‘‘தனக்கு எந்தக் கதை பொருத்தமாக இருக்கிறதோ அதனைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்…’’
‘ஆலன்’ பட விழாவில் நடிகர் வெற்றிக்கு தயாரிப்பாளர் டி.சிவா பாராட்டு
இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆலன்.’ வெற்றி,மதுரா,அனு சித்தாரா, கருணாகரன்,விவேக் பிரசன்னா,’அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசை.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் வழங்குகிறார்.
‘ஆலன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ்,தயாரிப்பாளர் டி.சிவா,இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும்,இயக்குநருமான ஆர்.சிவா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில்….
இது என்னுடைய இரண்டாவது திரைப்படம்.இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன்.ஏன் எழுத்துகளைப் பற்றிப் பேசினேன் என்றால்? என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறையப் புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன்.இந்தத் தருணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள்.இதற்காகவே அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கைக்குப் புத்தகத்தைப் படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன்.இயக்குநர் கே.பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தைத் தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது.நாமும் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும்.இயக்குநராக வேண்டும் என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன்.ஆனால் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாகவும்,குடும்பப் பொறுப்பினைச் சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்குச் சென்றேன்.அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது.அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது.அப்போதுதான் என் ஆழ் மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும்.ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.அதனால் தான் இரண்டாவது படமாக ‘ஆலன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன்.இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காகக் கொடைக்கானல் சென்று இருந்தோம்.அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும்.அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டார். ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா? எனக் கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன்? என்று கேட்டபோது, ‘அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்’ என பதில் அளித்தான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறை அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நான் நல்ல விசயத்தைச் சொல்வதற்கு புத்தகத்தைப் படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது.
என் குருநாதர் கே.பாக்யராஜ்.அவருடைய எழுத்தில் வெளியான பாக்யா எனும் வார இதழின் முதல் பிரதியை வாங்குவதற்காக 12 கிலோமீட்டர் அதிகாலையிலேயே பயணித்து வாங்கிப் படித்திருக்கிறேன்.அந்த அளவிற்கு வாசிப்பின் மீது தீராக் காதல் எனக்கு உண்டு.
இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், இராமேஸ்வரம் எனப் பல இடங்களுக்குச் சென்று இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்ததால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும்..ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான்.அதுதான் அதிகம் தேவை. இயற்கையைக் கொண்டாடுங்கள்.அன்பைக் கொண்டாடுங்கள்.காதலைக் கொண்டாடுங்கள்.இந்த உலகம் அமைதியாக வாழும்.இந்தத் தலைமுறை அமைதியாக பாதுகாப்பாக வாழும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .
‘ஆலன்’ படத்தினை வழங்கும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜி.தனஞ்ஜெயன் பேசுகையில்…
இந்தத் திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாகப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது.இது ஆங்கிலப் படமா? என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது.நான் தினமும் நிறையப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது.

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும் அவருக்கு சினிமா மீது ஒரு தீராத காதல்.அங்கிருந்து இங்கு வருகை தந்து படத்தை இயக்கி விட்டு மீண்டும் அங்கு சென்று விடுகிறார்.அவருக்காக இங்கு ஒரு குழு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது.பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கும் சினிமாவை எந்தவித சமரசம் இன்றி உருவாக்கி இருக்கிறார்.காதலும் அன்பும் கலந்த ஒரு படைப்பைத் தந்திருக்கிறார்.இந்த உலகத்திற்கு காதல் தான் முக்கியம் வன்முறை முக்கியமல்ல. அன்பைத் தேடி நாம் பயணித்தால் போதும்.வாழ்க்கை சிறக்கும்.வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை நான் ஒரு கவித்துவமான படைப்பாகப் பார்க்கிறேன்.
இந்தப் படத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்தத் திரைப்படம் மக்களைச் சென்றடைய வேண்டும்.அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார்.ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார்.நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளைச் செய்யச் சம்மதித்தேன்.இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார்.இந்தப் படத்தை பார்க்கும் போது..மக்களுக்குத் தேவையான விசயத்தைத் தான் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.இந்தத் திரைப்படத்தை வெகுவிரைவில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்.அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் வெற்றி அவருடைய பயணத்தில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.’எட்டு தோட்டாக்கள்’,’ஜீவி’,’பம்பர்’ என வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர் மேலும் பல நல்ல வெற்றிகளைத் தர வேண்டும். கவிஞர் மனுஷ்யபுத்திரன்,கேபிள் சங்கர் ஆகியோரும் இந்தத் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா பேசுகையில்….
இது என்னுடைய முதல் படம்.இந்தத் திரைப்படத்திற்கான வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.இதற்கு முன் நான் ஒரு படத்திற்காக இசையமைக்க ஒப்பந்தமானேன்.அந்தப் படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்தேன்.அந்தப் பாடல்களை ஒளிப்பதிவாளர் விந்தன் கேட்டார்.அவரின் பரிந்துரையின் பேரில் தயாரிப்பாளர் இயக்குநர் சிவா அந்தப் பாடல்களைக் கேட்டு,இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார்.இந்தத் திரைப்படம் என்னுடைய அறிமுகப் படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.இருந்தாலும் அனைவரின் ஆசியையும் கோருகிறேன்.
படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பு நன்றாக இருந்தது.படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்….
தயாரிப்பாளரும்,இயக்குநருமான ஆர்.சிவாவின் பேச்சில் சமூக அக்கறை தெரிந்தது.அவருடைய நல்ல எண்ணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தமிழ்த் திரை உலகில் நிதானமாகப் பயணித்து நல்லதொரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றிக்கு இந்தத் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும்.அவர் நடித்த முதல் படமான எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன்.மிகவும் நல்ல மனிதர். தனக்கு எந்தக் கதை பொருத்தமாக இருக்கிறதோ அதனைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கும்,பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தனஞ்செயன் எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும்.அவர் இணைந்திருக்கும் இந்த ஆலன் படத்திற்கும் அவர் உச்சபட்ச உழைப்பை வழங்கி இந்தப் படத்தில் வெற்றிக்கு பாலமாக இருப்பார் என்றார்.
நடிகர் வெற்றி பேசுகையில்….
தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம்.ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார்.
கதையை படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது.இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது.பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன்.காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளரிடம் சொன்னேன்.அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்யத் தயாராக இருந்தார்.
படத்தை கஷ்டப்பட்டுத் தான் உருவாக்கியிருக்கிறோம்.படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார்.இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள் என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில்….
சிறிய முதலீட்டுத் திரைப்படங்களைத் திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன்.அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது.இவர் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது இரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால்…அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்.இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்… புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது.
தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.பேரும் புகழும் வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்கு வருவார்கள் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருவார்கள்.நானும் பேரும் புகழுக்காகத் தான் திரைத்துறையில் நுழைந்தேன்.அதன் பிறகு சம்பாத்தியம் கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு விசயத்தைக் கடந்து வேறு ஒரு விசயம் இருக்கிறது என்பதை சிவா சொல்லும்போது மிகவும் நெகிழ்வாக இருந்தது. சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது.
குடும்பச் சூழல் காரணமாக சிங்கப்பூருக்குச் சென்று அங்கு சம்பாதித்து,சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து,மேலும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல்…சினிமாவில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ..அதை ஆத்மார்த்தமாக செய்வதற்காக ஆலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.நஷ்டத்தை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
அவருடன் பேசும்போது எழுத்தாளர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் நிறைய மரியாதை இருக்கிறது.ஆனால் இங்கு தான் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை எனக் குறிப்பிட்டார்.அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்தப் படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்.
உண்மையில் கதை என்பது நம்முடைய வாழ்வில் இருந்து எடுப்பதுதான்.ஒவ்வொருவரும் கதாசிரியர்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பாதித்த விசயத்தை நினைவு படுத்தி எழுதினால் அதுவே சிறந்த கதையாக இருக்கும்.

சினிமாவிற்கு வரும்போது ஒன்று அல்லது இரண்டு கதைகள் உடன் வந்தால் போதும்.அதன் பிறகு இங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து கதையை உருவாக்கிக் கொள்ளலாம்.என்னிடம் முதலில் சுவரில்லாத சித்திரங்கள் கதை மட்டும் தான் இருந்தது.அதன் பிறகு தான் ஒரு கை ஓசை படத்தின் கதை உருவானது.அதன் பிறகு மௌன கீதங்கள்…இப்படி படிப்படியாக அனுபவங்களின் மூலம் கதைகளை உருவாக்கினேன்.
நம் வாழ்க்கையைப் பார்ப்பதும் ஒன்றுதான்.புத்தகங்களைப் படிப்பதும் ஒன்றுதான்.ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களைச் சந்தித்திருக்க முடியாது.ஆனால் புத்தகங்களைப் படிக்கும் போது தான் அந்த கதாசிரியர்.. அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களைக் கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார்.
நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள்,ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றைப் படித்திருக்கிறேன்.இது போன்ற ஏராளமான புத்தகங்களைப் படிக்கும் போது புதிய புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும்.
அதேபோல் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.கடைசி வரை நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கும்.இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்குத் தெரியவில்லை.இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார்.இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது.

இந்தப் படம் காதலும் ஆன்மீகமும் கலந்த படம்.இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும்.’எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம். இதுவும் என்னைக் கவர்ந்தது.
சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
