பிளாக் மெயில் — திரைப்பட விமர்சனம்

ஸ்ரீகாந்த்-பிந்து மாதவி தம்பதிகளின் பெண் குழந்தை கடத்தப்பட்டதிலிருந்து படத்தை ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு புறம் கதை நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது பாஸ் கொடுத்த பார்சல் ஒன்றை உரியவரிடம் சேர்க்கப் போகும் இடத்தில் பார்சலோடு வேனையும் திருடர்கள் கடத்திப் போய் விடுகிறார்கள்.

அந்த பார்சலில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததை ஜிவி தான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்படும் உரிமையாளர் ஜிவியின் காதலியை கடத்தி வைத்துக் கொண்டு, பார்சலை கொடுத்துவிட்டு இவளை மீட்டுப் போ என்கிறார்.

அந்தக் குழந்தையைக் கடத்தியது யார்? ஜிவி.யுடன் கடத்தப்பட்ட குழந்தை எப்படி சம்பந்தப்படுகிறது? கேள்விகளுக்கு விடையாக எதிர்பாராத அதிரடி சஸ்பென்ஸ் கதையை தந்திருக்கிறார் இயக்குனர்
மு.மாறன்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய மாறனுக்கு இது மூன்றாவது திரைப்படம். அவரது வழக்கமான சஸ்பென்ஸ் திரில்லர் கதையே, விறுவிறுப்பில் இறக்கை கட்டிப் பறக்கும் இந்த படமும்.

நாயகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் நேர்மையான நடுத்தர குடும்ப இளைஞராக மனதில் பதிகிறார்.

முதலாளி அனுப்பிய பார்சல் தொலைந்ததும் பதறுவது, பார்சல் அல்லது பணத்தை கொடுத்து விட்டு உன் காதலியை மீட்டுப் போ என்று முதலாளி சொல்ல உள்ளூர உடைந்து போவது, காதலியை மீட்பதற்காக குழந்தை கடத்தலுக்கு சம்மதிப்பது என அந்த கேரக்டரை அழகாக நடிப்பில் சுமக்கிறார்.
கடைசியில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று முதலாளியிடம் அவர் பேசும் டயலாக், திரையரங்கில் கரகோஷம் பெற்றுத் தருகிறது.

நாயகியாக வரும் தேஜூ அஸ்வினி படம் முழுக்க நாயகன் காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறார். ஆனாலும் நடிப்பில் தனது கேரக்டரை காப்பாற்றி விடுகிறார்.

இன்னொரு நாயகனாக ஸ்ரீகாந்த் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் கவrகிறார். கடத்தப்பட்ட குழந்தையை மீட்க போராடும் காட்சிகளில் பதட்டமும் பரி தவிப்புமான தந்தையை கண் முன் நிறுத்துகிறார்.

அவரது ஜோடியாக பிந்து மாதவி கடத்தப்பட்ட தனது குழந்தைக்கான பரிதவிப்பிலும், முன்னாள் காதலன் மிரட்டலில் உடைந்து போகும் இடத்திலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், வில்லனாக வரும் லிங்கா, ஓணர் முத்துகுமார் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். ரெடின் கிங்ஸ்லி காட்சிகளில் வரும் போது சிரிப்பையும் சேர்த்துக் கொண்டு வந்து விடுகிறார்.

கோகுல் பினாயின் கேமரா கோவையை அழகாக சுற்றி மேய்ந்து இருக்கிறது. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை திரில்லர் காட்சிகளுக்கு உயிரோட்டம் தருகிறது.

இமான் இசையில் ஒத்துக்கவா பாடல் தாளமிட வைக்கிறது குழந்தை கடத்தலை மையமாக வைத்து கதை சொன்ன இயக்குனர் மு.மாறன், தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை பரபரப்பு குறையாமல் கொண்டு போகிறார். ஸ்ரீகாந்த்தும் போலீஸ் அதிகாரியும் பேசும் படத்தின் இறுதிக்காட்சி, மாண்புமிக்க மனிதனின் இன்னொரு பக்கம். கதையை கோயம்புத்தூரில் நடப்பதாக காட்டிவிட்டு அந்த ஊர் பாஷையை யாரும் பேசாதது ஏன்?