுகிறார். கதையே இவர் வழியாகத்தான் பயணிக்கிறது என்பதால் அவ்வப்போது திரையில் இவரை பார்க்க முடிகிறது.

கண்டிப்பான அம்மா கேரக்டரில் ஈஸ்வரி ராய், சாணக்கிய இளவரசனாக பாபிசிம்ஹா, விசுவாச பிரஜையாக மைம்கோபி கேரக்டர்களில் மணம் வீசுகிறார்கள். வில்லியாக ஸ்ரேயா ரெட்டி தனித்துவம் கரட்டுகிறார்.

ஆர்ட் டைரக்ஷன் அப்படியே KGF படத்தை நினைவூட்டுகிறது.

படத்தின் ரசிக்கும் படியான விஷயம் புவன் கௌடாவின் ஒளிப்பதிவு. லைட்டிங் மற்றும் கோணங்கள் ரசிக்க வைக்கிறது. சலார் படத்திற்கு இரண்டாம் பகுதி இருப்பதாக கடைசியில் லீட் தருகிறார்கள். இப்படி உயிரான நண்பர்கள் எப்படி எதிரியாகிறார்கள் என்பதே இரண்டாம்பாகம் என்பதால் அதற்குமான எதிர்பார்ப்பு இப்போதே நமக்குள்..
சலார், பிரமாண்டம், பிரமிப்பு.